T20 உலகக்கிண்ணத்தில் அதிர்ச்சிக்கொடுக்க காத்திருக்கும் ஆப்கானிஸ்தான்

ICC Men’s T20 World Cup 2021

362

ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஓமானில் இம்முறை நடைபெற்றுவரும் ஐசிசி T20 உலகக்கிண்ணத்தில் எதிரணிகளுக்கு அதிர்ச்சிக்கொடுக்கக்கூடிய அணியாக அதிகம் எதிர்பார்க்கப்படும் அணி ஆப்கானிஸ்தான்.

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி கடந்த காலங்களாக அடைந்துவரும் முன்னேற்றங்கள் மிகவும் அபரிமிதமானது. முன்னணி அணிகளுக்கு சவால்கள் கொடுக்கக்கூடிய வீரர்களை ஆப்கானிஸ்தான் அணி கொண்டிருக்கிறது.

சுபர் 12 சுற்றுக்கு முன் இலங்கைக்கு உள்ள இறுதி சவால் நெதர்லாந்து

அதனை கடந்த காலத்தில் அவர்கள் விளையாடிய போட்டிகளில் காண முடிகின்றது. குறிப்பாக போட்டிகளில் ஆப்கானிஸ்தான் அணி மிகப்பெரிய அணிகளுக்கு எதிராக தோல்விகளை பெற்றிருந்தாலும், குறித்த போட்டிகளில் அவர்கள் வெளிப்படுத்தும் போராட்டமான ஆட்டம், முன்னணி அணிகளுக்கும் மிகப்பெரிய சவாலாகவே உள்ளது.

தங்களுடைய 5வது T20  உலகக்கிண்ணத்தில் விளையாடவுள்ள ஆப்கானிஸ்தான் அணி முதன்முறையாக, இந்த ஆண்டு சுபர் 12 சுற்றுக்கு நேரடி தகுதியினை பெற்றிருக்கிறது. சுபர் 12 சுற்றில் குழு இரண்டில் இடம்பெற்றுள்ள ஆப்கானிஸ்தான் அணி இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து மற்றும் ஸ்கொட்லாந்து அணிகளை எதிர்கொள்ளவுள்ளதுடன், முதல் சுற்றிலிருந்து மேலும் ஒரு அணி இந்த பட்டியலில் இடம்பெறும்.

எனவே, இம்முறை நேரடி தகுதியை பெற்றுள்ள ஆப்கானிஸ்தான் அணி, எதிரணிகளுக்கு இலகுவான வெற்றிகளை கொடுக்காது என்பது ஒருபுறமிருக்க, அதிர்ச்சி தோல்விகளை முன்னணி அணிகளுக்கு வழங்கவும் காத்திருக்கிறது.

T20 உலகக்கிண்ணங்களில் ஆப்கானிஸ்தான் அணியின் பிரகாசிப்பு

ஆப்கானிஸ்தான் அணியை பொருத்தவரை, 2016ம் ஆண்டு நடைபெற்ற T20 உலகக்கிண்ணத் தொடர், அவர்களுக்கு அதீத முன்னேற்றத்தை கொண்ட உலகக்கிண்ணமாக அமைந்திருந்தது.

முதல் சுற்றிலிருந்து முதன்முறையாக சுபர் 10 சுற்றுக்கு மூன்று வெற்றிகளுடன் தகுதிபெற்ற, ஆப்கானிஸ்தான் அணி மிகச்சிறந்த வெற்றியொன்றையும் பதிவுசெய்திருந்தது.

Courtesy – ICC

சுப்பர் 10 சுற்றில், சம்பியன்ஷ் கிண்ணத்தை வென்றிருந்த மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராகவே, தங்களுடைய முதல் சுபர் 10 வெற்றியை பதிவுசெய்திருந்தது. எனவே, இந்த வெற்றியானது, அவர்களின் T20 உலகக்கிண்ண வெற்றியில் மிகப்பெரிதாக பார்க்கப்படுகிறது.

ஒட்டுமொத்தமாக T20 உலகக்கிண்ணத்தில்14 போட்டிகளில் விளையாடியுள்ள ஆப்கானிஸ்தான் அணி, 5 போட்டிகளில் வெற்றியையும், 9 போட்டிகளில் தோல்வியையும் சந்தித்திருக்கிறது.

ஆப்கானிஸ்தான் அணியின் கடந்தகால பிரகாசிப்புகள்

ஆப்கானிஸ்தான் அணி T20I போட்டிகளில் மிகச்சிறந்த பெறுபேறுகளை கொண்டிருக்கிறது. கடைசியாக விளையாடிய 8 T20I தொடர்களில், ஒரு தொடர் தோல்வியினையும் ஆப்கானிஸ்தான் பெறவில்லை.

ஆனாலும், ஆப்கானிஸ்தான் அணியானது, டெஸ்ட் அந்தஸ்தை பெற்றுள்ள முன்னணி அணிகளுடன், அதிகமான இருதரப்பு T20I தொடர்களில் விளையாடவில்லை. குறிப்பாக,  பங்களாதேஷ், பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகளுடன் மாத்திரமே T20I தொடர்களில் விளையாடியுள்ளது.

