சந்திமால், ஹத்துருசிங்க, குருசிங்க மீதான ஐ.சி.சி யின் இறுதித் தீர்ப்பு நாளை

347

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக சென்.லூசியா மைதானத்தில் இடம்பெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டத்தின் போது, சுமார் இரண்டு மணித்தியாலங்கள் போட்டியை தாமதப்படுத்திய குற்றத்திற்காக இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் தினேஷ் சந்திமால், பயிற்றுவிப்பாளர் சந்திக ஹத்துருசிங்க மற்றும் அணி முகாமையாளர் அசங்க குருசிங்க ஆகியோருக்கு எதிராக நாளை (11) விசாரணைகள் இடம்பெறவுள்ளதுடன், அதன்போது அவர்களுக்கு வழங்கப்படவுள்ள தண்டனை தொடர்பிலான இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பந்தை சேதப்படுத்தும் வீரருக்கு தண்டனை அதிகரிப்பு: ஐ.சி.சி. ஒப்புதல்

இதற்கு முன் குறித்த விசாரணைகள் இன்றைய தினம் (10) இடம்பெறவிருந்த நிலையில், அதனை நாளை வரை பிற்போடுவதற்கு ஐ.சி.சியின் ஒழுங்கு விதி ஆணைக்குழு நடவடிக்கை எடுத்ததாக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி ஏஷ்லி டி சில்வா தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் கருத்து வெளியிடுகையில், ”சந்திமால், சந்திக்க ஹத்துருசிங்க மற்றும் அசங்க குருசிங்க ஆகியோருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பிலான .சி.சியின் இறுதி முடிவு நாளைய தினம் அறிவிக்கப்படவுள்ளது. 12ஆம் திகதி தென்னாபிரிக்க அணியுடனான முதலாவது டெஸ்ட் போட்டி ஆரம்பமாகவுள்ளது. எனவே குறித்த விடயம் தொடர்பிலான விசாரணைகளை நாளைய தினம் மேற்கொண்டு தீர்ப்பு வழங்கப்படவுள்ளது” எனத் தெரிவித்தார்.

மேற்கிந்திய தீவுகளுடனான டெஸ்ட் போட்டியில் பந்தின் தன்மையை மாற்றிய குற்றச்சாட்டில் சிக்கிய இலங்கை அணித் தலைவர் தினேஷ் சந்திமாலை விசாரணை செய்த சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஒழுங்கு விதி ஆணைக்குழுவின் தலைவர் மைக்கல் பெல்ப் தலைமையிலான குழுவினால் நாளைய விசாரணைகளும் முன்னெடுக்கப்படவுள்ளது.

இதன்போது, தினேஷ் சந்திமால், சந்திக்க ஹத்துருசிங்க மற்றும் அசங்க குருசிங்கவிடம் .சி.சியினால் நியமிக்கபட்ட நீதிபதிகளினால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு இறுதித் தீர்ப்பு அறிவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அம்லா, டு ப்ளேசிஸ் ஆகியோரின் சிறந்த துடுப்பாட்டத்தோடு பயிற்சி போட்டி நிறைவு

இலங்கைமேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டத்தில் இரண்டு மணித்தியாலங்கள் மைதானத்திற்கு வராமல் போட்டியை தாமதப்படுத்திய சம்பவம் தொடர்பில் அவர்கள் மீது இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

விளையாட்டின் மகத்துவத்தை சீர்குழைக்கும் வகையில் நடந்துகொண்ட இம்மூவருக்கும், குறித்த செயல் ஐசிசி விதிமுறைப்படி மூன்றாம் நிலை குற்றம் என பதிவுசெய்யப்பட்டது.   

எனினும் முன்னதாக, பந்தின் தன்மையை மாற்றிய விவகாரம் தொடர்பாக .சி.சியினால் சந்திமாலுக்கு போட்டித் தடையும், போட்டிச் சம்பளத்தின் 100 சதவீத அபராதமும் விதிக்கப்பட்டது. இதனையடுத்து பார்படோஸில் நடைபெற்ற மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அவர் விளையாடவில்லை.  

