ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஓமானில் ஆரம்பமாகவுள்ள ICC T20 உலகக் கிண்ணத் தொடரின் முதல் சுற்றில் விளையாடுவதற்கு இலங்கை அணி தயாராகிவருகின்றது.
இலங்கை அணி 2014ஆம் ஆண்டு T20 உலக சம்பியனாக மகுடம் சூடியிருந்த போதும், வெறும் 7 வருட காலப்பகுதிக்குள் முதல் சுற்றிலிருந்து தமது உலகக் கிண்ண பயணத்தை ஆரம்பிக்கவுள்ளமை, இலங்கை கிரிக்கெட்டுக்கு கிடைத்துள்ள மிகப்பெரும் பின்னடைவாகும்.
>> மீண்டும் கிரிக்கெட் ஆட தயாராக உள்ள அஞ்செலோ மெதிவ்ஸ்
முதல் சுற்று என பெயரளவில் கூறப்பட்டாலும், இதுவொரு தகுதிகாண் சுற்றாகவே பார்க்கப்படுகிறது. குறித்த இந்த முதல் சுற்றில் நமீபியா, நெதர்லாந்து மற்றும் அயர்லாந்து அணிகளை இலங்கை அணி எதிர்கொண்டு விளையாடவுள்ளது.
முதல் சுற்றில் குழு Aயில் இடம்பெற்றுள்ள இலங்கை அணி சிறந்த பிரகாசிப்பை வெளிப்படுத்தினால் மாத்திரமே, சுப்பர் 12 சுற்றுக்கு தகுதிபெறமுடியும். குழு Aயில் முதலிடத்தை இலங்கை அணி பிடிக்குமானால், சுப்பர் 12 சுற்றில், இங்கிலாந்து அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளை எதிர்கொள்ளும்.
இதேவேளை, இரண்டாவது இடத்தை பிடிக்குமானால் இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் இடம்பிடித்துள்ள குழு 2 இல் இடம்பிடிப்பதற்கான வாய்ப்பு இலங்கைக்கு உள்ளது.
T20 உலகக் கிண்ணங்களில் இலங்கை அணியின் பிரகாசிப்பு
ஐசிசி T20 உலகக் கிண்ணத்தில் மிகவும் வெற்றிகரமான அணியாக இலங்கை அணி பார்க்கப்படுகிறது. T20 உலகக் கிண்ணத்தில் 21 போட்டிகளில் வெற்றிகளை பெற்று, அதிகூடிய வெற்றிகளின் சாதனையை கைவசம் வைத்துள்ளது.
அதுமாத்திரமின்றி 2009, 2012 மற்றும் 2014 என மூன்று தடவைகள், இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இலங்கை அணி, அதிக தடவைகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய அணி என்ற பெருமையை பெற்றுக்கொண்டதுடன், 2014ஆம் ஆண்டு, இந்திய அணியை வீழ்த்தி சம்பியனாகவும் முடிசூடியது.
எனினும், அதன் பின்னர் பாரிய வீழ்ச்சி கண்ட இலங்கை அணி, 2016ஆம் ஆண்டு, முதல் சுற்றிலேயே தோல்வியடைந்து, தொடரிலிருந்து வெளியேறியதுடன், இந்த ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கிண்ணத்தில் முதல் சுற்றிலிருந்து ஆரம்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை அணியின் கடந்தகால பிரகாசிப்புகள்
T20i போட்டிகளில் இலங்கை அணியின் கடந்தகால பிரகாசிப்புகளை பார்க்கும் போது, மிகவும் மோசமானதாக அமைந்திருந்தன. குறிப்பாக இறுதியாக விளையாடிய 10 இருதரப்பு T20 தொடர்களில் இலங்கை அணி 2 தொடர்களில் மாத்திரமே வெற்றிபெற்றிருக்கின்றது. அதுமாத்திரமின்றி, இலங்கை அணியின் பிரகாசிப்புகளும் குறிப்பிடத்தக்களவு கூறுவதாக அமையவில்லை.
