ரியல் மெட்ரிட் வீரர்கள் மேலே தூக்கி எறிய சினேடின் சிடேன் மீண்டும் ஒருமுறை காற்றில் பறந்தார். சிடேன் மீண்டும் ரியல் மெட்ரிட் திரும்ப அந்த அணிக்கு மீண்டும் பிரதான கிண்ணம் ஒன்றை முத்தமிட முடிந்துள்ளது.
ரியல் மெட்ரிட் அணி ஸ்பானிய லீக் கிண்ணமான லா லிகாவை 34 ஆவது தடவையாக வெற்றிகொண்டிருப்பதோடு 2017 ஆம் ஆண்டுக்கு பின்னர் முதல் முறையாக கைப்பற்றியது.
கொவிட் 19 எனப்படும் கொரோனா தொற்று இடைவெளிக்குப் பின் தனது திறமையின் உச்சத்துக்கு வந்த ரியல் மெட்ரிட் வியாழக்கிழமை (16) ஸ்பெயின் தலைநகர் மெட்ரிட்டில் நடந்த வெல்லாரியல் அணிக்கு எதிரான போட்டியை 2-1 என்ற கோல் வித்தியாசத்தில் வென்றதன் மூலமே சம்பியன் நாமத்தை உறுதி செய்தது.
லிவர்பூலின் 30 ஆண்டு கனவு நிறைவேறியது
இம்முறை லா லிகாவில் சம்பியனாவதற்கு பார்சிலோனாவுடன் கடுமையாக போட்டிபோட வேண்டி ஏற்பட்டபோதும் பார்சிலோனா தனது சொந்த மைதானத்தில் நடைபெற்ற 10 வீரர்களுடனான ஒசாசுனா அணிக்கு எதிரான போட்டியில் 2-1 என தோற்றது மெட்ரிட்டுக்கே கிண்ணம் என்பது உறுதியானது.
எனவே, ரசிகர்கள் இன்றி வெறிச்சோடிய அரங்கில் நடபெற்ற போட்டியில் கரிம் பென்சமா பெற்ற இரட்டை கோல்கள் மூலமே ரியல் மெட்ரிட் வெற்றியை உறுதி செய்தது. இது ரியல் மெட்ரிட் தொடர்ச்சியாக பெறும் 10 ஆவது லீக் வெற்றியாகவும் இருந்தது.
அதாவது கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக லா லிகா போட்டிகள் நிறுத்தப்படும்போது பார்சிலோனாவை இரண்டு புள்ளிகளால் பின் தள்ளி முதலிடத்தை பெற்ற ரியல் மெட்ரிட் அது தொடக்கம் அசுர வேகம் பெற்று ஒரு போட்டியை மிச்சம் வைத்து கிண்ணத்தை வென்றுள்ளது.
“இது எனது வாழ்வின் மகிழ்ச்சியான நாட்களில் ஒன்று” என்று குதூகலிக்கிறார் சிடேன். இத்தனைக்கும் பிரான்ஸ் முன்னாள் வீரரான சிடேன் தான் ஆடிய காலத்தில் உலகக் கிண்ணம் மற்றும் சம்பியன்ஸ் லீக் கிண்ணங்களையும் வென்றவர் ஆவார். “சிக்கல்கள் மற்றும் நடந்த எல்லாவற்றுக்கும் பின்னர் கிடைத்த கிண்ணம் இது. இதனை ரசிகர்களுடன் கொண்டாட நான் விரும்புகிறேன். எனினும் தமது அணி மீண்டும் வெற்றி பெற்றதை வீடுகளில் இருந்து அவர்கள் மகிழ்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருப்பார்கள் என்று உறுதியாக நம்புகிறேன்” என்கிறார் சிடேன்.
2022 பிஃபா உலகக் கிண்ண போட்டி அட்டவணை வெளியீடு
சிடேன் இத்தனை மகிழ்ச்சி அடைவதற்கு காரணமும் இருக்கிறது. அவர் ரியல் மெட்ரிட்டை விட்டு செல்லமாட்டார் என்று எல்லோரும் உறுதியாக நம்பியிருந்தபோது 2018 ஆம் ஆண்டு அந்த அணியில் இருந்து விலகினார். அவர் மீண்டும் ரியல் மெட்ரிட் திரும்பமாட்டார் என்று அதனை விடவும் உறுதியாக நம்பி இருந்தபோது கடந்த ஆண்டு மீண்டும் அந்த அணிக்கு திரும்பினார்.
அதாவது, ரியல் மெட்ரிட் அணி தொடர்ச்சியாக மூன்றாவது சம்பியன்ஸ் லீக்கை வென்று அந்த அணி உச்சத்தில் இருந்தபோதே இனினும் ரியல் மெட்ரிட்டுக்கு தாம் தேவையில்லை என்பது போல் சிடேன் திடீரென்று பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து விலகினார்.
