இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் நடைபெற்ற ஐ.சி.சி சம்பியன்ஸ் கிண்ணத் தொடருக்கான பயிற்சிப் போட்டியொன்றில், சிறப்பான துடுப்பாட்ட வலிமையினைக் வெளிக்காட்டியிருந்த அவுஸ்திரேலிய அணி இறுதி ஓவரில் 2 விக்கெட்டுக்களால் வெற்றியைப் பெற்றுள்ளது.
கத்துக்குட்டி அணியாக சம்பியன்ஸ் கிண்ணத்தில் நுழைவது மகிழ்ச்சியே –மெதிவ்ஸ்
சம்பியன்ஸ் கிண்ணத்திற்கான முதற்கட்டமாக, தொடரில் பங்கேற்கும் அணிகளுக்கு இடையிலான பயிற்சி ஆட்டங்கள் மே 26ஆம் திகதி தொடக்கம் 30ஆம் திகதி வரை இடம்பெறுகின்றன. அந்த வகையில் சவால் மிக்க அவுஸ்திரேலிய அணியுடன், அனுபவம் குறைந்த வீரர்களைக் கொண்டிருந்த இலங்கை மோதிய இந்தப் பயிற்சிப் போட்டி, சம்பியன்ஸ் கிண்ணத் தொடரின் முதல் பயிற்சிப் போட்டியாக லண்டன் ஓவல் மைதானத்தில் ஆரம்பமாகியிருந்தது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய தரப்பின் தலைவர், டேவிட் வோர்னர் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை அஞ்செலோ மெதிவ்ஸ் தலைமையிலான இலங்கை அணிக்கு வழங்கியிருந்தார்.
இதன்படி களமிறங்கியிருந்த இலங்கை அணியானது, ஆரம்ப வீரர்களான உபுல் தரங்க மற்றும் நிரோஷன் திக்வெல்ல ஆகியோரின் துரிதகதியிலான ஆட்டத்துடன், நல்லதொரு ஆரம்பத்தினைப் பெற்றுக்கொண்டது.
இலங்கை அணியின் முதல் விக்கெட்டாக, ஜோஸ் ஹெசல்வூடின் பந்து வீச்சில் தரங்க குறைவான ஓட்டங்களுடன் (13) வீழ்ந்தார். எனினும், மறுமுனையில் அபாரமாக ஆடியிருந்த நிரோஷன் திக்வெல்ல அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்துவதில் அதிக கரிசனையுடன் செயற்பட்டார்.
இந்நிலையில் தொடர்ந்து அதிரடி ஆட்டத்தினை வெளிக்காட்டியிருந்த திக்வெல்ல, மோசேஸ் ஹென்ரிக்சின் பந்து வீச்சில் பேட் கம்மின்சிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். ஆட்டமிழக்கும் போது, 8 பவுண்டரிகளை விளாசியிருந்த திக்வெல்ல மொத்தமாக 30 பந்துகளில் 41 ஓட்டங்களினை பெற்றிருந்தார்.
தொடர்ந்து மேலதிகமாக, குறுகிய நேர இடைவெளிகளில் இரு விக்கெட்டுக்களை பறிகொடுத்து ஒரு கட்டத்தில் 92 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்கள் என்ற நிலையில் தடுமாறிய இலங்கை அணியினை அணித் தலைவர் அஞ்செலோ மெதிவ்ஸ் மற்றும் சாமர கபுகெதர ஆகியோர் தமது நிதானமான ஆட்டம் மூலம் மீளக்கட்டியெழுப்பியிருந்தனர்.
இதில் கபுகெதர அணிக்காக பெறுமதி மிக்க 30 ஓட்டங்களினை 34 பந்துகளில் பெற்றுத் தந்தார். கபுகெதரவிற்கு பின்னால் அசேல குணரத்னவுடன் ஜோடி சேர்ந்த மெதிவ்ஸ் சிறந்த இணைப்பாட்டத்தை வழங்கினார். மெதிவ்ஸ் 106 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 9 பவுண்டரிகள் அடங்கலாக 95 ஓட்டங்களினைப் பெற்று தனது அணியினை முன்னிலைப்படுத்தியிருந்தார்.
