உலகக் கிண்ணத்திற்கான நடுவர், மத்தியஸ்தர்கள் குழுவில் 3 இலங்கையர்

178

சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐ.சி.சி.) இந்த ஆண்டு இடம்பெறவிருக்கும் கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரில் நடுவர்களாகவும் (Umpires), போட்டித் மத்தியஸ்தர்களாகவும் (Match Referees) செயற்படுபவர்களின் விபரங்களை வெளியிட்டுள்ளது.

>>திமுத், மர்க்ரமை அடுத்து ஹெம்ஷையர் அணியில் ரஹானே

அதன்படி இந்த ஆண்டுக்கான உலகக் கிண்ணப் போட்டிகளில் இலங்கையைச் சேர்ந்த குமார் தர்மசேன, ருச்சிர பல்லியகுருகே ஆகியோர் போட்டி நடுவர்களாக செயற்பட ரஞ்சன் மடுகல்ல போட்டி மத்தியஸ்தர்களில் ஒருவராக கடமையாற்றவிருக்கின்றார். `

உலகக் கிண்ணத் தொடருக்கான நடுவர்கள், மத்தியஸ்தர்கள் குழாத்தில் மொத்தமாக 22 பேர் இடம்பெற்றுள்ளதோடு, இதில் 16 பேர் போட்டி நடுவர்கள் என்பதோடு, எஞ்சிய 6 பேரும் போட்டி மத்தியஸ்தர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை உட்பட பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகளை கொண்டுள்ள இந்த போட்டி நடுவர்கள், மத்தியஸ்தர்கள் குழாம் இங்கிலாந்தில் இடம்பெறவுள்ள உலகக் கிண்ணத் தொடரின் 48 போட்டிகளிலும் தங்களது சேவைகளை  வழங்கவிருக்கின்றன.

இதேநேரம், எதிர்வரும் மே மாதம் 30ஆம் திகதி தென்னாபிரிக்க மற்றும் இங்கிலாந்து அணிகளின் மோதலுடன் ஆரம்பமாகும் உலகக் கிண்ணத் தொடரின் முதல் ஆட்டத்தில் டேவிட் பூன் போட்டி மத்தியஸ்தராக கடமையாற்ற, குமார் தர்மசேன மற்றும் புரூஸ் ஒக்சேன்போர்ட் ஆகியோர் போட்டியின் கள நடுவர்களாக பணியாற்றவிருக்கின்றனர். இதேநேரம், உலகக் கிண்ணத்திற்கான முதல் போட்டியின் மூன்றாம் நடுவராக பெளல் ரெய்பேல் செயற்பட ஜோயல் வில்சன் நான்காம் நடுவர் பொறுப்பினை எடுத்துக் கொள்கின்றார்.

>>உலகக் கிண்ணத்திற்கான விஷேட பயிற்சிகளை இரத்துச் செய்துள்ள இலங்கை கிரிக்கெட் சபை

இவர்களில் டேவிட் பூன் 1987ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தினை அவுஸ்திரேலியா வெல்லும் போது அந்த அணிக் குழாத்தில் இடம்பெற்ற வீரர் என்பதோடு, குமார் தர்மசேன 1996ஆம் ஆண்டின் உலகக் கிண்ணத்தை வென்ற இலங்கை அணியில் இடம்பெற்றிருந்தார். அதேநேரம், பெளல் ரெய்பல் 1999ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை வென்ற அவுஸ்திரேலிய அணியின் வீரராக இருந்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதனால், கடந்த கால உலகக் கிண்ணத் தொடர்களை வென்ற அணிகளில் இடம்பெற்ற முன்னாள் வீரர்கள் இம்முறைக்கான உலகக் கிண்ணத்தில் சேவை செய்ய வந்திருப்பது பெறுமதி வாய்ந்த விடயமாக அமைகின்றது.

இதேநேரம், இலங்கையினை சேர்ந்த ரஞ்சன் மடுகல்ல, ஆறாவது தடவையாக உலகக் கிண்ணத் தொடர் ஒன்றின் போட்டி மத்தியஸ்தராக இம்முறைக்கான உலகக் கிண்ணத்தின் போது கடமையாற்றுகின்றார். மடுகல்லவே, இம்முறைக்காக உள்வாங்கப்பட்டுள்ள போட்டி மத்தியஸ்தர்களில் அதிக அனுபவம் கொண்டவராக காணப்படுகின்றார். அதேவேளை பாகிஸ்தானின் அலீம் தார்  இம்முறைக்கான உலகக் கிண்ணம் மூலம் ஐந்தாவது தடவை உலகக் கிண்ணத் தொடர் ஒன்றில் போட்டி நடுவராக கடமையாற்றவிருப்பது குறிப்பிடத்தக்கது.

>>வேகப்பந்து வீச்சாளரை சுழல் பந்துவீச்சாளராக மாற்றிய சனத் ஜயசூரிய

அதேநேரம், இங்கிலாந்தை சேர்ந்த போட்டி நடுவரான இயன் குல்ட் இம்முறைக்கான உலகக் கிண்ணத் தொடர் மூலம் நான்காவது தடவையாக உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு சேவை புரியவுள்ளார். அதோடு குல்ட் இந்த உலகக் கிண்ணத் தொடருடன் போட்டி நடுவர் பதவியிலிருந்து ஓய்வு பெறவிருக்கின்றதும் முக்கிய விடயமாகும்.

இம்முறைக்கான உலகக் கிண்ணத் தொடரின் குழுநிலைப் போட்டிகளுக்கான நடுவர், போட்டித் தீர்ப்பாளர்கள் யார் என்பது தீர்மானிக்கப்பட்டுள்ள போதிலும், தொடரின் அரையிறுதிப் போட்டிகள் மற்றும் இறுதிப் போட்டி என்பவற்றில் கடமை புரியும் நடுவர், போட்டித் தீர்ப்பாளர்கள் விபரம் பின்னரே வெளியாகும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

உலகக் கிண்ணத்திற்கான போட்டி தீர்ப்பாளர்கள், நடுவர்கள் விபரம்

போட்டித் தீர்ப்பாளர்கள்

கிறிஸ் ப்ரோட், டேவிட் பூன், என்டி பைகுரோப்ட், ஜெப் குரோவே, ரஞ்சன் மடுகல்ல, றிச்சி றிச்சர்ட்ஸன்

போட்டி நடுவர்கள்

அலீம் தார், குமார் தர்மசேன, மரைஸ் எரஸ்மஸ், கிறிஸ் கப்பானேய், இயன் குல்ட், றிச்சர்ட் இல்லிங்வேர்த், றிச்சர்ட் கெட்டல்போரோஹ், நைஜல் லோங், புரூஸ் ஒக்சன்போர்ட், சுந்தரம் ரவி, பெளல் ரெய்பல், ரொட் டக்கர், ஜோயல் வில்சன், மைக்கல் குஹ், ருச்சிர பல்லியகுருகே, பெளல் வில்சன்

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<