சுபர் சிக்ஸ் சுற்றை நெதர்லாந்துடன் ஆரம்பிக்கும் இலங்கை கிரிக்கெட் அணி

210

இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதும் உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றுத் தொடரின் சுபர் சிக்ஸ் போட்டி நாளை (30) ஜிம்பாப்வேயின் புலவாயோ நகரில் ஆரம்பமாகின்றது.

கவனிக்க வேண்டிய விடயங்கள்

இரு அணிகளும் உலகக் கிண்ணத் தகுதிகாண் தொடரில் விளையாடும் முதல் சுபர் சிக்ஸ் மோதலாக நாளைய போட்டி அமைகின்றது. இந்தப் போட்டிக்கு முன்னர் இதுவரை இலங்கை – நெதர்லாந்து அணிகள் மூன்று ஒருநாள் போட்டிகளில் ஆடியிருப்பதோடு குறித்த மூன்று போட்டிகளிலும் இலங்கை அணி வெற்றி பெற்றிருந்தது.

>>சுபர் சிக்ஸ் சுற்றுக்கான மே.தீவுகள் குழாத்தில் மாற்றம்!

எனவே நெதர்லாந்து நாளை இலங்கை அணியை வீழ்த்தும் சந்தர்ப்பத்தில் ஒருநாள் அரங்கில் அவர்கள் பெற்ற முதல் வெற்றியுடன் வரலாறு படைப்பதற்கான சந்தர்ப்பமொன்று உள்ளது. ஏற்கனவே இந்த உலகக் கிண்ணத் தகுதிகாண் தொடரில் சுபர் ஓவர் மூலமாக நெதர்லாந்து இரு தடவைகள் உலகக் கிண்ணத்தை வென்ற மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தி அதிர்ச்சி நிகழ்வு ஒன்றினை நடாத்திக் காட்டியிருப்பதோடு, உலகக் கிண்ண தகுதிகாண் தொடரில் நடைபெற்ற பயிற்சி போட்டியிலும் இலங்கை வீரர்களுக்கு எதிராக சவாலான ஆட்டத்தினை வெளிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணி

இலங்கை அணியினை நோக்கும் போது இந்த தொடரின் முதல் சுற்றில் அனைத்துப் போட்டிகளில் வெற்றியினை பதிவு செய்த நிலையிலையே அவர்கள் சுபர் சிக்ஸ் சுற்றில் உள்நுழைகின்றனர்.

ஆனால் இலங்கை அணி கடந்த இரண்டு போட்டிகளிலும் பந்துவீச்சாளர்களின் அதீத ஆற்றலினாலேயே வெற்றியினை பதிவு செய்திருந்தது என்பது மறுக்க முடியாத உண்மையாகும். குறிப்பாக இலங்கை அணியின் முன்வரிசை துடுப்பாட்டவீரர்கள் பெற்றுக் கொடுக்கும் சிறந்த ஆரம்பத்தினை கடந்த இரண்டு போட்டிகளிலும் இலங்கை அணியின் மத்திய வரிசை வீரர்கள் உபயோகம் செய்ய தவறியிருந்ததனை கண்டு கொள்ள முடியுமாக இருந்தது. எனவே நெதர்லாந்துக்கு எதிரான போட்டியின் போது இலங்கை துடுப்பாட்டவீரர்கள் மத்திய வரிசையில் மேற்கொள்ளும் தவறுகளை சரி செய்வது அணிக்கு மேலும் பலம் தரும் விடயமாக அமையலாம்.

அணியின் துடுப்பாட்டத்தினைப் பொறுத்தவரை கடந்த இரண்டு போட்டிகளிலும் குசல் மெண்டிஸ், அணித்தலைவர் தசுன் ஷானக்க ஆகியோர் மோசமான ஆட்டங்களையே வெளிப்படுத்தியிருந்தனர். இவர்களிடம் இருந்து நல்ல வகையிலான துடுப்பாட்டம் நெதர்லாந்து மோதலில் எதிர்பார்க்கப்படுகின்றது. அதேநேரம் இலங்கை அணியில் இருந்து அனுபவ வேகப்பந்துவீச்சாளரான துஷ்மன்த சமீர விலகியிருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் அவரின் இடத்தினை டில்ஷான் மதுசங்க எடுத்துக் கொள்கின்றார். டில்ஷான் மதுசங்க நாளை (29) இலங்கை அணியில் விளையாடுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக காணப்படுகின்றன.

>>துஷ்மந்த சமீர நீக்கம் ; டில்ஷான் மதுசங்கவுக்கு வாய்ப்பு!

எதிர்பார்க்கை இலங்கை குழாம்

பெதும் நிஸ்ஸங்க, திமுத் கருணாரட்ன, குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, சரித் அசலன்க, தசுன் ஷானக்க (தலைவர்), தனன்ஞய டி சில்வா, வனிந்து ஹஸரங்க, மகீஷ் தீக்ஷன, கசுன் ராஜித/டில்சான் மதுசங்க, லஹிரு குமார

நெதர்லாந்து அணி

உலகக் கிண்ணத் தகுதிகாண் தொடரில் எதிர்பார்க்காத திருப்பங்களை ஏற்படுத்திய அணிகளில் ஒன்றாக நெதர்லாந்து காணப்படுகின்றது. இம்முறை உலகக் கிண்ண தகுதிகாண் தொடரில் இளம் வீரர்களுடனேயே நெதர்லாந்து களம் காண்கின்றது.

நெதர்லாந்து அணியினை நோக்கும் சந்தர்ப்பத்தில் மேக்ஸ் ஓடோவ்ட், பாஸ் டி லீடே மற்றும் ஸ்கொட் எட்வார்ட்ஸ் ஆகியோருடன் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் சதம் விளாசிய தேஜா நிடாமனுருவும் துடுப்பாட்டத்தில் எதிர்பார்க்கப்படும் வீரர்களாக காணப்பட பின் வரிசையில் களமிறங்கும் சகலதுறைவீரரான லோகன் வான் பீக் Finisher ஆக நம்பிக்கை தருகின்றார்.

>>பாடசாலை மாணவிகளுக்கு பயிற்றுவித்த நியூசிலாந்து வீராங்கனைகள்

இதேநேரம் பந்துவீச்சினை நோக்கும் சந்தர்ப்பத்தில் லோகன் வான் பீக் மற்றும் விவியான் கிங்க்மா ஆகியோர் பிரதான வேகப்பந்துவீச்சாளர்களாக இருக்க, சாகிப் சுல்பிகார் மற்றும் ஆர்யன் தத் ஆகியோர் சுழல்பந்துவீச்சாளர்களாக நம்பிக்கை தருகின்றனர். நெதர்லாந்து இலங்கை மோதலில் மாற்றங்களின்றி களமிறங்கும் என நம்பப்படுகின்றது.

எதிர்பார்க்கை நெதர்லாந்து குழாம்

விக்ரமஜித் சிங், மேக்ஸ் ஓடோவ்ட், வெஸ்லி பரேஸி, பாஸ் டி லீடே, தேஜா நிடாமனுரு, ஸ்கொட் எட்வார்ட்ஸ் (தலைவர்), சகீப் சுல்பிகார், லோகன் வான் பீக், ஆர்யான் தத், கிளய்டன் ப்ளோய்ட், விவியன் கிங்க்மா

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<