இதில், பாகிஸ்தான் அணிக்கு எதிரான தொடரை இழந்திருந்த போதும், மேற்கிந்திய தீவுளுடனான முதல் தொடரை 3-0 என இழந்தாலும், இரண்டாவது தொடரை 2-1 என கைப்பற்றியது. அத்துடன், பங்களாதேஷ் அணிக்கு எதிரான தொடரை 3-0 என கைப்பற்றியிருந்தது.

Courtesy – ICC

ஆப்கானிஸ்தான் அணி முன்னணி அணிகளுடன் அதிகமான போட்டிகளில் விளையாடாவிட்டாலும், மிகச்சிறந்த பிரகாசிப்புக்களுடன் முன்னேறி வருகின்றது. எனவே, வெற்றிகளின் பலத்துடன், உலகக்கிண்ணத்துக்கு முன்னேறியுள்ளதால், அவர்களின் நம்பிக்கை மட்டம் அதிகமாக காணப்படும்.

எதிர்பார்க்கப்படும் வீரர்கள்

ஆப்கானிஸ்தான் அணியின் துடுப்பாட்டத்தை பொருத்தவரை அதிகமாக எதிர்பார்க்கப்படும் வீரர், ரஹ்மானுல்லாஹ் குர்பாஸ். இளம் வீரராக இருந்தாலும், 9 இன்னிங்ஸ்களில் 34.77 என்ற ஓட்ட சராசரியுடனும், 148.84 என்ற ஓட்ட வேகத்துடன், 313 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்துள்ளார்.

அதுமாத்திரமின்றி T20I போட்டிகளில், ஆப்கானிஸ்தான் அணிக்காக கடந்த இரண்டு வருடங்களில், இவர் மாத்திரமே 2 அரைச்சதங்களை கடந்துள்ளார். எனவே, இவர் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளதுடன், நஜிபுல்லாஹ் ஷட்ரான், அஸ்கர் ஆப்கான் ஆகிய வீரர்களும் முக்கியமான துடுப்பாட்ட வீரராக உள்ளனர்.

பந்துவீச்சை பொருத்தவரை எந்தவித சந்தேகங்களும் இன்றி, ரஷீட் கான், ஆப்கானிஸ்தான் அணியின் துறுப்பு சீட்டாக இருப்பார். இவர், ஆப்கானிஸ்தான் அணிக்காக மாத்திரமின்றி, சர்வதேசத்தில் நடைபெறும் அனைத்து முதன்மை T20 லீக் தொடர்களிலும் திறமையை வெளிப்படுத்தி வருகின்றார்.

T20I போட்டிகளை எடுத்துக்கொண்டாலும், 50 போட்டிகளில் ஆப்கானிஸ்தான் அணிக்காக விளையாடியுள்ள இவர், 93 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இவருடைய சுழல் பந்துவீச்சு எதிரணிகளுக்கு மிகவும் தடுமாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய ஒன்று. எனவே, ஆப்கானிஸ்தான் அணிக்கு இவரது பங்களிப்பு, மிகவும் முக்கியமாகும்.

ஆப்கானிஸ்தான் குழாம்

மொஹமட் நபி (தலைவர்), அஸ்கர் ஆப்கான், பரீட் அஹ்மட், குல்பதீன் நயீப், ஹமிட் ஹஷன், ஹஸ்மதுல்லாஹ் ஷஹிடி, ஹஸரதுல்லாஹ் ஷஷாய், கரீம் ஜனாட், மொஹமட் சேஷார்ட், முஜீப் உர் ரஹ்மான், நஜிபுல்லாஹ் ஷட்ரான், நவீன் –உல்-ஹக், ரஹ்மானுல்லாஹ் குர்பாஸ், ரஷீட் கான், உஸ்மான் கஹானி

இறுதியாக…

ஐசிசி T20 உலகக்கிண்ணத்தை எந்த அணிகளும் இலகுவாக எடுத்துக்கொள்ள முடியாது. ஒவ்வொரு அணிகளும் தனித்துவமான திறமைகளை கொண்ட அணிகள். குறிப்பாக, அன்றைய நாளில் பிரகாசிக்கும் அணிகள் வெற்றிகளுக்கு சொந்தக்காரர் ஆவர். எனவே, ஆப்கானிஸ்தான் அணியை எந்த அணிகளும் இலகுவாக எடுத்துக்கொள்ளப்போவதில்லை.

ஆப்கானிஸ்தான் அணியின் வீரர்கள் குறைந்த T20I போட்டிகளில் மாத்திரம் விளையாடியிருந்தாலும், சர்வதேசத்தில் நடைபெறும் முன்னணி லீக் தொடர்களில் தங்களுடைய திறமையை வெளிப்படுத்திய அனுபவத்தை கொண்டுள்ள வீரர்கள்.

முன்னணி அணிகளுக்கு எதிராக, மிகவும் பலமான ஆட்டத்தை வெளிப்படுத்தி, வெற்றிகளை பெறக்கூடிய பலம் அவர்களிடம் உள்ளது. எனவே, இம்முறை உலகக்கிண்ணத்தில், எதிரணிகளுக்கு அதிர்ச்சிக்கொடுக்கும் அணியாக ஆப்கானிஸ்தான் அணி இருக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க…