பாகிஸ்தானை எச்சரித்த ICC

Asia Cup 2023

1709

ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெறுவது தொடர்பில் தொடர்ந்து இழுபறி ஏற்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தான் அணி ஒருநாள் உலகக் கிண்ணத்தில் பங்கேற்பது தொடர்பில் அந்நாட்டு கிரிக்கட் சபை எழுத்துப்பூர்வமாக எவ்வித உத்தரவாதமும் வழங்கவில்லை என சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ICC) அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

‘இந்தியா பாகிஸ்தானுக்குச் செல்வதையோ அல்லது பாகிஸ்தான் இந்தியாவுக்கு வருவதையோ அந்த நாடுகளின் கிரிக்கெட் சபைகள் முடிவு செய்யவதில்லை. அதேபோல, ICC இனால் நடத்தப்படுகின்ற போட்டித் தொடரொன்றை நடத்துவது குறித்து சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கு பாகிஸ்தான் உத்தரவாதம் அளிக்க முடியாது.

இந்திய கிரிக்கெட் சபை போன்று பாகிஸ்தானுக்கும் அந்நாட்டு அரசு அனுமதி வழங்க வேண்டும். பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அந்த நாட்டு அரசாங்கத்தின் முடிவிற்கு உட்பட்டு முடிவுகளை எடுக்கலாம் என்று சர்வதேச கிரிக்கெட் பேரவையின் அதிகாரி மேலும் தெரிவித்தார்.

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இந்தியாவில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரில் இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி ஒக்டோபர் 15ஆம் திகதி அஹமதாபாத்தில் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதேபோல, பாகிஸ்தான் அணி மோதும் போட்டிகள் அஹமதாபாத், சென்னை, ஹைதராபாத், பெங்களூர் ஆகிய நகரங்களில் நடத்தப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை, பாகிஸ்தான் முன்மொழிந்த கலப்பு வடிவில் ஆசியக் கிண்ணத்தை நடத்துவதற்கு இலங்கை, பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, ஆசியக் கிண்ணத்தை இலங்கையில் நடத்த ஆசிய கிரிக்கெட் பேரவை தீர்மானித்துள்ளதாகவும் சில தகவல்கள் குறிப்பிடுகின்றன.

பாகிஸ்தான் கிரிக்கெட் சபை, ஆசிய கிரிக்கெட் பேரவைக்கு அனுப்பி வைத்துள்ள பிரேரணையின்படி, பாகிஸ்தான் தனது ஆசிய கிண்ணப் போட்டிகளை சொந்த மைதானத்தில் ஆடும் என்பதோடு, இந்தியா தனது போட்டிகளை ஐக்கிய அரபு இராச்சியத்தில் ஆடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், இலங்கையும் பங்களாதேஷும் ”சுபர் 4” சுற்றில் ஆடும் போது பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு பயணம் செய்வதை ஆட்சேபித்து அந்தப் பிரேரணைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இது குறித்து கருத்து தெரிவித்த ஆசிய கிரிக்கெட் பேரவையின் அதிகாரி ஒருவர், ஆசியக் கிண்ணத்தை இலங்கைக்கு மாற்றினால் பாகிஸ்தான் பங்கேற்காது என்று கூறியிருந்தார்.

”ஆசியக் கிண்ணத்தை கலப்பு வடிவத்தில் நடத்துவதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் இடைக்காலத் தலைவர் நஜாத் சேத்தி அனைத்து நாடுகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். ஆனால் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் இடையே பயணம் செய்வது அணிகளுக்கு எளிதானது அல்ல. போட்டியை நடத்தும் உரிமையை பாகிஸ்தானை தக்க வைத்துக் கொள்ளுமாறு ஆசிய கிரிக்கெட் பேரவை கேட்டுக் கொண்டுள்ளது. ஆனால் அந்த முடிவை ஏற்றுக்கொள்ள முடியாவிட்டால் ஐந்து அணிகள் பங்கேற்கும் போட்டியாக ஆசியக் கிண்ணத் தொடர் நடத்தப்படும்” என தெரிவித்துள்ளார்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<