தென்னாபிரிக்காவில் இம்மாதம் ஆரம்பமாகவுள்ள 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்காக அறிவிக்கப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் குழாமில் கொழும்பு ஸாஹிரா கல்லூரியின் முன்வரிசை துடுப்பாட்ட வீரரான மொஹமட் சமாஸ் இடம்பிடித்துள்ளார்.
வென்னப்புவ ஜோசப் வாஸ் கல்லூரியின் இடதுகை துடுப்பாட்ட வீரர் நிப்புன் தனன்ஜயவின் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள இலங்கை இளையோர் குழாமில் மேலதிக விக்கெட் காப்பாளராகவும், துடுப்பாட்ட வீரராகவும் மொஹமட் சமாஸ் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.
U19 உலகக் கிண்ணத்துக்கான இலங்கை குழாம் அறிவிப்பு
தென்னாபிரிக்காவில் இம்மாதம் 17ம் திகதி ஆரம்பமாகவுள்ள 19…..
இதற்கு அண்மைக்காலமாக அவர் இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணியில் துடுப்பாட்டம் மற்றும் களத்தடுப்பில் வெளிக்காட்டிய திறமைகள் தான் முக்கிய காரணமாக இருந்தன.
சமாஸ் 2018இல் நடைபெற்ற பங்களாதேஷ் இளையோர் அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் முதல்தடவையாக இலங்கை இளையோர் அணியில் இடம்பிடித்திருந்த நிலையில், இறுதியாக கடந்த வருடம் ஜனவரி மாதம் நடைபெற்ற அவுஸ்திரேலிய 19 வயதுக்குட்பட்டோர் அணியுடனான இளையோர் ஒருநாள் மற்றும் இளையோர் டெஸ்ட் தொடர்களுக்கான இலங்கை குழாத்திலும் இடம்பிடித்திருந்தார்.
அத்துடன் அவுஸ்திரேலிய அணியுடனான இரண்டாவது ஒருநாள் போட்டியில் அரைச்சதம் கடந்து 79 ஓட்டங்களை எடுத்து அசத்தியிருந்தார்.
இதனையடுத்து இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் கடந்த வருடம் ஜூலை மாதம் நடாத்தப்பட்ட 19 வயதுக்குபட்ட வீரர்களுக்கான சுப்பர் ப்ரொவின்ஷியல் ஒருநாள் தொடரில் கொழும்பு அணியில் சமாஸ் இடம்பெற்றிருந்தார்.
எனவே மிகவும் குறுகிய காலத்தில் அனைவரது கவனத்தையும் ஈர்த்து நம்பிக்கை நட்சத்திரமான மொஹமட் சமாஸ், கொழும்பை பிறப்பிடமாகக் கொண்டவர்.
அவருடைய தந்தை நௌபர் பாஸி ஒரு வியாபாரி. சமாஸை ஒரு கிரிக்கெட் வீரராக மாற்றுவதற்கு அவருடைய தந்தை தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கி வருகின்றார்.
சமாஸின் தாயின் பெயர் பிரோஷா நௌபர். அவருக்கு ஒரு தங்கையும், 2 தம்பிமாரும் உள்ளனர். மூன்று பேரும் தற்போது கல்வி கற்கின்றனர்.
சிறுவர்கள் பொதுவாக பாதையோரங்களில் கிரிக்கெட் விளையாடுவதைப் போல கிரிக்கெட் விளையாடி, அதன்மீது கொண்ட அதீத ஆர்வத்தின் காரணமாக இன்று இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணியில் இடம்பிடித்துள்ள மொஹமட் சமாஸ், தனக்கு 8 வயதாக இருக்கும் போதே சுஜீவ ப்ரியதர்ஷன என்ற பயிற்சியாளரின் கிரிக்கெட் அகடமியில் இணைந்துகொண்டார்.
இதன் பிரதிபலனாக சப்ராஸ் என்பவரது முயற்சியினால் கொழும்பில் உள்ள பிரபல பாடசாலைகளில் ஒன்றான மருதானை ஸாஹிரா கல்லூரியில் இணைந்துகொள்ளும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. இதன்படி தரம் 8இல் இருந்து அவர் ஸாஹிரா கல்லூரியில் கல்வி கற்றார்.
பாடசாலைக் காலத்தில் தன்னுடைய கிரிக்கெட் அகடமி ஊடாக கிரிக்கெட் திறமையை வளர்த்துக் கொண்ட சமாஸ், பிற்காலத்தில் பாடசாலை மட்டப் போட்டிகளில் ஓட்டங்களைக் குவித்து தேர்வாளர்களின் கவனத்தைப் பெற்றுக் கொண்டார்.
