சிங்கப்பூரில் கடந்தவாரம் நிறைவுக்கு வந்த 11ஆவது ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் தொடரில் இலங்கை அணி ஐந்தாவது தடவையாகவும் சம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது.
இலங்கை வலைப்பந்தாட்ட அணியின் நட்சத்திர வீராங்கனை தர்ஜினி சிவலிங்கம். இவரின் உயரம் ஆறு அடி பத்து அங்கும். இவரின் மீள்வருகை இலங்கைக்கு வலைப்பந்தாட்டத்தில் மீண்டும் ஒருமுறை ஆசிய கிண்ணத்தை பெற்றுக் கொடுத்துள்ளது.
ஆசியாவில் சம்பியனாகும் கனவுடனே களமிறங்கினோம் – திலகா ஜினதாச
யாழ்ப்பாணம், புன்னாலைக்கட்டுவானைப் பிறப்பிடமாகக் கொண்ட தர்ஜினி சிவலிங்கம், ஆறு பிள்ளைகள் கொண்ட குடும்பத்தில் ஐந்தாவதாக பிறந்தவர்.
இவரது குடும்பத்தில் அநேகர் உயரமானவர்கள்தான். அதீத உயரம் காரணமாக இவரது சிறுவயது வாழ்க்கை மிகவும் கசப்பான அனுபவங்களை அவருக்கு கொடுத்து இருக்கின்றது. பெரும்பாலும் இவர் வேடிக்கைக்கு உரிய பொருளாகவே ஏனையோரால் பார்க்கப்பட்டார். கல்விப் பொதுத்தராதர உயர்தர வகுப்பில் இருந்தபோது இவரின் உயரம் ஆறு அடி இரண்டு அங்குலம் ஆகும். பாடசாலையிலேயே இவர்தான் உயரமானவர்.
அதிபரின் உயரம் ஆறு அடியும் ஒரு அங்குலமும். உயரம் காரணமாக ஏனைய மாணவர்களால் நையாண்டி செய்யப்பட்டார். இவர் பாடசாலை விடுதியில் தங்கி இருந்து படித்தார். ஏனென்றால் பஸ்ஸில் பயணம் செய்கின்றமைகூட இவருக்கு மிகவும் சிரமமாக இருந்தது. பஸ் கூரை இவரின் தலையை பதம் பார்த்து விடும்.
கிழக்கு பல்கலைக்கழகத்தில் கலைத்துறையில் தர்ஜினி சிவலிங்கம் பயின்றார். தமிழ் துறையில் விரிவுரையாளராக வர வேண்டும் என்பது இவரின் இலட்சியமாக இருந்தது. ஆயினும் இங்குதான் இவரின் வலைப்பந்தாட்ட திறமை இனங்காணப்பட்டது. அவரது திறமைகளைக் கண்டு வியந்துபோன அதிகாரிகள் அவரை கொழும்புக்கு அழைத்து விசேட பயிற்சிகளை வழங்கவும் நடவடிக்கை எடுத்தனர். இவரின் கசப்பான அனுபவங்களுக்கு சிறுவயது முதலே காரணமாகி இருந்து வந்த அதீத உயரம் தர்ஜினியை இன்று உயரத்துக்கு கொண்டு சென்றுள்ளது மாத்திரமல்லாது இலங்கை வலைப்பந்தாட்ட அணியையும் உலகறிய செய்தது என்றால் மிகையாகாது.
தர்ஜினி சிவலிங்கம் இலங்கை வலைப்பந்தாட்ட அணியின் நம்பிக்கை நட்சத்திரம் ஆனார். ஏனைய அணியினருக்கு இவர் சிம்ம சொப்பனம் ஆனார். இவரின் கைகளுக்கு பந்து கிடைத்தால் போதும், 90 சதமானம் தவறாமல் கோல் போட்டு விடுவார்.