இதன்காரணமாக, அணியில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. அணித்தலைவர் மாற்றங்களில் இருந்து, வீரர்கள் மாற்றங்கள் வரை வெவ்வேறான மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்ட போதும், அணியின் பிரகாசிப்புகளில் பெரிதான முன்னேற்றங்கள் இல்லை.
எனினும், இலங்கை அணியின் புதிய தேர்வுக்குழுவின் தலைவராக பிரமோதய விக்ரமசிங்க நியமிக்கப்பட்ட பின்னர், இளம் வீரர்களுடன் அணியை கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்படி, புதிய தலைவராக தசுன் ஷானக நியமிக்கப்பட்டதுடன், பல இளம் வீரர்கள் அணியில் இடம்பிடித்தனர்.
கடந்த காலங்களில் தோல்விகளை மாத்திரமே கடந்துவந்த இலங்கை அணி, நடைபெற்றுமுடிந்த இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான தொடர்களில் சற்று முன்னேற்றம் கண்டிருந்தது. இந்திய அணிக்கு எதிரான T20i தொடரை 2-1 என கைப்பற்றியதுடன், தென்னாபிரிக்க அணிக்கு எதிரான T20i தொடரை இழந்திருந்தாலும், ஒருநாள் தொடரை கைப்பற்றியிருந்தது.
அத்துடன், ஓமான் அணிக்கு எதிரான தொடர் சர்வதேச தொடராக அமையாத போதும், தலைமை பயிற்றுவிப்பாளர் மிக்கி ஆர்தர் பல்வேறு விடயங்களை மாற்றியமைத்திருந்தார்.
குறிப்பாக ஓமான் தொடருக்கு முன்னதாக இலங்கை குழாம், குழாத்துக்குள்ளான மூன்று பயிற்சிப்போட்டிகளில் விளையாடியது. இதில், துடுப்பாட்ட வரிசையில் மிக முக்கிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இதுவரை காலமும், ஆரம்ப துடுப்பாட்ட வீரராக செயற்பட்ட அவிஷ்க பெர்னாண்டோவை நான்காவது வீரராக களமிறக்கியதுடன், பானுக ராஜபக்ஷ மூன்றாம் இலக்க துடுப்பாட்ட வீரரிலிருந்து, 5ஆம் இலக்க துடுப்பாட்ட வீரராக மாற்றப்பட்டார்.
துடுப்பாட்டத்தில் மாத்திரமின்றி, களத்தடுப்பு மற்றும் பந்துவீச்சு என அனைத்து பகுதிகளிலும், இலங்கை அணி பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி விளையாடியதுடன், ஓமான் தொடரையும் இலகுவாக வென்றிருந்தது. அதுமாத்திரமின்றி, பங்களாதேஷ் அணிக்கு எதிரான உவகக்கிண்ண பயிற்சிப்போட்டியிலும், இந்த மாற்றங்கள் அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவியாக இருந்தது.
தற்போது, அதிக எதிர்பார்ப்புடனும், நம்பிக்கையுடனும் T20 உலகக் கிண்ணத்துக்காக காத்திருக்கும் இலங்கை அணியுடன், முன்னாள் அணித்தலைவர் மஹேல ஜயவர்தன ஆலோசகராக இணைந்துள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக செயற்பட்ட இவர், T20 உலகக் கிண்ணத்தின் முதல் சுற்றுக்கான இலங்கை அணியின் ஆலோசகராகராக செயற்படுகின்றமை அணியின் சிறந்த முன்னேற்றத்திற்கான ஆரம்ப கட்டமாகப் பார்க்கப்படுகின்றது.
எதிர்பார்க்கப்படும் வீரர்கள்
இந்த T20 உலகக்கிண்ணத்தை பொருத்தவரை, இலங்கை அணியின் பந்துவீச்சு அதிகமாக எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக வனிந்து ஹஸரங்க மற்றும் துஷ்மந்த சமீர ஆகியோர் சிறந்த பிரகாசிப்புகளை வழங்கி வருகின்றனர்.