ஆரம்பம் காலம் முதல் சமீர் என்பவரது பயிற்றுவிப்பின் கீழ் தனது கிரிககெட் வாழ்க்கைக்கான அடித்தளத்தைை போட்ட சமாஸ், ஹமீன், பிரதீப், சுஜீவ, சப்ராஸ், தாரக்க, தொட்டகமுவ மற்றும் அமில உள்ளிட்ட பயிற்சியாளர்கள் பட்டாளத்தின் மூலமாக தன்னை ஒரு கிரிக்கெட் வீரராக பட்டை தீட்டிக் கொண்டார்.
இந்த நிலையில், இலங்கை இளையோர் அணிக்கான வாய்ப்பைப் பெற்றுக் கொள்வதற்காக, முதல்தடவையாக சுனில் ஆசிரியரின் 13 வயதுக்குட்பட்ட அணியில் இடம்பிடித்த அவர், 15 வயதில் மலேசியாவுக்கான கிரிக்கெட் சுற்றுப்பயணத்தில் இடம்பெற்று விளையாடியிருந்தார்.
இதனையடுதது 19 வயதுக்குட்பட்ட பிரிவில் இடம்பிடித்த அவர், 2ஆவது வருடத்தில் 850 ஓட்டங்களைக் குவித்து மேல் மாகாண வடக்கு அணிக்காக விளையாடுகின்ற வாய்ப்பைப் பெற்றுக் கொண்டார்.
எனினும், அந்த அணிக்காக விளையாடிய முதலாவது வருடத்தில் எதிர்பார்த்தளவு திறமைகளை வெளிப்படுத்த தவறிய சமாஸ், 2ஆவது வருடத்தில் 650 ஓட்டங்களைக் குவித்ததுடன், இறுதிப் போட்டியில் 49 ஓட்டங்களை எடுத்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.
இதன்பிரதிபலனாக இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணியில் விளையாடுகின்ற வாய்ப்பை அவர் பெற்றுக் கொண்டார்.
இதன்படி, 2018ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் பங்களாதேஷ் அணிக்கெதிரான போட்டித் தொடரில் முதல்தடவையாக இலங்கை அணிக்காக விளையாடிய சமாஸ், தொடர்ந்து நடைபெற்ற 3 தொடர்களில் அடுத்தடுத்து இலங்கை அணியில் இடம்பிடித்து விளையாடினார்.
இலங்கைக் கிரிக்கெட்: 2019 ஒரு மீள்பார்வை
நாம் பிரியாவிடை கொடுத்த 2019 ஆம் ஆண்டு இலங்கை கிரிக்கெட்….
அதன்பிறகு இடைக்கிடையே இலங்கை அணிக்கு உள்ளேயும், வெளியேயும் இருந்த சமாஸுக்கு இறுதியாக மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் தொடரில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
ஒரு கிரிக்கெட் வீரராக இலங்கை அணிக்கு தெரிவாகுவதும், இறுதி பதினொருவர் அணியில் விளையாடுவதென்பதும் இலகுவான விடயமல்ல.
அதற்காக வீரர் ஒருவர் செய்கின்ற தியாகங்களை, பட்ட கஷ்டங்களை வார்த்தைகளால் சொல்ல முடியாது. அவ்வாறான அரிய வாய்ப்பொன்றை பெற்றுக்கொண்ட மொஹமட் சமாஸை உலகத்தரம் வாய்ந்த ஒரு கனிஷ்ட கிரிக்கெட் வீரராக மாற்றுவதில் இலங்கை இளையோர் அணியின் பயிற்சியாளர்கள் அதிக பங்களிப்பு வழங்கியதாக மொஹமட் சமாஸ் தெரிவிக்கின்றார்.
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான ஹஷான் திலகரட்ன, இலங்கை இளையோர் அணியின் தலைமைப் பயிற்சியாளராக செயற்பட்டு வருகின்றார். அவரின் வழிகாட்டலானது மொஹமட் சமாஸின் கிரிக்கெட் வாழ்க்கையில் பல மாற்றங்களைக் ஏற்படுத்தியது.
மறுபுறத்தில் இலங்கை அணியின் முன்னாள் பந்துவீச்சாளர்களான சமிந்த வாஸ், உபுல் தரங்க ஆகியோரது அனுபவங்களும், ஆலோசனைகளும் சமாஸின் உலகக் கிண்ண கனவை நனவாக்குவதற்கு முக்கிய காரணமாக இருந்தன என்றால் மிகையாகாது.
கால்பந்தை நேசித்து கிரிக்கெட்டில் ஜொலித்த அசித்த பெர்னாண்டோ
பாடசாலையின் இடைவெளி நேரங்களில் மாணவர்கள் பல…..
இவ்வாறு இலங்கையின் முன்னணி நட்சத்திர வீரர்களிடமிருந்து கிரிக்கெட் அறிவை மிகவும் குறுகிய காலத்தில் பெற்றுக்கொண்ட சமாஸின் ஆட்டத் திறமையை 2016இற்குப் பிறகு அவரால் தக்கவைத்துக் கொள்ள முடியாமல் போனது. இதை தனது கிரிக்கெட் வாழ்க்கையில் மறக்கமுடியாத காலம் என அவர் செல்கின்றார்.
