இலங்கை கிரிக்கெட் அணி இந்த ஆண்டு ஆரம்பமாகவுள்ள ஐசிசி T20 உலகக்கிண்ண முதல் சுற்றில், குழு Aயில் இடம்பிடித்துள்ளதுடன், அயர்லாந்து, நமீபியா மற்றும் நெதர்லாந்து அணிகளை எதிர்கொள்ளவுள்ளது.
ஐசிசி T20 உலகக்கிண்ணத்தை இம்முறை இந்திய கிரிக்கெட் சபையானது, ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஓமான் ஆகிய நாடுகளுடன் இணைந்து நடத்தவுள்ளது.
இந்திய தொடரிலிருந்து வெளியேற்றப்படும் குசல் பெரேரா!
குறித்த இந்த தொடர் ஒக்டோபர் 17ம் திகதி முதல் நவம்பர் 14ம் திகதிவரை நடைபெறவுள்ளது. தொடருக்கான குழுக்கள் கடந்த மார்ச் 20ம் திகதியின் T20I தரவரிசையின் படி அமைக்கப்பட்டுள்ளன.
அதன்படி, முதல் சுற்றில் A குழுவில் பங்கேற்கவுள்ள இலங்கை அணியானது, அயர்லாந்து, நெதர்லாந்து மற்றும் நமீபியா அணிகளை எதிர்கொள்ளவுள்ளது. அதேநேரம், முதல் சுற்றில் B குழுவில் பங்களாதேஷ், ஸ்கொட்லாந்து, பப்புவா நியூகினியா மற்றும் ஓமான் அணிகள் இடம்பெற்றுள்ளன.
அதேநேரம், உலகக்கிண்ணத்தின் சுப்பர் 12 சுற்றுக்காக இரண்டு குழுக்கள் வகுக்கப்பட்டுள்ளன. அதில் குழு 1இல், இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் இடம்பெற்றுள்ளன. குறித்த இந்த குழுவில் மேலும் இரண்டு இடங்கள் உள்ள நிலையில், முதல் சுற்றுக்கான குழு Aயில் முதலிடத்தையும், B குழுவில் இரண்டாவது இடத்தை பெறும் அணிகள், குழு 1இல் இணைந்துக்கொள்ளும்.
இதனையடுத்து குழு 2இல் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் இடம்பெற்றுள்ளன. இந்த குழுவில் உள்ள மேலதிக இரண்டு இடங்களுக்கு குழு Bயில் முதலிடத்தையும், A குழுவில் இரண்டாவது இடத்தை பெறும் அணிகள் இணைக்கப்படும் என ஐசிசி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐசிசி T20I உலகக்கிண்ண போட்டிகள் டுபாய், அபு தாபி, ஷார்ஜா மற்றும் ஓமான் கிரிக்கெட் அக்கடமி மைதானங்களில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முதல் சுற்று
- குழு A – இலங்கை, அயர்லாந்து, நமீபியா, நெதர்லாந்து
- குழு B – பங்களாதேஷ், ஸ்கொட்லாந்து, பப்புவா நியூகினியா, ஓமான்
சுப்பர் 12
- குழு 1 – இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்கா, மே.தீவுகள், A1, B2.
- குழு 2 – இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து, , B1, A2
மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க…