ஹொங்கொங்கில் நடைபெறும் உலக ரக்பி தொடர் தெரிவு போட்டித் தொடரில் மீண்டும் ஒருமுறை ஹொங்கொங் அணியானது, இலங்கை ரக்பி அணியை 31-05 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றிகொண்டது. இலங்கை அணி தமது முதலாவது போட்டியில் சிலி அணியிடம் 38-00 என்ற புள்ளிகள் அடிப்படையில் தோல்வியுற்றது குறிப்பிடத்தக்கது.
வெள்ளிக்கிழமை (07) நடைபெற்ற இப்போட்டியில், இலங்கை ரக்பி அணியானது மீண்டும் ஒரு முறை தமக்கு பரீட்சயமான ஹொங்கொங் அணியுடன் பலப் பரீட்சசை நடாத்தியது. ஹொங்கொங் அணியுடன் மோதிய பல்வேறு சந்தர்ப்பங்களில் இலங்கை அணியானது, வெற்றியை பெற்றுக்கொள்ள முடியாமல் தவித்தது. சென்ற மாதம் நடைபெற்ற போர்னியோ 7s போட்டித் தொடரிலும் 31-00 என்ற புள்ளிகள் அடிப்படையில் இலங்கை அணி தோல்வியுற்றமை குறிப்பிடத்தக்கது.
இப்போட்டியில் இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளரான பீட்டர் வூட்ஸ் புதிய தந்திரத்தை உபயோகப்படுத்தினார். இலங்கை அணியானது வலதிலிருந்து இடது நோக்கி தனது ஆட்டத்தை முன் நகர்த்தி சென்றது. இதனால் இலங்கை அணி சிறிது முன் நோக்கி நகர்ந்த பொழுதும், பலம் மிக்க ஹொங்கொங் அணியானது சிறப்பாக அதை தடுத்தது.
ரொவான் வார்டி 3ஆவது நிமிடத்தில் ஹொங்கொங் அணி சார்பாக முதலாவது ட்ரையை வைத்தார். பின்னர் பெஞ்சமின் ரிமெனே தொடர்ந்து இரண்டு ட்ரை வைத்து அசத்தினார்.
இரண்டாம் பாதியில், ஹொங்கொங் அணியானது அதிகம் ஆதிக்கம் செலுத்தியதை காணக்கூடியதாக இருந்தது. மெக்ஸ் வுட் ஹொங்கொங் அணி சார்பாக இரண்டு ட்ரை வைத்தார். இலங்கை அணியின் பின்கள தடுப்பானது மிகவும் மோசமாக காணப்பட்டது.
கண்டி விளையாட்டு கழக வீரரான அனுருத்த வில்வார 12ஆவது நிமிடத்தில் போட்டியில் நுழைந்து, எதிரணி வீரரை தாண்டி சுமார் 80மீட்டர் தூரம் வரை ஓடிச் சென்று இலங்கை அணிக்காக ஆறுதல் ட்ரை வைத்தார். இரண்டு போட்டிகளிலும் இலங்கை அணி ஒரே ஒரு ட்ரை மட்டுமே வைத்தது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.
இலங்கை அணி தனது இறுதி குழு மட்ட போட்டியில் நமீபியா அணியை சந்திக்கவுள்ளது. இப்போட்டியானது இலங்கை நேரப்படி நாளை காலை 7.58 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
சிலி அணியானது நமீபியாவை 26-14 என்ற புள்ளிகள் அடிப்படையில் வென்றது.
இலங்கை அணியானது தனது முதலாவது போட்டியில் சிலி அணியை சந்தித்தது.
இலங்கை அணிக்கு இந்த ஆரம்ப போட்டியானது ஏமாற்றம் அளித்தது. முதல் பாதியில் 12-00 என்ற புள்ளிகளால் முன்னிலை கொண்டிருந்த சிலி அணியானது, போட்டி முடிவுறும் பொழுது 38 புள்ளிகளை பெற்றுக்கொண்டு, வெற்றியை இலகுவாக பெற்றுக்கொண்டது.
இலங்கை அணியானது முழு போட்டியிலும் தமது மத்திய கோட்டை தாண்டி செல்லவே தடுமாறியது. ஒரே ஒரு சந்தர்ப்பத்தில் பாசில் மரிஜா எதிரணி வீரர்களை கடந்து வந்த பொழுதும், அவருக்கு வேறு யாரும் உதவி செய்யாததால், பந்தை பெற்றுக்கொண்ட சிலி அணியானது முதல் ட்ரையை வைத்தது.
இலங்கை அணியானது தமது தலைவரான தனுஷ்க ரஞ்சனை வைத்து பந்தை நகர்த்திய பொழுதும், ரஞ்சனின் வேகத்தை இலகுவாக துரத்தி பிடித்த சிலி அணி வீரர்கள் இலங்கை அணிக்கு கடும் சவால் விடுத்தனர்.
மேலும் இலங்கை அணியானது சிலி வீரர்களை தடுப்பதிலும் சிரமத்தை சந்தித்தது. சிலி அணி வீரர்களை இலகுவாக தடுக்க முடியாததனால், ஒன்றுக்கு மேற்பட்ட வீரர்கள் சிலி வீரரை தடுக்க முற்பட்ட பொழுது, சிலி அணியானது இலகுவாக இடைவெளியின் ஊடக ஓடி சென்று ட்ரை வைத்தது.
அதேவேளை குழு மட்ட போட்டியில், நமீபியா அணியை 22-07 என்ற புள்ளிகள் அடிப்படையில் ஹொங்கொங் அணி வென்றது