கிரிக்கெட் உலகில் தற்போதுள்ள சுழல் பந்துவீச்சாளர்களில் இந்திய சுழல் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வினால் மட்டுமே 700 முதல் 800 விக்கெட்டுகளை வீழ்த்த முடியும் என இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர சுழல் பந்துவீச்சாளரான முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 4ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று (15) பிரிஸ்பேனில் ஆரம்பமாகியது.
இந்தப் போட்டியில் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணியின் சுழல் பந்துவீச்சாளர் நாதன் லயனுக்கு இது 100ஆவது டெஸ்ட் போட்டியாகும். அத்துடன், இந்தப் போட்டியில் 400 விக்கெட்டுக்கள் மைல்கல்லை எட்டுவதற்கான வாய்ப்பும் அவருக்கு கிடைக்கவுள்ளது.
>> கிரிக்கெட் விளையாட்டின் முன்னேற்றத்துக்காக மஹேல – சங்காவின் ஒத்துழைப்பு
இந்நிலையில் இலங்கை அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் லண்டனில் வெளியாகும் டெலிகிராப் பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியில் கருத்து தெரிவிக்கையில்,
”கிரிக்கெட் உலகில் தற்போதுள்ள சுழல் பந்துவீச்சாளர்களில் 700 முதல் 800 விக்கெட்டுகளை வீழ்த்தும் திறமை உள்ளவராக நான் இந்திய வீரர் ரவிச்சந்திர அஷ்வினை மட்டுமே பார்க்கிறேன்.
அஷ்வின் மிகச்சிறந்த பந்துவீச்சாளர். அஷ்வினைத் தவிர்த்து மற்ற இளம் பந்துவீச்சாளர்கள் யாரும் அந்த சாதனையை நிகழ்த்துவார்கள் என நான் நினைக்கவில்லை.
அதேபோல, அவுஸ்திரேலிய வீரர் நாதன் லயனாலும் இந்த சாதனையை நிகழ்த்த முடியாது. அவர் மீது நம்பிக்கை இல்லை. இப்போதுதான் 400 விக்கெட்டுக்கள் மைல்கல்லை எட்டவுள்ளார். இனிமேல் அதிகமான டெஸ்ட் போட்டிகளில் விளையாடினால்தான் இலக்கை எட்ட முடியும்.
>> கிரிக்கெட் விளையாட்டு ஒலிம்பிக்கில் சேர T10 போட்டிகள் வழிவகுக்கும்
நான் விளையாடும்போது கிரிக்கெட் போட்டிகளில் சமநிலை இருந்தது. ஆனால், இன்று ஒருநாள், T20 போட்டிகள் வந்தபின் துடுப்பாட்ட வீரர்களுக்கு சாதகமாக கிரிக்கெட் மாறிவிட்டது. நான் விளையாடும்போது, ஆடுகளம் நன்றாக தட்டையாக அமைக்கப்படும்.
பந்துவீச்சாளர்களுக்கும், துடுப்பாட்ட வீரர்களுக்கும் சம அளவு ஆடுகளம் ஒத்துழைக்கும். 3 நாட்களில் ஆட்டத்தை முடிக்க முயற்சி எடுப்போம், சவால் நிறைந்ததாக இருக்கும். பந்துவீச்சாளர்கள் அதிகமான சிரமங்கள் எடுத்து, கடினமாக உழைத்து ஆட்டத்தை விரைவாக முடிக்க முயல்வார்கள்.
ஆனால், தற்போதுள்ள நிலையில் டெஸ்ட் போட்டியில் பந்துவீச்சாளர்கள் லைன்-லென்த்தில் நீண்டநேரம் வீசினால்தான் 5 விக்கெட்டுகளை வீழ்த்த முடியும். ஏனெனில், துடுப்பாட்ட வீரர்கள் தாக்குதல் ஆட்டம் ஆடாமல் நீண்டநேரம் நிலைத்து துடுப்பெடுத்தாட முடியாது.
>> காலி கோட்டையில் அமர்ந்து செய்தி சேகரித்த விளையாட்டு ஊடகவியலாளர்
சுழல் பந்துவீச்சாளர்கள் சரியான இடத்தில் களத்தடுப்பாளர்களை நிறுத்தி, லைன்-லென்த்தில் பந்துவீசினால், எளிதாக விக்கெட்டுகளை வீழ்த்த முடியும். அதற்கான சாத்தியங்கள் தற்போது இருக்கின்றன.
அத்துடன், வேகப் பந்துவீச்சாளர்களை விட சுழல் பந்துவீச்சாளர்கள் அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்த முடியும், ஆனால், களத்தடுப்பாளர்களை சரியான இடத்தில் நிறுத்துவதும், கடினமாக உழைப்பதும் அவசியம்” என அவர் தெரிவித்தார்.
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட்டுக்களை எடுத்து (800 விக்கெட்டுகள்) முத்தையா முரளிதரன் முதலிடத்தில் உள்ளார். அதைத் தொடர்ந்து அவுஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் ஷேன் வோர்ன் (708), இந்திய அணியின் முன்னாள் தலைவர் அனில் கும்ப்ளே (619) உள்ளனர். அஷ்வின் இதுவரையில் 74 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 377 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<