ஊக்கமருந்து பயன்படுத்திய விவகாரத்தில் குற்றவாளியாக இனங்காணப்பட்டுள்ள பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஷொஹிதுல் இஸ்லாமுக்கு 10 மாதங்கள் போட்டித் தடை விதித்து சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) உத்தரவிட்டுள்ளது.
ICC ஊக்கமருந்து எதிர்ப்பு சட்டத்தின் பிரிவு 2.1 ஐ மீறியதை ஷொஹிதுல் ஒப்புக்கொண்டுள்ளார். இதனையடுத்து கடந்த மே 28ஆம் திகதியிலிருந்து முன் திகதியிட்டு இந்த தடை அமல்படுத்தப்பட்டது என்பதால் அடுத்த ஆண்டு மார்ச் 28ஆம் திகதி வரை அவருக்கு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஆடமுடியாது என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து ICC வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையின் படி, கடந்த மார்ச் 4ஆம் திகதி டாக்காவில் நடைபெற்ற போட்டியொன்றின் போது மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் வைத்து ஷொஹிதுல் சிறுநீர் மாதிரியை வழங்கியுள்ளார். அந்த மாதிரியில் க்ளோமிஃபென் என்ற ஊக்கமருந்து இருப்பர் கண்டறியப்பட்டுள்ளது. இது உலக ஊக்கமருந்து எதிர்ப்பு நிறுவனத்தினால் (WADA) தடைசெய்யப்பட்ட பட்டியலின் கீழ் குறிப்பிடப்பட்ட ஊக்கமருந்துகளில் ஒன்றாகும். இதை போட்டி மற்றும் போட்டிக்கு வெளியே பயன்படுத்துவது வீரர்களுக்கு தடைசெய்யப்பட்டுள்ளது.
- கோல் கிளேடியேட்டர்ஸ் அணிக்கு புதிய தலைவர்
- சாதனைகளுடன் தரவரிசையில் முதல் இடத்திற்கு வந்த பும்ரா
- பாகிஸ்தானை நெருக்கடிக்கு உள்ளாக்குமா இலங்கை??
முன்னதாக, இந்த ஆண்டின் ஆரம்பத்தில் ஷொஹிதுல் தனது சொந்த மருத்துவரால் மேற்ககொள்ளப்பட்ட பரிசோதனையிலும் தடைசெய்யப்பட்ட குறித்த ஊக்கமருந்து இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், சிகிச்சை காரணங்களுக்காக சட்டப்பூர்வமாக பரிந்துரைக்கப்பட்ட மருந்தில் இருந்த தடைசெய்யப்பட்ட பொருளை கவனக்குறைவாக உட்கொண்டதால், குறிப்பிடத்தக்க தவறு அல்லது அலட்சியம் எதுவும் காட்டப்படவில்லை’ என்று ICC ஏற்றுக்கொண்டது.
‘தடைசெய்யப்பட்ட பொருட்களைப் பயன்படுத்துவதன் மூலம் தனது விளையாட்டு செயல்திறனை மேம்படுத்தும் எண்ணம் ஷொஹிதுல் இஸ்லாமுக்கு இல்லை என்பதைத் திருப்திப்படுத்த முடிந்தது’ என்றும் ICC மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
இருப்பினும், சர்வதேச கிரிக்கெட் வீரராக தனக்கு இருக்கும் பொறுப்பை நிறைவேற்றத் தவறியதை ஷொஹிதுல் ஏற்றுக்கொண்டதை அடுத்து அவருக்கு இவ்வாறு 10 மாதங்கள் போட்டித் தடை விதிக்க ICC நடவடிக்கை எடுத்துள்ளது.
27 வயது வலது கை வேகப் பந்துவீச்சாளரான ஷொஹிதுல் இஸ்லாம், பங்களாதேஷ் அணிக்காக ஒரேயொரு T20I போட்டியில் மட்டுமே ஆடியுள்ளார்.
கடந்த ஆண்டு டாக்காவில் பாகிஸ்தானுக்கு எதிராக T20I போட்டியில் அறிமுகமான அவர், மொஹமட் ரிஸ்வானின் விக்கெட்டை வீழ்த்தியிருந்தார்.
அத்துடன், கடந்த 18 மாதங்களில் பங்களாதேஷில் நடைபெற்ற பல போட்டிகளில் முன்னணி அணிகளில் இடம்பெற்றுள்ளார்.
இதுவரை, 46 T20I போட்டிகளில் ஆடி 69 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள அவர், 35 முதல்தர போட்டிகளில் 93 விக்கெட்டுகளையும் ஒரு சதத்தையும் எடுத்துள்ளார்.
இந்த ஆண்டு நடைபெற்ற பிபிஎல் T20I தொடரில் சம்பியன் பட்டம் வென்ற கொமிலா விக்டோரியன்ஸ் அணிக்காக அபாரமாக பந்துவீசி அந்த அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார்.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<