இலங்கை வலைபந்தாட்ட சம்மேளனத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட டயலொக் கிண்ண சிரேஷ்ட தேசிய வலைபந்தாட்ட சம்பியன்ஷிப்பில் ஹட்டன் நெஷனல் வங்கி (HNB) அணி சம்பியனாக மகுடம் சூடியது.
இதன்மூலம் தொடர்ச்சியாக ஆறாவது தடவையாக ஹட்டன் நெஷனல் வங்கி அணி டயலொக் கிண்ண சிரேஷ்ட தேசிய வலைபந்தாட்ட சம்பியன் பட்டத்தை சுவீகரித்து அசத்தியது.
யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார் என நாடு முழுவதிலும் இருந்து 26 அணிகள் பங்குகொண்ட இம்முறை போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் நடப்புச் சம்பியனான ஹட்டன் நெஷனல் வங்கி அணி, இலங்கை விமானப்படை அணியை எதிர்கொண்டது.
வென்னப்புவ சேர். எல்பட் பீரிஸ் மைதானத்தில் நேற்றுமுன்தினம் (21) நடைபெற்ற இறுதிப் போட்டியில் இரண்டு அணிகளும் சம பலத்துடன் ஆடின.
முதல் 2 ஆட்ட நேர பகுதிகளில் ஆதிக்கம் செலுத்திய ஹட்டன் நெஷனல் வங்கி 44 – 29 என்ற கோல்கள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்று சம்பியன் பட்டத்திற்கான வாய்ப்பை அதிகரித்துக்கொண்டது.
இறுதிப் போட்டியின் முதல் கால் பகுதியை 12 – 9 என்ற கோல்கள் வித்தியாசத்தில் தனதாக்கிக்கொண்ட ஹட்டன் நெஷனல் வங்கி, 2ஆவது கால் பகுதியையும் 14 – 10 என தனதாக்கி இடைவேளையின்போது 28 – 11 என்ற கோல்கள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்தது.
- ஆசிய இளையோர் வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப்பில் இலங்கைக்கு மூன்றாவது இடம்
- நெகிழ்ச்சியூட்டும் இலங்கை வலைப்பந்து அணியின் செயல்பாடு
இடைவேளையின் பின்னர் நடப்புச் சம்பியனான ஹட்டன் நெஷனல் வங்கி அணிக்கு விமானப் படை பலத்த போட்டியைக் கொடுத்திருந்தது. இதனால் 3ஆவது மற்றும் 4ஆவது கால் பகுதி ஆட்டங்கள் 10 – 10 மற்றும்
7 – 7 கோல்கள் அடிப்படையில் சமநிலையில் நிறைவுக்கு வந்தன.
எனவே கடைசி இரண்டு கால் பகுதி ஆட்டத்திலும் நடப்புச் சம்பியனுக்கு விமானப் படை அணி கடுமையான சவாலைக் கொடுத்த போதிலும், ஹட்டன் நெஷனல் வங்கி அணி 40 – 39 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று சம்பியன் பட்டத்தை தொடர்ச்சியாக 6ஆவது தடவையாக தக்கவைகத்துக்கொண்டது.
குறிப்பாக இலங்கை தேசிய வலைப்பந்து அணியைச் சேர்ந்த பெரும்பாலான வீராங்கனைகள் ஹட்டன் நெஷனல் வங்கி அணியில் இடம்பெற்றிருந்த போதிலும், இறுதிப் போட்டியில் விமானப்படை வீராங்கனைகள் தமது அதிரடி ஆட்டத்தை ஒரு கோல் வித்தியாசத்தில் சம்பியனாகும் வாய்ப்பை துரதிஷ்டவசமாக அந்த அணி தவறவிட்டது.
இம்முறை போட்டித் தொடரில் சிறந்த மத்திய கள வீராங்கனையாக விமானப் படையின் ருக்ஷலா ஹப்புஆரச்சியும், சிறந்த கோல் போடும் வீராங்கனையாக ஹட்டன் நெஷனல் வங்கி அணியின் தர்ஷிகா அபேவிக்ரமவும், சிறந்த கோல் தடுப்பு வீராங்கனையாக விமானப் படையின் சுரோகா குமாரியும் தெரிவாகினர்.
அதேபோல, வலைபந்தாட்ட இராணிக்கான விருதை இலங்கை விமானப் படையின் ரஷ்மி திவ்யான்ஜலி பெற்றுக்கொண்டார்.
இதேவேளை, இறுதிப் போட்டிக்கு முன்பதாக நடைபெற்ற 3ஆவது இடத்துக்கான போட்டியில் இலங்கை துறைமுக அதிகார சபை அணியை 61 – 49 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை கடற்படை அணி வெற்றியீட்டியது.
இதனிடையே, இலங்கை வலைப்பந்து சம்மேளனத்தின் தலைவர் விக்டோறியா லக்ஷ்மியின் தலைமையின் இடம்பெற்ற பரிசளிப்பு வைபவத்தில் டயலொக் ஆசியாட்டா பிஎல்சி நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் பிரிவின் பொது முகாமையாளர் அஷானி சேனாரத்ன பிரதம அதிதியாகக் கொண்டு வெற்றிக் கிண்ணம் மற்றும் பதக்கங்களை வழங்கி வைத்தார்.
>>மேலும் பல விளையாட்டு செய்திகளை படிக்க<<