2009ஆம் ஆண்டு இலங்கைக்கு ஆசிய வலைப்பந்து சம்பியன் கிண்ணத்தை பெற்றுக்கொடுக்க பெரும் தூணாக இருந்த தர்ஜினி, 2009 மற்றும் 2011ஆம் ஆண்டுகளில் ஆசியாவின் சிறந்த கோல்போடும் வீராங்கனையாகவும் (ஷூட்டர்) தெரிவானார். அதனைத் தொடர்ந்து தேசிய வலைப்பந்து அணியின் இணை தலைவியாக செயற்பட்ட தர்ஜினி, முன்னதாக 4 தடவைகள் ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டிகளில் இலங்கை அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தியும் இருந்தார்.
புதிய தேசிய சாதனை படைத்த இரும்புப் பெண் சுகன்தி
கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் அபாரமாக விளையாடி இலங்கை அணியை இறுதிப் போட்டி வரை அழைத்துச் செல்வதற்கு முக்கிய காரணமாக இருந்த தர்ஜினி சிவலிங்கம் இலங்கையின் வலைப்பந்தாட்ட நிர்வாகத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றங்கள் மற்றும் முரண்பாடுகள் காரணமாக கடந்த 3 வருடங்களாக எந்தவொரு சர்வதேசப் போட்டிகளிலும் இலங்கை அணிக்காக விளையாடவில்லை.
எனினும், தேசிய வலைப்பந்தாட்ட அரங்கில் சுமார் 13 வருடங்களாக இலங்கை அணிக்காக ஆசிய மற்றும் உலக அரங்கில் திறமைகளை வெளிப்படுத்தி வெற்றிகளைப் பெற்றுக்கொடுத்த தர்ஜினி சிவலிங்கம், முதற்தடவையாக அவுஸ்திரேலியாவின் வெஸ்ட் பெல்கன்ஸ் மற்றும் மெல்பேர்ன் சென்ட். எல்பன்ஸ் அணிகளுக்காக கடந்த வருடம் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
இதன்படி, வெளிநாடொன்றில் தொழில்சார் வலைப்பந்தாட்ட விளையாட்டில் ஈடுபடுவதற்கு இலங்கையிலிருந்து ஒப்பந்தம் செய்யப்பட்ட முதலாவது வீராங்கனை என்ற பெருமையையும் தர்ஜினி சிவலிங்கம் பெற்றுக்கொண்டார்.
தர்ஜினிக்கு கிடைத்த இந்த வாய்ப்பு இலங்கை வலைப்பந்தாட்ட அணியின் முன்னாள் வீராங்கனையும், புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பயிற்றுவிப்பாளருமான திலகா ஜினதாஸ மற்றும் தர்ஜினியின் முகாமையாளர் எஸ். கோபினாத்தின் முயற்சியினால் கிடைத்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
இந்த நிலையில், 11ஆவது தடவையாகவும் சிங்கப்பூரில் கடந்தவாரம் நிறைவுக்கு வந்த ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் தொடரில் இலங்கை அணி வெற்றிவாகை சூடியது, இந்த வெற்றிக்கு இலங்கை அணியின் முன்னாள் பயிற்றுவிப்பாளர் திலகா ஜினதாசவின் மீள்வருகையும், தர்ஜினி சிவலிங்கத்தின் அபார ஆட்டமும் தான் முக்கிய பங்கு வகித்தன. எனவே பல சவால்களுக்கு மத்தியில் இந்த வெற்றியைப் பெற்றுகொடுத்த சாதனை நாயகி தர்ஜினி சிவலிங்கத்துடன் மேற்கொண்ட விசேட நேர்காணலை இங்கு பார்க்கலாம்.
- ஆசிய கிண்ணத்தை ஐந்தாவது தடவையாக இலங்கை அணி வெற்றிகொண்டது. உங்களது மனநிலை எவ்வாறு உள்ளது?
