2022ஆம் ஆண்டுக்கான T20 உலகக் கிண்ணத் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியினை இங்கிலாந்து 10 விக்கெட்டுக்களால் வீழ்த்தியிருப்பதுடன், T20 உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கு தெரிவாகும் இரண்டாவது அணியாகவும் மாறுகின்றது.
>> இலங்கை – ஆப்கானிஸ்தான் ஒருநாள் தொடரில் இந்திய நடுவர்
அதோடு இந்த வெற்றியுடன் 2016ஆம் ஆண்டின் பின்னர் T20 உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டி ஒன்றுக்கும் இங்கிலாந்து முதல் தடவையாக தெரிவாகியிருக்கின்றது. மறுமுனையில் இப்போட்டியில் தோல்வியடைந்த இந்தியா T20 உலகக் கிண்ணத் தொடரில் இருந்து வெளியேறுகின்றது.
T20 உலகக் கிண்ணத் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டி முன்னதாக அடிலைட் நகரில் ஆரம்பமாகியிருந்தது. தீர்மானம் கொண்ட இப் போட்டிக்கு T20 உலகக் கிண்ண சுபர் 12 சுற்றுப் போட்டிகளுக்கான குழு 1 இல் இரண்டாம் இடம் பெற்ற இங்கிலாந்தும், குழு 2 இல் முதலாமிடம் பெற்ற இந்தியாவும் தெரிவாகியிருந்தன.
தொடர்ந்து போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணித்தலைவர் ஜோஸ் பட்லர் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை இந்திய வீரர்களுக்கு வழங்கினார்.
அதன்படி போட்டியில முதலில் துடுப்பாடிய இந்திய அணிக்கு KL ராகுல் சிறந்த ஆரம்பத்தை வழங்காத போதும் அணித்தலைவரான ரோஹிட் சர்மா நிலையான ஆரம்பத்தை வழங்கியிருந்தார். தொடர்ந்து இந்திய அணியின் இரண்டாம் விக்கெட்டாக ஆட்டமிழந்த ரோஹிட் சர்மா கிறிஸ் ஜோர்டனின் பந்துவீச்சில் ஆட்டமிழந்து 4 பௌண்டரிகள் அடங்கலாக 27 ஓட்டங்கள் பெற்றிருந்தார்.
இதனை அடுத்து சூர்யகுமார் யாதவ் (14) ஏமாற்றம் தந்த போதும் விராட் கோலி மற்றும் ஹார்திக் பாண்டியா ஆகியோர் இந்திய அணியினை பலப்படுத்தியதோடு அவர்கள் நான்காம் விக்கெட் இணைப்பாட்டமாக 61 ஓட்டங்களையும் பகிர்ந்தனர்.
பின்னர் இந்திய அணியின் நான்காம் விக்கெட்டாக ஆட்டமிழந்த விராட் கோலி தன்னுடைய 37ஆவது T20I அரைச்சதத்துடன் 40 பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் 4 பௌண்டரிகள் அடங்கலாக 50 ஓட்டங்கள் பெற்றிருந்தார்.
கோலியை அடுத்து பின்வரிசையில் அதிரடி காட்டிய ஹார்திக் பாண்டியாவின் அதிர ஆட்டத்தோடு இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 168 ஓட்டங்கள் எடுத்தது.
இந்திய அணியின் துடுப்பாட்டம் சார்பில் ஹார்திக் பாண்டியா தன்னுடைய 03ஆவது T20I அரைச்சதத்துடன் 5 சிக்ஸர்கள் மற்றும் 4 பௌண்டரிகள் அடங்கலாக 33 பந்துகளில் 63 ஓட்டங்கள் பெற்றார்.
மறுமுனையில் இங்கிலாந்து பந்துவீச்சு சார்பில் கிறிஸ் ஜோர்டன் 3 விக்கெட்டுக்களையும், ஆதில் ரஷீட் மற்றும் கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதமும் சாய்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
>> முதல் அணியாக இறுதிப் போட்டியில் நுழைந்த பாகிஸ்தான்
பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 169 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய இங்கிலாந்து கிரிக்கெட் அணி போட்டியின் வெற்றி இலக்கினை அதன் ஆரம்பவீரர்களான அணித்தலைவர் ஜோஸ் பட்லர் மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகியோரின் அதிரடியோடு விக்கெட் இழப்பின்றி வெறும் 16 ஓவர்களில் 170 ஓட்டங்களுடன் அடைந்தது.
இங்கிலாந்து அணியின் வெற்றியினை உறுதி செய்த அதன் துடுப்பாட்டவீரர்களில் அலெக்ஸ் ஹேல்ஸ் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து 47 பந்துகளில் 7 சிக்ஸர்கள் மற்றும் 4 பௌண்டரிகள் அடங்கலாக 86 ஓட்டங்கள் பெற, ஜோஸ் பட்லர் 49 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 9 பௌண்டரிகள் அடங்கலாக 80 ஓட்டங்கள் எடுத்திருந்தார்.
அத்தோடு 169 ஓட்டங்கள் என்கிற இந்த வெற்றி இலக்கினை விக்கெட் இழப்பின்றி விரட்டிய இங்கிலாந்து கிரிக்கெட் அணி T20 உலகக் கிண்ணப் போட்டிகள் வரலாற்றில் விக்கெட் இழப்பின்றி அதிகூடிய வெற்றி இலக்கை ஒன்றை விரட்டிய அணியாகவும் சாதனை படைத்திருக்கின்றது.
போட்டியின் ஆட்டநாயகனாக இங்கிலாந்து அணியின் அலெக்ஸ் ஹேல்ஸ் தெரிவாகினார். இப்போட்டியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து T20 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (13) பாகிஸ்தானை எதிர்கொள்கின்றது.
போட்டியின் சுருக்கம்
இந்தியா – 168/6 (20) ஹார்திக் பாண்டியா 63(33), விராட் கோலி 50(40), கிறிஸ் ஜோர்டன் 43/3(4)
இங்கிலாந்து – 170/0 (16) அலெக்ஸ் ஹேல்ஸ் 86(47)*, ஜோஸ் பட்லர் 80(49)*
முடிவு – இங்கிலாந்து 10 விக்கெட்டுக்களால் வெற்றி
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<