உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று நோய் காரணமாக 2022இல் செனகலின் டாக்கார் நகரில் நடைபெறவிருந்த இளையோர் ஒலிம்பிக் விளையாட்டு விழாவை 2026ஆம் ஆண்டு வரை ஒத்திவைப்பது தொடர்பில் அந்நாட்டு ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு சர்வதேச ஒலிம்பிக் சங்கம் அனுமதி அளித்துள்ளது.
கொரோனா பீதியினால் ஒலிம்பிக் போட்டிகள் ஒத்திவைப்பு
இதுதொடர்பில் சர்வதேச ஒலிம்பிக் சங்கத்துக்கும், செனகல் நாட்டு அரசாங்கத்துக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு சர்வதேச ஒலிம்பிக் சங்கத்தின் நிறைவேற்றுக் குழுவினால் நேற்று (15) அனுமதி வழங்கப்பட்டது.
அதேநேரம், நாளை (17) நடைபெறவுள்ள சர்வதேச ஒலிம்பிக் சங்க பொதுக்கூட்டத்தின் போது குறித்த உடன்படிக்கையின் அறிக்கை அங்கத்தவர்களின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்படும் எனவும் விக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, இளையோர் ஒலிம்பிக் விளையாட்டு விழா நான்கு வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டாலும், 2026இல் திட்டமிட்டபடி செனகல் நாட்டில் தான் குறித்த விளையாட்டு விழா நடைபெறும் என சர்வதேச ஒலிம்பிக் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், சர்வதேச ஒலிம்பிக் சங்கத்தின் அங்கத்தவர்கள் மற்றும் டாக்கார் 2022 இளையோர் ஒலிம்பிக் விளையாட்டு விழா ஏற்பாட்டுக் குழுவின் தலைவரான மமடூ டியங்னாவும் (Mamadou Diagna) 2026இல் இந்த விளையாட்டு விழாவை மிகவும் சிறப்பான முறையில் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
Video – ThePapare விளையாட்டுக் கண்ணோட்டம் பாகம் – 123
இந்த அறிவிப்பானது பெரும்பாலான இளம் வீரர்களுக்கு ஏமாற்றமாக இருந்தாலும், கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் சர்வதேச ஒலிம்பிக் சங்கத்துக்கும், செனகல் அரசுக்கும் இடையில் ஏற்படுத்திக் கொண்ட இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையை வீரர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என சர்வதேச ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் தோமஸ் பக் தெரிவித்துள்ளார்.
அத்துடன், உலக நாடுகள் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ள இந்த தருணத்தில் இவ்வாறானதொரு முடிவை எடுத்த செனகல் நாட்டு அரசுக்கு தனது மனமார்ந்த நன்றிகளையும் அவர் தெரிவித்தார்.
இதனிடையே, 2022 இளையோர் ஒலிம்பிக் விளையாட்டு விழாவை ஒத்திவைத்தமை தொடர்பில் செனகல் நாட்டு ஜனாதிபதி வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
இளையோர் ஒலிம்பிக் விளையாட்டு விழா மீண்டும் செனகல் நாட்டில் ஏற்பாடு செய்வதற்கான பூரண ஒத்துழைப்பினை சர்வதேச ஒலிம்பிக் சங்கத்துக்கு வழங்குவதற்கு தமது அரசு தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
2021இல் எளிமையான ஒலிம்பிக் விளையாட்டு விழா
மேலும், ஆபிரிக்கா கண்டத்தில் நடைபெறவுள்ள முதலாவது ஒலிம்பிக் விளையாட்டு விழாவை உலக மக்கள் அனைவருக்கும் மறக்க முடியாத ஒரு நிகழ்வாக மாற்றியமைப்பதே தமது எதிர்பார்ப்பாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, இந்த மாதம் 24ஆம் திகதி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறவிருந்த 32ஆவது கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டு விழாவை கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அடுத்த ஆண்டு வரை ஒத்திவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க