முதல் பயிற்சிப் போட்டியில் இலங்கை வெற்றி

3488

ஒருநாள் உலகக் கிண்ணத்திற்குரிய தகுதிகாண் தொடரில் விளையாட ஜிம்பாப்வே பயணமாகியிருக்கும் இலங்கை கிரிக்கெட் அணி, குறித்த தகுதிகாண் தொடருக்கு முன்னர் இன்று பயிற்சி ஆட்டமொன்றில் நெதர்லாந்தை எதிர்கொண்டதோடு அப்போட்டியில் 03 விக்கெட்டுக்களால் வெற்றியையும் பதிவு செய்துள்ளது.

தென்னாபிரிக்க A அணியை சுருட்டிய இலங்கையின் பந்துவீச்சாளர்கள்

நெதர்லாந்து – இலங்கை அணிகள் இடையிலான பயிற்சிப் போட்டி இன்று (13) ஜிம்பாப்வேயின் புலவாயோ நகரில் ஆரம்பமாகியது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை நெதர்லாந்து அணிக்கு வழங்கியது.

இதன்படி போட்டியில் முதலில் துடுப்பாடிய நெதர்லாந்து அணியானது 45.3 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 214 ஓட்டங்களையே எடுத்தது.

நெதர்லாந்து துடுப்பாட்டம் சார்பில் அதிகபட்சமாக சகீப் சுல்பிகார் மத்திய வரிசையில் களமிறங்கி 64 பந்துகளில் 56 ஓட்டங்கள் எடுத்ததோடு, தேஜா நிடாமனுரு 41 ஓட்டங்களையே எடுத்தார்.

மறுமுனையில் இலங்கை அணியின் பந்துவீச்சில் கசுன் ராஜித 03 விக்கெட்டுக்களையும், மகீஷ் தீக்ஷன 02 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தனர்.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட 215 ஓட்டங்களை அடைவதற்கு பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை அணி ஒரு கட்டத்தில் சிறந்த ஆரம்பத்தை பெற்ற போதும் பின்னர் தடுமாறியது.

எனினும் இலங்கை அணிக்கு கைகொடுத்த அதன் தலைவர் தசுன் ஷானக்க தான் பெற்ற அதிரடி அரைச்சதத்தோடு இலங்கையின் வெற்றியினை 37.1 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 215 ஓட்டங்களுடன் உறுதி செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

புதிய உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரில் மே.இ. தீவுகளுடன் மோதும் இந்தியா

இலங்கை அணியின் துடுப்பாட்டம் சார்பில் இறுதிவரை ஆட்டமிழக்காது இருந்து தனது தரப்பு வெற்றியை உறுதி செய்த ஷானக்க 52 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 8 பெளண்டரிகள் அடங்கலாக 67 ஓட்டங்களை எடுத்தார். இதேநேரம் திமுத் கருணாரட்ன 47 ஓட்டங்களுடன் இலங்கையின் வெற்றிக்கு பங்களிப்புச் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

நெதர்லாந்து பந்துவீச்சில் கிளய்டோன் ப்ளோய்ட் 02 விக்கெட்டுக்களை கைப்பற்றிய போதும் அவரின் பந்துவீச்சு வீணாகியது.

போட்டியின் சுருக்கம்

நெதர்லாந்து – 214 (45.3) சகீப் சுல்பிகர் 56(64), தேஜா நிடாமனுரு 41(62), கசுன் ராஜித 19/3(7), மகீஷ் தீக்ஷன 36/2(10)

இலங்கை – 215/7 (37.1) தசுன் ஷானக்க 67(52)*, திமுத் கருணாரட்ன 47(55), கிளய்டோன் ப்ளொய்ட் 40/2(7)

முடிவு – இலங்கை 3 விக்கெட்டுக்களால் வெற்றி

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<