அதேநேரம், ஆடுகளத்துக்குச் சென்றால் அதிகம் கோபப்படுகின்ற சுபாவத்தைக் கொண்ட மொஹமட் சமாஸை, பாடசாலைக் காலத்தில் இருந்து எதிரணி வீரர்கள் வம்புக்கு இழுப்பது வழக்கம். இதனால் பல தடவைகள் ஆட்டமிழந்த சந்தர்ப்பங்களும் உண்டு.
அதேபோல, ஆரம்பத்தில் இருந்து ஒரு ஓட்டத்தை எடுப்பதில் கவனக்குறைவுடன் விளையாடி வருகின்ற சமாஸ், அந்த தவறை கடந்த ஒருசில மாதங்களில் திருத்திக் கொண்டதாக குறிப்பிட்டார்.
சாதாரணமாக ஒரு மனிதனிடம் இருக்கின்ற அனைத்து குணாதிசியங்களையும் கொண்ட இளம் வீரரான மொஹமட் சமாஸ், இன்று அனைவராலும் பேசப்படுகின்ற ஒரு கிரிக்கெட் வீரராக மாறிவிட்டார்.
கடந்த 2 வாரங்களாக உலகக் கிண்ணத் தொடருக்காக தெரிவு செய்யப்பட்ட இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணி தம்புள்ளையில் விசேட பயிற்சி முகாமில் ஈடுபட்டிருந்தது. இந்த குழாத்தில் மொஹமட் சமாஸும் இடம்பிடித்திருந்தார்.
இந்த சந்தர்ப்பத்தில் தான் தானும் இலங்கை அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டதை அறிந்து கொண்டதாக சமாஸ் தெரிவித்தார்.
இந்த நிலையில், 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண இலங்கை அணியில் இடம்பெற கிடைத்தமையிட்டு கருத்து தெரிவித்த மொஹமட் சமாஸ்,
”உண்மையில் உலகக் கிண்ண அணியில் எனக்கு வாய்ப்பு கிடைக்கும் என மிகப் பெரிய எதிர்பார்ப்புடன் இருந்தேன். இதற்காக நான் நிறைய பயிற்சிகளை எடுத்தேன்.
இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணிக்காக ஒருசில தொடர்களில் விளையாடினேன். எனவே அங்கு வெளிப்படுத்திய திறமையைப் பார்த்து தேர்வாளர்கள் என்னையும் உலகக் கிண்ண அணியில் இணைத்துக் கொண்டுள்ளனர்” என்றார்.
எனவே மிகவும் குறுகிய காலத்தில் தேசிய மட்டத்தில் ஜொலித்த சமாஸ், தன்னுடைய வெற்றிப் பயணத்துக்கு முதலில் எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.
பானிபூரி விற்று ஐ.பி.எல் மூலம் கோடீஸ்வரனான 17 வயது இளைஞன்
மும்பையை சேர்ந்த இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால்…..
அதனைத்தொடர்ந்து தன்னுடைய விருப்பத்திற்கு அமைய ஒரு கிரிக்கெட் வீரராக மாறுவதற்கான அனைத்து பங்களிப்பினையும் எந்தவொரு மறுப்புமின்றி சிறுவயது முதல் வழங்கி வருகின்ற பெற்றோர்களுக்கும் நன்றிகளை தெரிவிக்கின்ற சமாஸ், இலங்கை 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண அணிக்கு தெரிவாகுவதற்கு முக்கிய காரணமாக தனக்கு சிறுவயது முதல் இன்று வரை கிரிக்கெட் சொல்லிக் கொடுத்த அனைத்து பயிற்சியாளர்களுக்கும், தன்னோடு எப்போதும் இருக்கின்ற உறவினர்கள், நண்பர்கள் என அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்தார்.
இறுதியாக, உலகக் கிண்ண அணியில் இடம்பெற்ற மொஹமட் சமாஸுக்கு தென்னாப்பிரிக்கா சென்று குறைந்தபட்சம் ஒரு போட்டியிலாவது விளையாடுவதற்கான வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதுதான் அனைவரது எதிர்பார்ப்பாகும்.
அதேபோல, உலகக்கிண்ண போட்டிகளுக்குப் பிறகு கழகமட்ட போட்டிகளில் விளையாடுவதற்கு ஆர்வத்துடன் உள்ள மொஹமட் சமாஸ், இலங்கை வளர்ந்துவரும் அணி மற்றும் இலங்கை ஏ அணிகளுக்காக விளையாடி இலங்கை அணிக்காக விளையாடுகின்ற இலட்சியத்துடன் உள்ளார்.
எனவே அவரது அனைத்து எதிர்பார்ப்புகளும் வெற்றிபெற வேண்டுமென இலங்கையின் முதல்தர விளையாட்டு இணையத்தளமான ThePapare.com வாயிலாக மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<