ஐசிசி ஒருநாள் உலகக் கிண்ண தகுதிகாண் தொடரில் இரண்டு போட்டிகள் எஞ்சியிருக்கும் நிலையில் மேற்கிந்திய தீவுகளின் முன்னணி வீரர்களான ஜேசன் ஹோல்டர் மற்றும் அல்ஷாரி ஜோசப் ஆகியோர் நாடு திரும்பியுள்ளனர்.
உலகக் கிண்ண தகுதிகாண் தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணி சுபர் சிக்ஸ் சுற்றுக்கு தகுதிபெற்றிருந்த போதும், தங்களுடைய முதல் போட்டியில் தோல்வியடைந்ததன் காரணமாக உலகக் கிண்ணத்துக்கு தகுதிபெறும் வாய்ப்பை இழந்திருந்தது.
>> இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு புதிய உதவிப் பயிற்சியாளர்
மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வரலாற்றில் அந்த அணி முதன்முறையாக உலகக் கிண்ண வாய்ப்பை இழந்துள்ளது. இவ்வாறான நிலையில் அடுத்து நடைபெறவுள்ள இந்தியாவுக்கு எதிரான தொடருக்காக ஜேசன் ஹோல்டர் மற்றும் அல்ஷாரி ஜோசப் ஆகியோர் ஜிம்பாப்வேயிலிருந்து புறப்பட்டுச்சென்றுள்ளனர்.
அனைத்துவகை போட்டிகளிலும் இவர்கள் விளையாடி வரும் நிலையில் அவர்களுடைய பணிச்சுமையை குறைப்பதற்கான நடவடிக்கையாக இவர்கள் இருவரும் மேற்கிந்திய தீவுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரானது மே.தீவுகளின் அடுத்த ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப் பருவகாலத்துக்கான முதல் தொடராக அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<