மென்செஸ்டர் யுனைடெட் அணிக்கு எதிராக தான் கூறிய சர்ச்சைக்குரிய கருத்து, இந்த ஆண்டு பிபா உலகக் கிண்ண கால்பந்து போட்டியின் போது போர்த்துக்கல் அணிக்கு இடையேயான உறவுகளை பாதிக்காது என்று நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தெரிவித்துள்ளார்.
தனது நடவடிக்கைகள் போர்த்துக்கல் அணியை பாதிக்காது என்றும், இந்த ஆண்டு உலகக் கிண்ணத்தை வெல்ல தனது அணிக்கு நல்ல வாய்ப்பு இருப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.
அத்துடன், தனது வாழ்க்கையில் மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது பற்றி தனக்கு கவலையில்லை என்று தெரிவித்த ரொனால்டோ தனக்கு எப்போது தேவையோ அப்போது பேசுவேன் என குறிப்பிட்டுள்ளார்.
37 வயதான கிறிஸ்டியானா ரொனால்டோ கடந்த ஆண்டு தனது முந்தைய கழகமான இங்கிலாந்தின் மென்செஸ்டர் யுனைடெட்டில் மீண்டும் இணைந்தார்.
இந்த நிலையில், அக்கழகத்தின் புதிய முகாமையாளராக நெதர்லாந்தின் எரிக் டென் ஹக் கடந்த மே மாதம் பதவியேற்ற பின்னர், அவருக்கும் ரொனால்டோவுக்கும் உறவு சுமுகமாக இல்லை.
37 வயதில் ரொனால்டோ புதிய சாதனை!
குறிப்பாக, நடப்பு பருவத்தில் மென்செஸ்டர் யுனைடெட் கழகத்துக்காக முக்கிய போட்டிகளில் ரொனால்டோ விளையாடவில்லை. அதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வந்தன. இதில் கடந்த மாதம் டொட்டென்ஹாம் கழகத்துக்கு எதிரான போட்டியில் மாற்றுவீரராக களமிறங்குவதற்கு ரொனால்டோ மறுத்தார். இதனால் அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதனிடையே உலகக் கிண்ண கால்பந்து தொடருக்கு முன்னதாக பிரிட்டனின் டோக் தொலைக்காட்சி அலைவரிசையில், பியர்ஸ் மோர்கன் அன்சென்ஸர்ட் நிகழ்ச்சியில் பத்திரிகையாளர் பிரியர்ஸ் மோர்கனுக்கு ரொனால்டோ அளித்த நேர்காணலில், மென்செஸ்டர் யுனைடெட் அணியின் முகாமையாளரான எரிக் டென் குறித்தும், அணி குறித்தும் பேசிய கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதில் மென்செஸ்டர் யுனைடெட் கழகத்திலிருந்து விலகுவதற்கு அக்கழகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் தன்னை நிர்ப்பந்திப்பதாகவும், அக்கழகத்தின் முகாமையாளர் எரிக் டென் ஹக் மீது தனக்கு மதிப்பு எதுவும் இல்லை எனவும் ரொனால்டோ பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்தார்.
இதனைத் தொடர்ந்து மென்செஸ்டர் யுனைடெட் கழகம் ரொனால்டோ உடனான ஒப்பந்தத்தை முடித்துக் கொள்வதற்கான சட்டப்பூர்வ வாய்ப்புகளை ஆராய்ந்து வருவதாக செய்திகள் வெளியாகின.
இந்த நிலையில். இதுதொடர்பில் நேற்று (21) ரொனால்டோ செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். அதில் அவர் கருத்து வெளியிடும் போது,
”நான் மென்செஸ்டர் யுனைடெட் மற்றும் முகாமையாளர் எரிக் டென் பற்றி பேசிய கருத்துக்கள் போர்த்துக்கல் அணியின் ஓய்வறையை பாதிக்குமா என்பது பற்றி கவலையில்லை. எனது வாழ்க்கையில் மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது பற்றி எனக்கு கவலையில்லை. எனக்கு எப்போது தேவையோ அப்போது பேசுவேன். எனது அணியினருக்கு என்னை பற்றி நன்றாக தெரியும்.
இம்முறை உலகக் கிண்ணத்தை வெல்ல போர்த்துக்கல் அணி அதீத பசியுடனும், கவனத்துடனும் உள்ளது. அதனால் எனது நேர்காணல் எங்கள் அணியின் கவனத்தை பாதிக்க வாய்ப்பில்லை” என தெரிவித்தார்.
இதனிடையே, சமூக ஊடகங்களில் மிக வேகமாக பகிரப்படும் ஒரு வீடியோவில் தனக்கும் போர்த்துக்கல் அணியைச் சேர்ந்த சக வீரர் ப்ரூனோ பெர்னாண்டஸுக்கும் இடையே நடந்த சம்பவம் ஒரு நகைச்சுவையின் ஒரு பகுதி என்றும் ரொனால்டோ கூறினார்.
அவருக்கும் (பெர்னாண்டஸ்) எனக்கும் நல்ல உறவு இருக்கிறது, நான் அவரை கேலி செய்தேன். அவருடைய விமானம் தாமதமாக வந்ததால், படகில் வந்தீர்களா என்று கேட்டேன், அவ்வளவுதான். எமது அணியின் சூழ்நிலை நன்றாக உள்ளது, எங்களுக்கு இடையே எந்தப் பிரச்சினையும் இல்லை. முழு அணியும் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. எனவே என்னைப் பற்றி கேள்விகள் கேட்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று கிறிஸ்டியானோ ரொனால்டோ வேண்டுகோள் விடுத்தார்.
>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<