உலகக் கிண்ணத்திற்கு தெரிவாக வேண்டும் என்ற நோக்கத்துடனேயே சிங்கப்பூர், மலேஷியா மற்றும் ஹொங்கொங் ஆகிய அணிகள் களமிறங்கியிருந்தன. எனவே, இம்முறை போட்டிகள் அனைத்தும் மிகவும் சவால்மிக்கதாக அமைந்தது. யாரும் இங்கு வந்து தோல்வியைத் தழுவுவதற்கு விரும்பவில்லை. ஆனாலும், பயிற்சியாளரின் ஒருசில வியூகங்களாலும் எமது வீராங்கனைகள் ஒன்றாக விளையாடி அந்த மூன்று அணிகளுக்கும் பலத்த போட்டியைக் கொடுத்து ஆசிய கிண்ணத்தை வென்றோம்.
Tharjini Sivalingam on Asian Netball Championship
Uploaded by ThePapare.com on 2018-09-13.
- நீங்கள் கடந்த மூன்று வருடங்களாக இலங்கை அணிக்காக விளையாடி வருகின்றீர்கள். எனினும், உங்களது மீள்வருகையும், இலங்கை அணியின் அனைத்து வெற்றிகளுக்கும் நீங்கள் தான் முக்கிய காரணமாக இருந்தீர்கள். அதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்?
உண்மையில் இது தனியொருவரால் மாத்திரம் பெற்றுக்கொண்ட வெற்றி அல்ல. போட்டியின் போது மைதானத்திற்கு உள்ளே இருக்கின்ற ஏழு வீராங்கனைகளும், வெளியில் உள்ள நான்கு வீராங்கனைகளும் உட்பட் 12 பேரும் ஒன்றாக சேர்ந்து விளையாடியதன் காரணமாகத்தான் இந்த வெற்றியைப் பெற்றுக் கொண்டோம். எனக்கு வழங்கப்பட்ட பொறுப்பை நான் சரிவர செய்தேன். அதேபோல, என்மீதும், எனது அனுபவத்தின் மீதும் அணியின் பயிற்றுவிப்பாளர், முகாமைத்துவம் மற்றும் வலைப்பந்தாட்ட சம்மேளனம் ஆகியன மிகப் பெரிய நம்பிக்கை வைத்திருந்தனர். அந்த நம்பிக்கையை நான் நிறைவேற்றிக் கொடுத்தேன்.
- நீங்கள் அவுஸ்திரேலியாவுக்குச் சென்று தொழில்சார் வலைப்பந்தாட்டப் போட்டிளில் அங்குள்ள கழகங்களுக்காக விளையாடி இருந்தீர்கள். அங்கு பெற்ற அனுபவத்தைப் பற்றிச் சொல்லுங்கள்?
உண்மையில் நான் கடந்த மூன்று வருடங்களாக இலங்கையில் விளையாடவில்லை. அப்போது நான் இனிமேல் வலைப்பந்தாட்டம் விளையாடப் போவதில்லை என முடிவெடுத்திருந்தேன். ஆனால் இலங்கை அணியின் பயிற்சியாளராக திலகா ஜினதாச மீண்டும் பொறுப்பேற்ற பிறகு அவருடைய வேண்டுகோளுக்கு இணங்க நான் மீண்டும் இலங்கை அணிக்காக விளையாடினேன். அதுமாத்திரமின்றி, அவருடைய உதவியுடன் நான் அவுஸ்திரேலியாவுக்குச் சென்று அங்குள்ள உள்ளூர் கழகங்களுக்காக விளையாடினேன். எனவே என்னை இந்த இடத்துக்கு கொண்டு வருவதில் முக்கிய பங்குதாரராக இருந்த எனது பயிற்சியாளர் திலகா ஜினதாசவுக்கு இந்த நேரத்தில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
அதேபோன்று, அவுஸ்திரேலியாவில் என்னை கவனித்துக் கொண்ட நிகொலஹா ரிச்சாஜனை இந்த நேரத்தில் ஞாபகப்படுத்த விரும்புகிறேன். அவுஸ்திரேலிய வலைப்பந்தாட்ட அணியின் நட்சத்திர வீராங்கனைகளில் ஒருவரான ரிச்சாஜன், ஒலிம்பிக் மற்றும் பொதுநலவாய போட்டிகளில் பதக்கம் வென்றவரும் ஆவார்.
