முதல் T20 உலகக் கிண்ணத்தை குறிவைத்துள்ள தென்னாபிரிக்கா

ICC T20 World Cup – 2021

359
Getty Image

ஏழாவது T20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர், கடந்த 2020ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற இருந்தது. ஆனால், கொரோனா தாக்கம் காரணமாக ஓராண்டுக்கு போட்டி ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில், கடந்த ஆண்டு நடைபெறவிருந்த T20 உலகக் கிண்ணத் தொடர் ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஓமானில் கடந்த 17ஆம் திகதி ஆரம்பமாகியது.

மொத்தம் 16 அணிகள் பங்குபெறும் இம்முறை T20 உலகக் கிண்ணத் தொடரில் ஏற்கனவே 8 அணிகள் நேரடியாக சுப்பர் 12 சுற்றுக்கு தகுதிபெற்றுள்ள நிலையில், மீதமுள்ள 4 இடங்களுக்கான தகுதிகாண் சுற்றுப் போட்டிகள் கடந்த 17ஆம் திகதி முதல் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், இம்முறை T20 உலகக் கிண்ணத்தில் பிரபல அணிகளில் ஒன்றாக கருதப்படும் தென்னாபிரிக்க அணி, இந்த ஆண்டு T20 உலகக் கிண்ணத்தில் நேரடியாக சுப்பர் 12 சுற்றுக்கு தகுதிபெற்றுள்ள நிலையில், முதலாவது குழுவில் அவுஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் போன்ற முன்னணி அணிகளுக்கு எதிராக விளையாடவுள்ளது.

இரண்டாவது முறை T20 உலகக் கிண்ண சம்பியனாகுமா இந்தியா?

குறித்த இந்தக் குழுவில் முதல் சுற்றின் A குழுவில் முதலிடத்தை பெறும் அணி மற்றும் B குழுவில் இரண்டாவது இடத்தை பெறும் அணிகள் விளையாடும்.

எனவே, இம்முறை T20 உலகக் கிண்ணத்தில் களமிறங்கவுள்ள டெம்பா பவுமா தலைமையிலான தென்னாபிரிக்க அணியின் பலம், பலவீனங்கள் என்ன?, கடந்தகால வெற்றிகள் மற்றும் T20 உலகக் கிண்ணத்துக்கான தயார்படுத்தல்கள் உள்ளிட்ட முக்கிய விடயங்களை இந்த சிறப்புக் கட்டுரையில் பார்ப்போம்.

T20 உலகக் கிண்ணங்களில் தென்னாபிரிக்க அணியின் பிரகாசிப்பு

1909 இல் ஐசிசி இன் உறுப்புரிமையைப் பெற்று கிட்டத்தட்ட 100 ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட்டில் முன்னணி அணிகளில் ஒன்றாக வலம்வருகின்ற தென்னாபிரிக்க அணியால் இதுவரை ஐசிசி இனால் நடத்தப்பட்ட எந்தவொரு முக்கியமான சம்பியன் பட்டங்களையும் வெல்ல முடியவில்லை.

அதிலும் குறிப்பாக, 2007ஆம் ஆண்டு சொந்த மண்ணில் நடைபெற்ற அங்குரார்ப்பண T20 உலகக் கிண்ணத் தொடரிலிருந்தே தென்னாபிரிக்கா அணியும் விளையாடி வருவதுடன், T20 வடிவத்தில் ஒரு முன்னோடி அணியாகவும் அந்த அணி இருந்து வருகிறது. ஆனாலும், இதுவரை இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை பெற்றுக்கொள்ளவில்லை.

இதற்கு முதல் இரண்டு தடவைகள் அரையிறுதிக்கு தகுதிபெற்றும் இறுதிப் போட்டிக்கான வாய்ப்பு தென்னாபிரிக்க அணிக்கு கிடைக்கவில்லை.

இதில் 2009இல் பாகிஸ்தானுக்கு எதிராகவும், 2014இல் இந்தியாவுக்கு எதிராகவும் தென்னாபிரிக்க அணி தோல்வியைத் தழுவியது.

அதேநேரம், தென்னாபிரிக்க அணி இதுவரை, T20 உலகக் கிண்ணத்தில் 30 போட்டிகளில் விளையாடியுள்ளதுடன், 18 வெற்றிகளையும், 12 தோல்விகளையும் சந்தித்துள்ளது.

கடந்தகால பிரகாசிப்புகள்

அடிக்கடி தலைமைத்துவத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்ற தென்னாபிரிக்க அணியின் கடந்தகால பிரகாசிப்புக்களை எடுத்துக்கொண்டால் ஓரளவு முன்னேற்றம் கண்டுள்ளது.

இதில் உலக T20 தரவரிசையில் 5ஆவது இடத்தில் உள்ள தென்னாபிரிக்க அணி, இறுதியாக நடைபெற்ற ஐந்து T20 தொடர்களில் இலங்கை (3-0), அயர்லாந்து (3-0), மேற்கிந்திய தீவுகள் (3-2) அணிகளுடன் வெற்றியீட்டியது.