இதனையடுத்து, அசேல குணரத்ன பெற்றுக்கொண்ட அதிரடி அரைச்சதம், சீக்குகே பிரசன்னவின் விரைவான துடுப்பாட்டம் (31) ஆகியவற்றின் உதவியுடன் 50 ஓவர்கள் நிறைவில் இலங்கை அணியானது 7 விக்கெட்டுக்களை இழந்து 318 ஓட்டங்களினைப் பெற்றுக்கொண்டது.
இதில், இறுதி வரை ஆட்டமிழக்காமல் நின்றிருந்த அசேல குணரத்ன வெறும் 56 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 8 பவுண்டரிகள் அடங்கலாக 70 ஓட்டங்களை விளாசியிருந்தார்.
அவுஸ்திரேலிய அணியின் பந்து வீச்சில், சிறப்பாக செயற்பட்டிருந்த வலது கை வேகப்பந்து வீச்சாளரான மொசேஸ் ஹென்ரிக்ஸ் 46 ஓட்டங்களிற்கு மூன்று விக்கெட்டுக்களை சரித்திருந்தார்.
ஒரு நாள் தரவரிசையில் இலங்கையை பின்தள்ளி 7ஆவது இடத்தை பிடித்த பங்களாதேஷ்
தொடர்ந்து, 50 ஓவர்களில் 319 ஓட்டங்களினைப் பெற்றால் வெற்றி என்கிற நிலையில் துடுப்பாடியிருந்த அவுஸ்திரேலிய அணி, ஆரம்ப வீரராக வந்திருந்த அரோன் பின்ச் அதிரடியாக ஆடி பெற்றுக்கொண்ட சதத்தின் உதவியுடன் தமது இலக்கு எட்டும் பயணத்தில் வலுவான நிலைக்குச் சென்றது.
அவ்வணியின் ஏனைய வீரர்களில் ட்ராவிஸ் ஹெட் தவிர்ந்த ஏனைய துடுப்பாட்ட வீரர்களை இலங்கைப் பந்து வீச்சாளர்கள் குறுகிய ஓட்டங்களுக்குள் ஓய்வறை நோக்கி அனுப்பியிருப்பினும், தனியொருவராக போராடிய ஹெட்டின் ஆட்டத்தின் காரணத்தினால் 49.4 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்த அவுஸ்திரேலிய அணி 319 ஓட்டங்களினைப் பெற்று வெற்றியிலக்கினை அடைந்து கொண்டது.
அவ்வணியின் வெற்றியிலக்கிற்கு சதம் அடித்து வித்திட்ட அரோன் பின்ச் அதிரடியான நீண்ட இன்னிங்ஸ் ஒன்றினை வெளிப்படுத்தி, மொத்தமாக 109 பந்துகளில் 6 சிக்ஸர்கள் மற்றும் 11 பவுண்டரிகளை விளாசி 137 ஓட்டங்களினை பெற்றிருந்தார். ட்ராவிஸ் ஹெட் இறுதி வரை ஆட்டமிழக்காமல் நின்று 73 பந்துகளில் 7 பவுண்டரிகள் உள்ளடங்களாக 85 ஓட்டங்களினைப் பெற்றிருந்தார்.
இறுதி வரை சிறப்பாகவே செயற்பட்டிருந்த இலங்கை அணியின் பந்து வீச்சில், நுவான் பிரதீப் 3 விக்கெட்டுக்களையும், லக்ஷன் சந்தகன் 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தனர்.
போட்டியின் சுருக்கம்
இலங்கை – 318/7 (50) அஞ்செலோ மெதிவ்ஸ் 95(106), அசேல குணரத்ன 70(56)*, நிரோஷன் திக்வெல்ல 41(30), சீக்குகே பிரசன்ன 31(19), சாமர கபுகெதர 30(34), மோசேஸ் ஹென்ரிக்ஸ் 46/3(10)
அவுஸ்திரேலியா – 319/8 (49.4) அரோன் பின்ச் 137(109), மோசேஸ் ஹென்ரிக்ஸ் 85(73)*, நுவான் பிரதீப் 57/3(9), லக்ஷன் சந்தகன் 69/2(10), லசித் மாலிங்க 32/1(8)
போட்டி முடிவு – அவுஸ்திரேலிய அணி 2 விக்கெட்டுக்களால் வெற்றி