அத்துடன், தற்போது அவுஸ்திரேலிய கழக வலைப்பந்தாட்ட போட்டிகளில் பயிற்சியாளாராகவும் செயற்பட்டு வருகின்ற மார்க்கையும் இந்த இடத்தில் குறிப்பிட விரும்புகின்றேன். வலைப்பந்தாட்டமே வேண்டாம் என்று இருந்த என்னை மீண்டும் வலைப்பந்தாட்டத்தில் ஈடுபட வைத்தமைக்கும், இலங்கைக்குச் சென்று மீண்டும் விளையாட அனுமதி அளித்தமைக்கும் அவர்கள் இருவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். எனவே அவுஸ்திரேலியாவில் பெற்ற அனுபவங்கள் இந்த முறை ஆசிய கிண்ணத்தில் சிறப்பாக விளையாடுவதற்கு நிறைய உதவியாக இருந்தது.
- 2019 இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண வலைப்பந்தாட்டப் போட்டிகளுக்கான உங்களது ஆயத்தம் குறித்து சொல்லுங்கள்?
ஆசிய கிண்ணத்தை வென்ற எங்களுக்கு உலகக் கிண்ணத்தை வெல்வதற்கான அனைத்து தகுதியும் இருக்கின்றது. அந்த நம்பிக்கை எம்மிடம் நிறைய உள்ளது. ஆனால் அதற்கான வசதிகள் இல்லாமை கவலையளிக்கிறது. எமக்கென்று தனியான உள்ளக அரங்கொன்று இல்லை. நீண்ட தூரப் பயணங்களை மேற்கொண்டுதான் இங்கு வருகின்றோம். எனவே எமக்கான வசதிகளை அதிகாரிகள் பெற்றுத் தந்தால் நிச்சயம் உலகக் கிண்ணத்தில் எங்களால் சாதிக்க முடியும். அதேபோல, நான் உலக்கிண்ணத்தில் விளையாடுவது குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை.
இம்மாதம் ஆரம்பமாகும் 88வது சேர். ஜோன் டாபர்ட் மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்
- நீங்கள் தொடர்ந்து எவ்வளவு காலம் நாட்டுக்காக விளையாடுவதற்கு எதிர்பார்த்துள்ளீர்கள்?
அது தொடர்பில் நான் எந்தவொரு தீர்மானத்தையும் இதுவரை எடுக்கவில்லை. எனினும், நான் தொடர்ந்து விளையாடுவேனா? இல்லையா? என்பது தொடர்பில் பயிற்சியாளரும், வலைப்பந்தாட்ட நிர்வாகமும் தான் முடிவெடுக்க வேண்டும். ஆனால் சிறந்த பயிற்சியாளரும், நிர்வாகமும் தொடர்ந்து இருந்தால் நான் நிச்சயம் இலங்கைக்காக விளையாடுவேன்.
- இறுதியாக என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
என்னை வலைப்பந்தாட்ட உலகில் நட்சத்திர வீராங்கனையாக மாற்றுவதற்கு காரணமாக இருந்த எனது பெற்றோர், குடும்பத்தினர், வலைப்பந்தாட்ட சம்மேளனம், பயிற்சியாளர், முன்னாள் மற்றும் இன்னாள் வீராங்கனைகள், நான் தொழில் செய்கின்ற செலான் வங்கி மற்றும் அங்கு பணிபுரிகின்ற அதிகாரிகளுக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
அதுமாத்திரமின்றி, என்னை வாழவைத்த எனது மண்ணுக்கும், என்னை எப்போதும் நேசிக்கின்ற, எனக்காக பிரார்த்தனை செய்கின்ற அனைத்து தமிழ் மக்களுக்கும் வாழ்நாள் முழுவதும் நன்றி உடையவளாக இருக்க விரும்புகிறேன்.
மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க