எனினும், பாகிஸ்தானுடன் சொந்த மண்ணிலும் (3-1), பாகிஸ்தானிலும் நடைபெற்ற (2-1) என இரண்டு T20 தொடர்களில் தோல்வியைத் தழுவியது.

இதில் 2020இல் விளையாடிய அனைத்து T20 தொடர்களிலும் தென்னாபிரிக்க அணி தோல்வியைத் தழுவியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக பாப் டு பிளெசிஸுக்குப் பிறகு தென்னாபிரிக்க அணியின் தலைவர் பதவியை ஏற்றுக்கொண்ட டெம்பா பவுமா, அண்மையில் நடைபெற்ற T20 தொடர்களில் சிறப்பான முறையில் அணியை வழிநடத்தியிருந்ததுடன், வெற்றிகளையும் பெற்றுக்கொடுத்துள்ளார்.

இறுதியாக கடந்த மாதம் நடைபெற்ற இலங்கை அணியுடனான T20 தொடரை 3-0 என தென்னாபிரிக்க அணி கைப்பற்றி அசத்தியது. இந்த வெற்றியானது தென்னாபிரிக்க அணிக்கு இம்முறை T20 உலகக் கிண்ணத்தில் சாதகத்தைக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எதிர்பார்க்கப்படும் வீரர்கள்

இம்முறை T20 உலகக் கிண்ணத் தொடரில் தென்னாபிரிக்க அணி குழு 1 இல் விளையாடுகிறது.

T20 வடிவத்தைப் பொறுத்தமட்டில் தென்னாபிரிக்கா வீரர்கள் அண்மைக்காலமாக பிராகாசித்து வருவதை அவதானிக்கலாம்.

தென்னாபிரிக்கா அணியை டெம்பா பவுமா தலைமையேற்று வழிநடத்தவுள்ளார். நெருக்கடியான சூழ்நிலையில் சிறந்த முடிவை எடுக்கும் டெம்பாவின் தலைமைப் பண்பு தவிர்க்க முடியாதது.

எனினும், அண்மையில் நிறைவடைந்த இலங்கை அணியுடனான ஒருநாள் தொடரின் போது கைவிரல் உபாதைக்குள்ளாகிய அவர், மேலதிக சிகிச்சைக்காக நாடு திரும்பினார். இதனால் இலங்கையுடனான T20 தொடரில் விளையாடும் வாய்ப்பு அவருக்கு கிடைக்கவில்லை.

எவ்வாறாயினும், தற்போது காயத்திலிருந்து குணமடைந்துள்ள அவர், T20 உலகக் கிண்ணத்துக்கு முன்னோடியாக ஆப்கானிஸ்தான் அணியுடன் கடந்த 18ஆம் திகதி நடைபெற்ற பயிற்சிப் போட்டியில் களமிறங்கி 31 ஓட்டங்களைப் பெற்று அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தார்.

இதுஇவ்வாறிருக்க, இம்முறை T20 உலகக் கிண்ணத் தொடரில் தென்னாபிரிக்க வீரர்களின் விளையாட்டு சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் குயின்டன் டி கொக், எய்டன் மார்க்கரம், ரஸ்ஸி வான் வென்டர் டஸன் மற்றும் ரீஷா ஹென்ட்ரிக்ஸ் போன்ற வீரர்கள் அந்த அணிக்கு துடுப்பாட்டத்தில் வலுச்சேர்க்கவுள்ளனர்.

இதில் ஐசிசி T20 துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையில் குயிண்டன் டி கொக் 8ஆவது இடத்திலும் ஏனைய 3 வீரர்களும் முதல் 20 இடங்களுக்குள்ளும் இடம்பிடித்துள்ளனர்.

இதில் இறுதியாக நடைபெற்ற இலங்கை அணியுடனான T20 தொடரிலும் இந்த வீரர்கள் துடுப்பாட்டத்தில் பிராகாசித்திருந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

இதனால், இந்த நான்கு வீரர்களினதும் அண்மைக்கால திறமைகள் நிச்சயம் இம்முறை T20 உலகக் கிண்ணத்தில் தென்னாபிரிக்க அணிக்கு மிகப்பெரிய பலத்தைக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சவால்களுடன் T20 உலகக் கிண்ணத்தை இலக்கு வைக்கும் நியூசிலாந்து

அதேபோன்று, T20 உலகக் கிண்ண பயிற்சிப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக 187 என்ற வெற்றி இலக்கை வெறும் 4 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் எட்டிப் பிடித்து தமது தயார்படுத்தலை சிறந்த முறையில் காண்பித்துள்ளது தென்னாபிக்க அணி.

மேலும், அண்மைக்காலமாக IPL தொடரில் தொடர்ச்சியாக விளையாடி வருகின்ற அனுபவ வீரரான டேவிட் மில்லர், மத்திய வரிசையில் தென்னாபிரிக்க அணிக்கு வலுச்சேர்க்கவுள்ளார்.

