முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் அவிஷ்க குணவர்தனவுக்கு எதிராக எமிரேட்ஸ் கிரிக்கெட் சபை (ECB), முன்வைத்திருந்த இரண்டு விதமான ஊழல் குற்றச்சாட்டுகளையும் ஏகமனதாக நீக்குவதாக ஐசிசியின் சுயாதீன ஊழல் தடுப்பு தீர்ப்பாயம் இன்று (10) அறிவித்துள்ளது.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்ற T10 தொடரின் போது ஆட்டநிர்ணயம் செய்வது தொடர்பிலான செயற்பாடுகளில் ஈடுபட்டதாக இலங்கை அணியின் முன்னாள் வீரர் நுவான் சொய்ஸா மற்றும் ஏ அணியின் பயிற்றுவிப்பாளர் அவிஷ்க குணவர்தன ஆகியோர் மீது ஐசிசி சுமத்தியிருந்தது.
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துக்கு எதிராக அவிஷ்க குணவர்தன வழக்கு
குற்றம் சுமத்தியது மாத்திரமின்றி, விசாரணைக்காலப்பகுதியில், இவர் கிரிக்கெட் சார்ந்த விடயங்களில் ஈடுபட முடியாது எனவும் அறிவித்திருந்தது. குறித்த இந்த குற்றசாட்டை முற்றிலும் எதிர்த்திருந்த அவிஷ்க குணவர்தன, இலங்கை கிரிக்கெட் சபை அவரை பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து நீக்கியமைக்கு எதிராகவும் வழக்கு பதிவுசெய்திருந்தார்.
இவ்வாறான நிலையில், இந்த வழக்கை விசாரணை செய்துவந்த ஐசிசியின் சுயாதீன ஊழல் தடுப்பு தீர்ப்பாயம், அவிஷ்க குணவர்தனவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டிருந்த இரண்டு வகை குற்றச்சாட்டுகளை நீக்கியுள்ளதுடன், மீண்டும் இவர் கிரிக்கெட் சார்ந்த விடயங்களில் ஈடுபட அனுமதி வழங்கியுள்ளது.
அவிஷ்க குணவர்தன மீது ஐசிசி சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள்
- சரத்து 2.1.4 – சரத்து 2.1.1 இணை மீறி நடக்கும் வகையில் போட்டியில் பங்கெடுப்பவர்களை (அதாவது வீரர்களை) நேரடியான முறையிலோ அல்லது நேரடியற்ற முறையிலோ ஊக்குவித்தல், அணுகுதல், அறிவுறுத்தல் விடுத்தல்.
- சரத்து 2.4.5 – (வீரர்) ஒருவர் தவறு ஒன்று செய்ததாக இனம்காட்டப்படும் சந்தர்ப்பத்தில் (தகுந்த காரணங்கள் இன்றி அப்படியான) ஏதாவது (ஊழல்) சம்பவமொன்றிற்கு, தேவையான முழு விபரங்களையும் வெளிப்படுத்த தவறுதல்.
அதேநேரம், இதே வகை குற்றச்சாட்டு அடங்கலாக மொத்தமாக 4 குற்றச்சாட்டுகளுக்கு முகங்கொடுத்திருந்த நுவான் சொய்ஸா தொடர்பிலும், ஐசிசியின் சுயாதீன ஊழல் தடுப்பு தீர்ப்பாயம் அவதானம் செலுத்தியுள்ளது. அதன்படி, அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்டிருக்கும் ஒரு குற்றச்சாட்டை (சரத்து 2.4.6) தொடர்ந்தும் நிலுவையில் வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், நுவான் சொய்ஸாவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டிருக்கும் ஏனைய மூன்று குற்றச்சாட்டுகளை, தள்ளுபடி செய்வதற்கான நடவடிக்கைகளை ஐசிசியின் சுயாதீன ஊழல் தடுப்பு தீர்ப்பாயம் மேற்கொண்டு வருகின்றது. எனினும், குற்றச்சாட்டுக்கான மேன்முறையீடு இருக்கும் நிலையில், இதுதொடர்பிலான இறுதி தீர்மானத்தை ஐசிசி வெளியிடவில்லை.
நுவான் சொய்ஸாவுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்
- சரத்து 2.1.1 – ஏனைய தரப்பு ஒன்றுடன் ஒப்பந்தம் செய்து முறையற்ற விதத்தில் போட்டி முடிவு ஒன்றையோ அல்லது அதன் ஏனைய அம்சம் ஒன்றையோ மாற்ற முயலுதல். சரத்து 2.1.4 –
- சரத்து 2.1.1 இணை மீறி நடக்கும் வகையில் போட்டியில் பங்கெடுப்பவர்களை (அதாவது வீரர்களை) நேரடியான முறையிலோ அல்லது நேரடியற்ற முறையிலோ ஊக்குவித்தல், அணுகுதல், அறிவுறுத்தல் விடுத்தல்.
- சரத்து 2.4.4 – ஊழல் தொடர்பான விசாரணைகள் (ஐ.சி.சி. இன்) ஊழல் தடுப்பு பிரிவினால் மேற்கொள்ளப்படும் தருணத்தில், அது தொடர்பான முழுமையான விடயங்களை வெளியிட தவறுதல்.
- சரத்து 2.4.6 – (ஊழல் தொடர்பான) விசாரணைகள் ஊழல் தடுப்பு பிரிவினால் மேற்கொள்ளப்படும் போது அதற்கான ஒத்துழைப்பு வழங்க தவறுதல் அல்லது மறுத்தல்.
நுவான் சொய்ஸாவுக்கு எதிரான இந்த குற்றச்சாட்டுகள் காரணமாக, கடந்த மாதம் அவருக்கு 6 ஆண்டுகள் தடையினை, ஐசிசியின் சுயாதீன ஊழல் தடுப்பு தீர்ப்பாயம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<