இந்தியாவில் நடைபெறவுள்ள உலகக்கிண்ணத் தொடருக்கான போட்டி அட்டவணையில் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது என இந்திய கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
தொடர்ச்சியாக இரண்டு போட்டிகளை நடத்துவதில் சிக்கல்கள் உள்ளதாக ஹைதராபாத் கிரிக்கெட் சங்கம், இந்திய கிரிக்கெட் சபையிடம் கோரிக்கையை விடுத்திருந்தது.
உலகக் கிண்ண அட்டவணையில் மீண்டும் மாற்றம்?
ஒக்டோபர் 9, 10ம் திகதிகளில் முறையே நியூசிலாந்து – நெதர்லாந்து மற்றும் இலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டிகள் ஹைதராபாத் மைதானத்தில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது.
இந்தநிலையில் இரண்டு போட்டிகளை தொடர்ச்சியான நாட்களில் நடத்துவதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் பயிற்சி ஏற்பாடுகளை ஹைதரபாத் கிரிக்கெட் சங்கத்தால் செய்ய முடியாது என தெரிவித்திருந்தது. அதுமாத்திரமின்றி இந்தப் போட்டிகளுக்கான அட்டவணையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தது.
எவ்வாறாயினும் குறிப்பிட்ட இந்த கோரிக்கையை இந்திய கிரிக்கெட் சபை நிரகாரித்துள்ளதுடன், குறித்த நான்கு அணிகளுக்குமான பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதிசெய்யுமாறு ஹைதராபாத் கிரிக்கெட் சங்கம், மாநில பொலிஸிடம் கோரியுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் வாரியம் மற்றும் இந்திய கிரிக்கெட் சபை என்பன ஆரம்பத்தில் வெளியிட்ட அட்டவணையில் இந்தியா – பாகிஸ்தான் போட்டி ஒக்டோபர் 15ம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் பின்னர் வெளியான அறிவிப்பில் குறித்தப் போட்டி 14ம் திகதிக்கு மாற்றப்பட்டது.
குறிப்பிட்ட இந்த மாற்றத்தின் காரணமாக இலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி 12ம் திகதியிலிருந்து 10ம் திகதிக்கு மாற்றப்பட்டது. இதன்காரணமாகவே ஹைதராபாத்தில் தொடர்ச்சியாக இரண்டு போட்டிகளை நடத்தவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
உலகக்கிண்ணத் தொடரானது எதிர்வரும் ஒக்டோபர் 5ம் திகதி முதல் நவம்பர் 19ம் திகதிவரை இந்தியாவின் 10 மைதானங்களில் நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<