மறுபுறத்தில் தென்னாபிரிக்காவின் வேகப் பந்துவீச்சாளர்கள் சிறந்த போர்மில் இருக்கின்றனர். குறிப்பாக IPL தொடரில் அண்மைக்காலமாக விளையாடி வருகின்ற காகிஸோ ரபாடா, லுங்கி என்கிடி மற்றும் அன்ரிச் நோர்கியா ஆகியோர் எதிரணி வீரர்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலைக் கொடுப்பார்கள்.

அதேபோல, சுழல்பந்துவீச்சை பொறுத்தவரை அந்த அணியின் துரும்புச்சீட்டாக தப்ரைஸ் ஷம்ஸி உள்ளார்.

ஐசிசி T20 பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் முதலிடத்தில் உள்ள அவர், ஐக்கிய அரபு இராச்சியத்தில் உள்ள ஆடுகளங்களில் நிச்சயம் பிரகாசிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்துடன், இலங்கைக்கு எதிராக T20 அறிமுகத்தைப் பெற்றுக்கொண்ட சுழல் பந்துவீச்சாளர் கேஷவ் மஹராஜ் முதல் தடவையாக T20 உலகக் கிண்ணத்துக்கான தென்னாபிரிக்க அணியில் இடம்பிடித்துள்ளார்.

எனவே, இவர்கள் இருவரின் பந்துவீச்சு தென்னாபிரிக்க அணிக்கு உறுதுணையாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

இதேவேளை, இலங்கையுடனான ஒருநாள் தொடரில் அறிமுகத்தைப் பெற்றுக்கொண்ட சுழல் பந்துவீச்சாளரான ஜோர்ஜ் லிண்டே T20 உலகக் கிண்ணத்துக்கான மேலதிக வீரராக பெயரிடப்பட்டுள்ளார்.

இதுஇவ்வாறிருக்க, டெம்பா பவுமா தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள தென்னாபிரிக்க அணியில் முன்னாள் தலைவர் பாப் டு பிளெசிஸ், நட்சத்திர சுழல்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிர் மற்றும் சகலதுறை வீரர் கிறிஸ் மொரீஸ் ஆகிய வீரர்கள் இணைத்துக் கொள்ளப்படவில்லை. இது அந்த அணிக்கு ஓரளவு பாதகத்தை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகின்றது.

தென்னாபிரிக்க குழாம்

டெம்பா பாவுமா (தலைவர்), கேசவ் மஹாராஜ், குயின்டன் டி கொக், பிஜோர்ன் போர்டுயின், ரீஷா ஹென்ட்ரிக்ஸ், ஹென்ரிச் கிலாசன், எய்டன் மர்க்ரம், டேவிட் மில்லர், தப்ரைஸ் ஷம்ஸி, விலான் முல்டர், லுங்கி என்கிடி, அன்ரிச் நோர்கியா, ட்வைன் பிரிட்டோரியஸ், காகிஸோ ரபாடா, ரஸ்ஸி வான் வென்டர் டஸன்

மேலதிக வீரர்கள்: எண்டைல் பெஹெலுக்வாயோ, பெஹ்லுக்வயோ, ஜோர்ஜ் லிண்டே, லிசாட் வில்லியம்ஸ்.

இறுதியாக

தொடர்ச்சியாக ஏழாவது தடவையாக தென்னாபிரிக்க அணி, இம்முறை T20 உலகக் கிண்ணத் தொடரில் பங்கேற்கிறது. எனினும், இம்முறை அணியானது மிகப் பெரிய எதிர்பார்ப்புகளுடனேயே ஐக்கிய அரபு இராட்சியத்திற்கு சென்றுள்ளது.

மீண்டும் T20 King ஆகும் கனவுடன் உள்ள பாகிஸ்தான்

எனவே, கிரிக்கெட்டில் ஒரு சம்பியன் பட்டத்தை வெல்ல வேண்டும் என்ற தென்னாபிரிக்க அணியின் நீண்டநாள் கனவு இந்த ஆண்டு T20 உலகக் கிண்ணத்தில் நனவாகுமா என்பதைப் பொறுத்து இருந்து பார்ப்போம்.

தென்னாபிரிக்க அணியின் போட்டி அட்டவணை

  • எதிர் அவுஸ்திரேலியா – ஒக்டோபர் 23 – டுபாய்
  • எதிர் மேற்கிந்திய தீவுகள் – ஒக்டோபர் 26 – டுபாய்
  • எதிர் தகுதிகாண் சுற்று A பிரிவு முதலிடம் பெறும் அணி – ஒக்டோபர் 30 – சார்ஜா
  • எதிர் தகுதிகாண் சுற்று B பிரிவு முதலாமிடம் பெறும் அணி – நவம்பர் 02 – அபுதாபி
  • எதிர் இங்கிலாந்து அணி – நவம்பர் 06 – சார்ஜா

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<