இந்த நிலையில், குறித்த போட்டிக்கு இடையூறு ஏற்படுத்தியது தொடர்பில் முன்வைக்கப்பட்ட குற்றத்தை இந்த மூவரும் ஒப்புக்கொண்டனர். இதன் காரணமாக தினேஷ் சந்திமால், ஹத்துருசிங்க மற்றும் அசங்க குருசிங்க ஆகியோர் போட்டித் தடைக்கு முகம்கொடுக்க நேரிட்டதுடன், இதுதொடர்பிலான இறுதித் தீர்ப்பு ஜுலை 10ஆம் திகதி அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. ஆனாலும், தவிர்க்க முடியாத காரணத்தினால் குறித்த விசாரணைகள் நாளைய தினம் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

T-20 தரவரிசையில் முதல் இடத்தை பிடித்த பின்ச் : ஷமான், ராஹுல் முன்னேற்றம்

இதேநேரம், ஐசிசியின் மூன்றாம் நிலை குற்றத்தின் அடிப்படையில், வீரர் ஒருவருக்கு நான்கு தொடக்கம் எட்டு வரையிலான போட்டி இடைநிறுத்தல் புள்ளிகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் சந்திமால் போட்டி இடைநிறுத்தல் புள்ளிகளை பெறுவாராயின் அவருக்கு தென்னாபிரிக்க அணியுடன் நாளை மறுதினம் (12) ஆரம்பமாகவுள்ள டெஸ்ட் தொடரிலும், அதனைத் தொடர்ந்து நடைபெறவுள்ள ஒரு நாள் தொடரின் ஒருசில போட்டிகளிலும் விளையாடுவதற்கு தடை விதிக்கப்படலாம்.

எனவே, சந்திமால் போட்டித் தடையினை பெறுகின்ற நிலையில் தென்னாபிரிக்காவுடனான இந்த டெஸ்ட் தொடரில் இலங்கை அணியினை அனுபவமிக்க வேகப்பந்து வீச்சாளரான சுரங்க லக்மால் வழிநடாத்துவார். லக்மாலின் தலைமையிலான இலங்கை அணி பர்படோஸ் டெஸ்ட் வெற்றியுடன் மேற்கிந்திய தீவுகளுடனான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரினை 1-1 என சமநிலைப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சந்திமாலோடு சேர்த்து இலங்கை கிரிக்கெட் அணியின் முகாமையாளர் அசங்க குருசிங்க, இலங்கை அணியின் பயிற்சியாளர் சந்திக்க ஹத்துருசிங்க ஆகியோரும் போட்டியினை தாமதித்த மூன்றாம் நிலை குற்றத்தில் தாம் ஈடுபட்டதை ஒப்புக்கொண்ட நிலையில், அவர்களுக்கு தென்னாபிரிக்காவுடனான டெஸ்ட் தொடரில் பங்கேற்க தடை விதிக்கப்படலாம் என கிரிக்கெட் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பந்தை சேதப்படுத்தும் வீரருக்கு தண்டனை அதிகரிப்பு: ஐ.சி.சி. ஒப்புதல்

அப்படியானால், தென்னாபிரிக்க அணிக்கு எதிரான போட்டிகளுக்கு இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளராக இலங்கை அணியின் முன்னாள் டெஸ்ட் வீரரும், துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளருமான திலான் சமரவீர நியமிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், சர்வதேச கிரிக்கெட் பேரவையின் சட்டவிதிமுறைகளுக்கு அமைய, கிரிக்கெட் விளையாட்டின் நன்மதிப்பையும், மகத்துவத்தையும் பேணத் தவறிய குற்றச்சாட்டிலே இலங்கை அணியில் முக்கிய மூன்று பதவிகளில் உள்ளவர்களுக்கு எதிராக இவ்வாறு விசாரணைகள் இடம்பெற்று தண்டணைகள் வழங்கப்படவுள்ளன.   

எனினும், குறித்த போட்டியில் பந்தை சேதப்படுத்தியதாக எந்தவொரு ஆதாரத்தையும் முன்வைக்காமல் வெறுமனே 10 நிமிடங்களில் சந்திமாலுக்கான தண்டணை அறிவிக்கப்பட்டமை எந்தளவு தூரத்துக்கு சாதாரணம் என்பது தொடர்பில் இலங்கை கிரிக்கெட் மற்றும் ரசிகர்கள் நாளைய தீர்ப்புக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க