அதனைத் தொடர்ந்து ரியல் மெட்ரிட் அதலபாதாளத்திற்கே விழுந்தது. சிடேனின் விலகலுக்குப் பின் அந்த அணிக்கு மற்றொரு பேரிடியாக போர்த்துக்கல் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ விடைபெற்றார்.
சிடேனுக்கு பின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட ஜுலேன் லெபடிகு நான்கு மாதங்கள் கூட தாங்கவில்லை. அணி தோல்வி மேல் தோல்வியை தழுவ அவர் அதிரடியாக நீக்கப்பட்டார். பின்னர் சன்டியாகோ சொலரியை ஒரு பதில் பயிற்சியாளராகவே ரியல் மெட்ரிட் நியமித்தது. என்றாலும் சட்ட விதிகள் இடம்கொடுக்காததால் நிரந்தர பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.
இப்படியாக ஒரு தளம்பல் சூழலில் ரியல் மெட்ரிட்டால் மைதானத்தில் பெரிதாக சாதிக்க முடியவில்லை. இந்தக் காலப்பிரிவில் ரியல் மெட்ரிட்டினால் 2018 கழக உலகக் கிண்ணம் மற்றும் கடந்த ஆண்டு ஸ்பானிய சுப்பர் கிண்ணங்களை மாத்திரமே வெள்ள முடிந்தது.
ஆனால் பிரதான போட்டிகளான லா லிகா மற்றும் சம்பியன்ஸ் லீக் எட்டாக் கணியானது. லா லிகாவில் கடந்த இரண்டு பருவங்களிலும் பார்சிலோனாவே கோலோச்சியது.
எனவே, அவர் 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் மீண்டும் ரியல் மெட்ரிட் திரும்பியபோது அந்த அணியின் நிர்வாகம், வீரர்கள், ரசிகர்கள் எல்லோருக்குமே அவர் ஓர் ஆபத்பாந்தவன் போன்றே தெரிந்தார். “ரியல் மெட்ரிட்டை அதற்குரிய இடத்திற்கு திருப்பி அழைத்து வருவேன்” என்று சூளுரைத்தே பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றார்.
ஆனால் ஆரம்பத்தில் அது இலகுவாகத் தெரியவில்லை. அப்போது லா லிகாவில் பார்சிலோனாவை விடவும் 12 புள்ளிகளால் பின்தங்கி இருந்த ரியல் மெட்ரிட் சம்பியன்ஸ் லீக்கில் அஜெக்ஸ் அணியிடம் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தது.
கிறிஸ்டியானோ ரொனால்டோ இல்லாமல் சிடேனால் ரியல் மெட்ரிட்டை ஒன்றும் செய்ய முடியாது என்ற விமர்சனங்களும் அவர் மீது வலுத்திருந்தது. “எதிர்வரும் ஆண்டுகளில் நிலைமையை நாம் மாற்றுவோம் என்பது உறுதி” என்று சிடேன் நம்பிக்கையுடன் இருந்தார்.
ஆனால், சிடேன் வந்ததற்காக எல்லாம் ஒரே இரவில் மாறவில்லை. கடந்த பருவத்தில் கடைசி 11 போட்டிகளிலும் ரியல் மெட்ரிட்டின் ஆட்டத்தில் எந்த முன்னேற்றமும் இருக்கவில்லை.
கொவிட்-19 தாக்கத்தால் பிற்போடப்பட்ட FFSL தலைவர் கிண்ணம்
சிடேனுக்கு நட்சத்திர வீரர் ஒருவர் தேவை என்று அந்நாட்டு பத்திரிகைகள் வியாக்கியானங்கள் கூற ஆரம்பித்தன. அது கிலியன் ம்பப்பே அல்லது நெய்மராக இருக்கலாம் என்று செய்திகள் வெளிவர ஆரம்பித்தன.
ஆனால் சிடேனுக்கு அவர்கள் தேவைப்படவில்லை. மன்செஸ்டர் யுனைடட்டின் போல் பொக்பா மீதே அவரின் பார்வை இருந்தது. பொக்பா பற்றிய எதிர்பார்ப்பு ஒரு பக்கம் இருக்க தமக்கு ஒத்துவராமல் இருந்த கிரேத் பேல்லை அவர் அணியில் இருந்து கழற்றிவிடாதது முக்கிய முடிவாக பார்க்கலாம். “எல்லோரின் நன்மைக்காக எடுத்த முடிவு” என்றார் சிடேன்.
பதிலுக்கு ஈடன் ஹசார்ட் 100 மில்லியன் யூரோக்களுக்கு வாங்கப்பட்டார். என்றாலும் வந்த விரைவிலேயே காயமடைந்தது சிடேனின் தலையில் தான் வந்து விடிந்தது.
