கொரோனா வைரஸ் ஆபத்து குறைந்து வருவதன் காரணமாக, கடந்த மார்ச் மாதத்தில் இருந்து உலகம் முழுவதும் தடைப்பட்ட கிரிக்கெட் போட்டிகளை மீள ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
>> பந்துகளில் எச்சிலிடுவதை தடைசெய்ய தயாராகும் ஐசிசி!
இந்நிலையில் கிரிக்கெட் போட்டிகளையும், அதற்கான பயிற்சிகளையும் மீள ஆரம்பிக்க எத்தனிக்கும் தமது அங்கத்துவ நாடுகளுக்கு, சர்வதேச கிரிக்கெட் வாரியமானது (ஐ.சி.சி.) சில முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியிருக்கின்றது.
இந்த அறிவுறுத்தல்களை ஆவண (Document) வடிவில் வெளியிட்டுள்ள ஐ.சி.சி., குறித்த அறிவுறுத்தல்களை பின்பற்றும் தமது அங்கத்துவ நாடுகள் ஒரு ஒழுங்குமுறைக்கு அமைய கிரிக்கெட் போட்டிகளையும், பயிற்சிகளையும் மீள ஆரம்பிக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றது.
இந்த அறிவுறுத்தல்களில் மிக முக்கியமான விடயமாக ஐ.சி.சி. கிரிக்கெட் விளையாடும் நாடுகள் தங்களது வீரர்களுக்காக ஒரு வைத்திய அதிகாரியை அல்லது உயிரியல் பாதுகாப்பு அதிகாரியை நியமிக்க வேண்டியிருப்பதை சுட்டிக்காட்டியிருக்கின்றது. இவ்வாறு நியமிக்கப்படுகின்ற குறித்த அதிகாரி வீரர்கள் கிரிக்கெட் பயிற்சிகளில் ஈடுபடுகின்ற சந்தர்ப்பத்தில் அவர்களுக்கு சுகாதார ஆலோசனைகள் வழங்குவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றார்.
இதேநேரம், குறித்த ஒரு நாட்டு அணி கிரிக்கெட் சுற்றுத் தொடருக்காக வெளிநாடு செல்ல முன்னர், குறித்த சுற்றுத் தொடரில் பங்கெடுக்கும் அவ்வணி வீரர்களுக்காக 14 நாட்கள் கொண்ட தனிமைப்படுத்தல் பயிற்சி முகாமொன்றை அமைத்து வீரர்களின் உடல் வெப்பநிலையில் ஏற்படும் மாற்றங்கள் தொடர்பில் கவனம் செலுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கின்றது.
>> சங்கக்காரவுடன் பிறந்த நாளைக் கொண்டாடிய மிக்கி ஆத்தர்
அதேவேளை, கிரிக்கெட் பயிற்சிகளுக்காக நாடுகள் வழங்கும் இடங்கள் (குறிப்பாக மைதானங்கள், உள்ளக அரங்குகள்) சமூக இடைவெளி, ஏனைய பொருத்தமான வசதிகள் என்பவற்றோடு பாதுகாப்புடன் இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுமாறும் ஐ.சி.சி. வேண்டிக்கொள்கின்றது.
கிரிக்கெட் போட்டிகள் மைதானம் ஒன்றில் நடைபெறும் சந்தர்ப்பத்தில், வைத்திய உதவிகளை பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு குறிப்பிட்டிருக்கும் ஐ.சி.சி., கிரிக்கெட் போட்டிகளின் போது வீரர்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பது தொடர்பிலும் அறிவுறுத்தல்களை வழங்கியிருக்கின்றது.
இந்த அறிவுறுத்தல்களில் பந்துவீச்சாளர்கள் பந்தை மிளிர வைப்பதற்காக உமிழ்நீர் பயன்படுத்தல், வீரர்கள் பந்தை தொட்ட பின்னர் தங்கள் கண்கள், வாய், மூக்கு என்பவற்றை தொடுவது என்பன தடை செய்யப்பட்டிருக்கின்றன. இதோடு, வீரர்கள் பந்தினை தொட்ட பின்னர் அடிக்கடி தங்கள் கைகளை சுத்தப்படுத்திக் கொள்ள பணிக்கப்பட்டிருப்பதோடு, பந்தினை கையாளும் போட்டி நடுவர்களுக்கும் விஷேட கையுறைகள் வழங்கப்படவிருக்கின்றன.
கிரிக்கெட் போட்டிகளின் போது பந்துவீச்சாளர்கள் ஓவர்கள் நிறைவுக்கு வரும் சந்தர்ப்பத்தில் தொப்பிகள், பந்து துடைக்கும் துணி (Towel), மேலாடை என்பவற்றை போட்டி நடுவரிடம் மாற்றுவதும் தடை செய்யப்பட்டிருக்கின்றது.
மேலும் ஐ.சி.சி. நாடுகள் கிரிக்கெட் பயணங்களை மேற்கொள்ளும் போது, அந்தந்த நாட்டு அரசாங்கங்களினது விதிமுறைகளினை சரியான முறையில் பின்பற்ற அறிவுரை வழங்கயிருப்பதோடு, வீரர்கள் பயணம் செய்யும் விமானம், தங்குமிடங்கள் போன்றவை தொடர்பிலும் அவதானமாக இருக்க பணித்திருக்கின்றது.
அதேநேரம், தற்போது பயிற்சிகளை ஆரம்பித்திருக்கும் வீரர்கள் தங்களது பயிற்சிகளை நான்கு கட்டங்களின் அடிப்படையில் மேற்கொள்ளுமாறும் கூறப்பட்டிருக்கின்றது. இதில் ஒவ்வொரு கட்டங்களும் பயிற்சி பெறும் வீரர்களின் எண்ணிக்கை அடிப்படையில் மாற்றம் பெறும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
இதோடு, பந்துவீச்சாளர்களுக்கு ஒவ்வொரு வகைப் போட்டிகளையும் (ஒருநாள், டெஸ்ட், T20) அடிப்படையாகக் கொண்டு (குறிப்பாக வேகப் பந்துவீச்சாளர்களுக்கு) தங்களது பயிற்சிகள் தொடர்பில் விஷேட ஆலோசனைகளும் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
இறுதியாக, வீரர்கள் மைதானத்தில் விக்கெட் ஒன்றோ அல்லது வெற்றி பெறும் போதோ மேற்கொள்ளும் கொண்டாட்டங்களை (Celebrations) தவிர்த்துக்கொள்ளுமாறு குறிப்பிடும் ஐ.சி.சி., கிரிக்கெட் விளையாட்டின் ஆதரவு உத்தியோகத்தர்கள் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுக்கு ஆளாகும் அளவிற்கு உடல்ரீதியாக பலவீனமாக (அதாவது வேறு நோய்களுடன்) இருந்தால், அது தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் அறிவுறுத்தியிருக்கின்றது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<