முதல் அணியாக இறுதிப் போட்டியில் நுழைந்த பாகிஸ்தான்

217

இந்த ஆண்டுக்கான T20 உலகக் கிண்ண முதல் அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியினை 7 விக்கெட்டுக்களால் வீழ்த்திய பாகிஸ்தான், T20 உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டிக்கு தெரிவாகிய முதல் அணியாக மாறியிருக்கின்றது.

T20I பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் வனிந்து முதலிடம்

2022ஆம் ஆண்டுக்கான T20 உலகக் கிண்ணத் தொடரின் முதல் அரையிறுதிப் போட்டி, சுபர் 12 சுற்றின் குழு 1 இல் முதலிடம் பெற்ற நியூசிலாந்து அணிக்கும், குழு 2 இல் இருந்து இரண்டாமிடம் பெற்ற பாகிஸ்தான் அணிக்கும் இடையே புதன்கிழமை (09) சிட்னியில் வைத்து இடம்பெற்றிருந்தது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணித்தலைவர் கேன் வில்லியம்சன் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை தமது தரப்பிற்காகப் பெற்றிருந்தார். அதன்படி போட்டியில் முதலில் துடுப்பாடிய நியூசிலாந்து அணி ஆரம்பத்தில் சிறிய தடுமாற்றம் ஒன்றை காட்டிய போதும் டேரைல் மிச்சல் மற்றும் கேன் வில்லியம்சன் ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தோடு 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 152 ஓட்டங்கள் எடுத்தது.

நியூசிலாந்து அணியின் துடுப்பாட்டம் சார்பில் அதிகபட்சமாக டேரைல் மிச்சல் தன்னுடைய 3ஆவது T20i அரைச் சதத்தோடு 35 பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் 3 பௌண்டரிகள் அடங்கலாக 53 ஓட்டங்களைப் பெற, கேன் வில்லியம்சன் 42 பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் ஒரு பௌண்டரி அடங்கலாக 46 ஓட்டங்கள் பெற்றார்.

மறுமுனையில் பாகிஸ்தான் பந்துவீச்சு சார்பில் சஹீன் அப்ரிடி 2 விக்கெட்டுக்களைச் சாய்க்க, மொஹமட் நவாஸ் ஒரு விக்கெட்டினை சுருட்டியிருந்தார்.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 153 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய பாகிஸ்தான் அணி போட்டியின் வெற்றி இலக்கை பாபர் அசாம் மற்றும் மொஹமட் ரிஸ்வான் ஆகியோரின் அபார துடுப்பாட்டத்தோடு 19.1 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 153 ஓட்டங்களுடன் அடைந்தது.

பல குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரிக்கும் இலங்கை கிரிக்கெட்!

பாகிஸ்தான் அணியின் வெற்றியினை உறுதி செய்த வீரர்களில் பாபர் அசாம் – மொஹமட் ரிஸ்வான் ஜோடி முதல் விக்கெட் இணைப்பாட்டமாக 105 ஓட்டங்களைப் பகிர்ந்தது. இதில் பாபர் அசாம் தன்னுடைய 30ஆவது T20i அரைச்சதத்தோடு 42 பந்துகளில் 7 பௌண்டரிகள் அடங்கலாக 53 ஓட்டங்கள் எடுத்தார். மறுமுனையில் மொஹமட் ரிஸ்வான் தன்னுடைய 23ஆவது T20i அரைச்சதத்துடன் 43 பந்துகளுக்கு 5 பௌண்டரிகள் அடங்கலாக 57 ஓட்டங்கள் எடுத்து தனது தரப்பின் வெற்றியினை உறுதி செய்தார்.

போட்டியின் ஆட்டநாயகன் விருது பாகிஸ்தான் வீரர் மொஹமட் ரிஸ்வானுக்கு வழங்கப்பட்டது.

அதேநேரம் T20 உலகக் கிண்ணத்தின் அடுத்த அரையிறுதிப் போட்டி வியாழக்கிழமை (10) இங்கிலாந்து – இந்திய அணிகள் இடையில் நடைபெறவுள்ளது.

போட்டியின் சுருக்கம்

நியூசிலாந்து – 152/4 (20) டேரைல் மிச்சல் 53(35)*, கேன் வில்லியம்சன் 46(42), சஹீன் அப்ரிடி 24/2(4)

பாகிஸ்தான் – 153/3 (19.1) மொஹமட் ரிஸ்வான் 57(43), பாபர் அசாம் 53(42), ட்ரென்ட் போல்ட் 33/2(4)

முடிவு – பாகிஸ்தான் 7 விக்கெட்டுக்களால் வெற்றி

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<