அதாவது ஏற்கனவே தோல்வியில் துவண்டு கொண்டிருந்த அதே அணியுடனேயே சிடேன் தனது பயணத்தை தொடர்ந்தார். ஆனால் அது கடினமாகவே இருந்தது. சரியாக ஓர் ஆண்டுக்கு முன் அமெரிக்கா சென்று அட்லடிகோ மெட்ரிட் அணியுடன் நட்புறவு ஆட்டம் ஒன்றில் ஆடிய ரியல் மெட்ரிட் அதில் 7-3 என தோற்றதை மறந்திருக்காது.
எனினும் ரியல் மெட்ரிட் மெல்ல மெல்ல முன்னேற ஆரம்பித்தது. மத்திய களத்தில் பேட் வால்வேர்ட் திறமையான ஆட்டத்தை வெளிக்காட்டினார். எதிரணியினரால் கணிக்க முடியாத வீரராக அவர் மாறினார். பின்களமும் வலுப்பெற்றது. கடந்த 21 போட்டிகளில் எதிரணிக்கு ஒன்பது கோல்களை மாத்திரம் விட்டுக்கொடுத்தது.
லெப்ட் பேக் பகுதியில் மார்சலோவுக்கு ஒரு சிறந்த மாற்று வீரர் என்பதை பெர்லாண்ட் மெண்டி நிரூபித்துள்ளார். கோல்காப்பாளர் திபோட் கோர்டொயில் அரணாக இருக்கிறார் என்பதில் நம்பிக்கை இழக்கவில்லை.
எனவே, கடந்த பருவத்தில் 46 கோல்களை விட்டுக்கொடுத்து மூன்றாவது இடத்திற்கு பின்தள்ளப்பட்ட ரியல் மெட்ரிட் இந்தப் பருவத்தில் இன்னும் ஒரு போட்டியே எஞ்சி இருக்கும் நிலையில் 19 கோல்களையே விட்டுக்கொடுத்துள்ளது.
முன்களத்தில் பிரேசிலின் இரு இளம் வீரர்களான வினிசியஸ் ஜூனியர் மற்றும் ரொட்ரிகோ நம்பிக்கை தருகின்றனர். கரிம் பென்சமாவின் திறமையை கூறவேண்டியதில்லை. 32 வயதான அவர் இன்றும் ஐரோப்பாவின் சிறந்த வீரர்களில் ஒருவராக இருந்து வருகிறார்.
ஒன்பது ஆண்டுகளாக ரொனால்டோ ரியல் மெட்ரிட்டில் இருந்தபோது விடா முயற்சியுடனும் தன்னலம் இன்றியும் ஆடிய பென்சமா, ரொனால்டோவின் வெளியேற்றத்தின் பின் கோல் பெறும் திறமையை உச்சபட்சமாக வெளிப்படுத்தி வருகிறார்.
இந்தப் பருவத்தில் 21 கோல்களை பெற்றிருக்கும் அவர் லா லிகாவில் அதிக கோல் பெற்று முதலிடத்தில் இருக்கின்ற பார்சிலோனா நட்சத்திரம் மெஸ்ஸியை (23) முயன்றால் முறியடிக்கலாம்.
எனவே ரியல் மெட்ரிட் அணியின் வெற்றி என்பது தற்செயலானது அல்ல. அதில் சினேடின் சிடேனின் உழைப்பு, போட்டித் தந்திரம் வீரர்களின் உற்சாகம், நம்பிக்கை எல்லாம் கலந்திருக்கிறது.
மேலும் பல வீடியோக்களைப் பார்வையிட
அதிலும் இரண்டு பருவங்களுக்கு முன்னர் ரொனால்டோ ஜுவான்டஸில் இணைந்த பின் ரியல் மெட்ரிட் வென்ற முதல் லீக் கிண்ணம் என்பது குறிப்பிட்டுக் கூற வேண்டியது.
சிடேன் ரியல் மெட்ரிட் கழக பயிற்சியாளராக பெறும் 11 ஆவது கிண்ணம் இதுவாகும். 2016 ஜனவரி மாதம் அவர் முதலில் இந்தப் பொறுப்பை ஏற்ற பின் 2015/16 சம்பியன்ஸ் லீக்கை வென்ற ரியல் மெட்ரிட் சுப்பர் கிண்ணம், ஸ்பானிய சுப்பர் கிண்ணம் மற்றும் கழக உலகக் கிண்ணங்களை வென்றார்.
2016/17 பருவத்தில் லா லிகாவை வென்றதைத் தொடர்ந்து சம்பியன்ஸ் லீக், சுப்பர் கிண்ணம் மற்றும் கழக உலகக் கிண்ணங்களை மீண்டும் தக்கவைத்துக்கொள்ள முடிந்தது. பின்னர் 2017/18 சம்பியன்ஸ் கிண்ணத்தை தொடர்ச்சியாக மூன்றாவது முறை வென்றது உச்சமாக இருந்தது.
அதே பழைய அணியாக மீண்டும் ஆதிக்கம் செலுத்துவதற்கு ரியல் மெட்ரிட்டுக்கு காலம் கூடியிருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.
மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க