முக்கியமான தருணங்களில் விக்கெட்டுகளை வீழ்த்தக்கூடிய வல்லமையை இவர்கள் இருவரும் கொண்டுள்ளனர். குறிப்பாக இவர்கள் இருவரும் கடந்த 12 மாதங்களில் விளையாடிய 12 T20I போட்டிகளில் வனிந்து ஹஸரங்க 20 விக்கெட்களையும், துஷ்மந்த சமீர 15 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளனர். இவர்களுடன், புதிதாக இணைக்கப்பட்டுள்ள மாய சுழல் பந்துவீச்சாளர் மஹீஷ் தீக்ஷனவும் எதிரணிக்கு சவால் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
துடுப்பாட்டத்தை பார்க்கும் போது, இலங்கை அணியின் அனுபவ வீரர் குசல் பெரேரா அதிகம் எதிர்பார்க்கப்படும் வீரராக உள்ளார். குறிப்பாக நடந்துமுடிந்த தொடர்களில் துடுப்பாட்ட வீரர்கள் அதிகபட்சமாக சோபிக்க தவறியிருந்தனர். எனினும், உபாதையுடன் தென்னாபிரிக்க அணிக்கு எதிராக விளையாடிய குசல் பெரேரா சிறந்த துடுப்பாட்ட முறையுடன் ஓட்டங்களை குவித்திருந்தார்.
அத்துடன், இவருடைய அனுபவமும் இலங்கை அணிக்கு அதிகமாக உதவும் என்ற எதிர்பார்ப்புக்கள் உள்ளன. அதேநேரம், மத்தியவரிசையில் அவிஷ்க பெர்னாண்டோ, பானுக ராஜபக்ஷ ஆகியோர் மீது கவனம் எழுந்துள்ளதுடன், சாமிக்க கருணாரத்ன மற்றும் அணித்தலைவர் தசுன் ஷானக ஆகியோர் போட்டியை சிறப்பாக நிறைவுசெய்து கொடுப்பார்கள் என பெரிதும் நம்பப்படுகிறது.
T20 உலகக்கிண்ணத்துக்கான இலங்கை குழாம்
தசுன் ஷானக (தலைவர்), தனன்ஜய டி சில்வா (உப தலைவர்), அவிஷ்க பெர்னாண்டோ, குசல் பெரேரா, தினேஷ் சந்திமால், பானுக ராஜபக்ஷ, பெதும் நிஸ்ஸங்க, சரித் அசலங்க, வனிந்து ஹஸரங்க, சாமிக்க கருணாரத்ன, துஷ்மந்த சமீர, அகில தனன்ஜய, மஹீஷ் தீக்ஷன, பினுர பெர்னாண்டோ, லஹிரு குமார
இறுதியாக…
இலங்கை அணி கடந்த காலங்களில் வீழ்ச்சிகளை கண்டு, தொடர் தோல்விகளை தழுவினாலும், ஐசிசியின் உலகத்தொடர்களில் எதிரணிகளுக்கு ஆச்சரியத்தை கொடுக்கக்கூடிய அணி. 2019ம் ஆண்டு உலகக்கிண்ணத் தொடரில் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் களமிறங்கினாலும், சம்பியனாகிய இங்கிலாந்து அணியை அவர்களுடைய சொந்த மைதானத்தில் வீழ்த்தியிருந்தது.
இந்தநிலையில், இம்முறை உலகக் கிண்ணத்துக்கு முன்னர், உத்வேகம் கொண்ட அணியாகவும், வெற்றிகளின் நம்பிக்கையுடனும் செல்கிறது. எனவே, இம்முறை உலகக் கிண்ணத்தில் பலம் மிக்க அணியாகவும், ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் அணியாகவும் இலங்கை அணி திகழும் என்பதில் எவ்வித சந்தேகங்களும் இல்லை.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க <<