கிரிக்கெட் திருவிழாக்களில் ஒன்றான இவ்வருட ஜூன் மாதத்தில் ஆரம்பமாகும் ஐ.சி.சி சம்பியன்ஸ் கிண்ணத்தில் விளையாடப்போகும் 15 வீரர்கள் உள்ளடங்கிய இலங்கை வீரர்கள் குழாத்தினை இலங்கை கிரிக்கெட் வாரியம் சற்று முன்னர் வெளியிட்டுள்ளது.
வரலாற்று கதாநாயகர்கள் பட்டியலில் முரளிதரன்
சுழல் பந்து ஜாம்பவான்களில் ஒருவரான முத்தையா முரளிதரன், ஐ.சி.சி இன் வரலாற்று கதாநாயகர்கள்..
கடந்த இரு வருடங்களாக ஒரு நாள் போட்டிகள் எதிலும் இலங்கைக்காக பங்குபெறாது இருந்த உலகின் நட்சத்திர பந்து வீச்சாளர்களில் முக்கியமானவரான லசித் மாலிங்க மீண்டும் இலங்கை அணிக்காக ஒரு நாள் போட்டிகளில் விளையாடும் வாய்ப்பினை இத்தொடர் மூலம் பெற்றிருக்கின்றார்.
அறிவிக்கப்பட்டிருக்கும் வீரர்கள் குழாம், 8 துடுப்பாட்ட வீரர்களை கொண்டிருப்பதுடன், 5 வேகப்பந்து வீச்சாளர்களையும் 2 சுழல் வீரர்களையும் உள்ளடக்கியுள்ளது.
காலில் ஏற்பட்டிருந்த உபாதை காரணமாக இலங்கை அணி விளையாடியிருந்த சில தொடர்களில் பங்கேற்காது விலகியிருந்த அணித் தலைவர் அஞ்செலோ மெத்திவ்ஸ் பூரணமாக குணமடைந்து இருப்பதால் பலம் பொருந்தியிருக்கும் இலங்கை அணியின் தலைவர் பதவியை மீண்டும் பொறுப்பேற்கவுள்ளார். சம்பியன்ஸ் கிண்ணத்தில் அணியின் உப தலைவராக உபுல் தரங்க பெயரிடப்பட்டுள்ளார்.
இதற்கு மேலதிகமாக, இலங்கை கிரிக்கெட் வாரியம் ஏற்பாடு செய்து நடாத்தி வரும் மாகாண ரீதியிலான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட ஒரு நாள் தொடரில் இரண்டு அபார சதங்களை விளாசி மிரட்டியிருக்கும் சாமர கபுகெதரவும் இலங்கையின் ஒரு நாள் குழாத்திற்கு திரும்புகின்றார்.
இத்தொடரிற்காக தெரிவு செய்யப்பட்டிருக்கும் இலங்கை குழாமானது, சம்பியன்ஸ் கிண்ணத்தின் முன்னர் கண்டி மற்றும் தியத்தலாவ ஆகிய நகரங்களில் இடம்பெறும் ஆறு நாட்கள் கொண்ட செயற்திறன் மிக்க பயிற்சி முகாமொன்றில் மே 9ஆம் திகதியில் இருந்து பங்கேற்கவுள்ளது.
அதன் பின்னர், மே மாதம் 18ஆம் திகதி இங்கிலாந்து புறப்படும் இலங்கை அணி, அங்கு சென்று ஸ்கொட்லாந்து அணிக்கெதிராக இரண்டு பயிற்சிப் போட்டிகளில் விளையாடள்ளது.
அதனையடுத்து, சம்பியன்ஸ் கிண்ண பயிற்சிப் போட்டிகளில் மே 26ஆம் திகதி அவுஸ்திரேலிய அணியையும், மே 30ஆம் திகதி நியூசிலாந்து அணியையும் இலங்கை எதிர்கொள்கின்றது.
இலங்கை அணியானது எட்டு நாடுகள் பங்குபெறும் இந்த சம்பியன்ஸ் கிண்ணத்தில் குழு B யில் அங்கம் வகிக்கும் அணிகளான தென்னாபிரிக்கா, இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடன் சேர்ந்து தொடரின் சம்பியனாகும் கனவுகளுடன் மோதவுள்ளது.
இறுதியாக 2013இல் இங்கிலாந்தில் இடம்பெற்றிருந்த சம்பியன்ஸ் கிண்ணத்தினை இந்தியா கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை குழாம்
அஞ்செலோ மெதிவ்ஸ்(தலைவர்), உபுல் தரங்க (உப தலைவர்), நிரோஷன் திக்வெல்ல, குசல் ஜனித் பெரேரா, குசல் மெண்டிஸ், சாமர கப்புகெதர, அசேல குணரத்ன, தினேஷ் சந்திமால், லசித் மாலிங்க, சுரங்க லக்மல், நுவான் பிரதீப், நுவான் குலசேகர, திசர பெரேரா, லக்ஷன் சந்தகன், சீக்குகே பிரசன்ன
மேலதிக வீரர்கள் (சுற்றுப் பயணத்திற்கான):
தில்ருவான் பெரேரா, தனுஷ்க குணத்திலக்க
மேலதிக வீரர்கள்:
விக்கும் சஞ்சய, லஹிரு குமார, சஜித் பத்திரன, மிலிந்த சிறிவர்தன, அகில தனன்ஞய
2017 ஆம் ஆண்டிற்கான சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் இலங்கை பங்குபெற்றும் போட்டிகள் அட்டவணை
இலங்கை எதிர் தென்னாபிரிக்கா – ஜூன் 3 – ஓவல் மைதானம், லண்டன்
இலங்கை எதிர் இந்தியா – ஜூன் 8 – ஓவல் மைதானம், லண்டன்
இலங்கை எதிர் பாகிஸ்தான் – ஜூன் 12 – கார்டிப் வேல்ஸ் மைதானம், கார்டிப்