வர்த்தக சேவைத்துறையின் பிரதிநிதிகளான ஹட்டன் நஷனல் வங்கி (HNB) வீராங்கனைகள் 2021ஆம் ஆண்டுக்கான டயலொக் தேசிய வலைப்பந்து சம்பியன்ஷிப் தொடரின் வெற்றியாளர்களாக நாமம் சூடியிருக்கின்றனர்.
>> தேசிய வலைப்பந்து சம்பியன்ஷிப் தொடர் நேற்று ஆரம்பம்
சிரேஷ்ட வீராங்கனைகளுக்கான இந்த டயலொக் தேசிய வலைப்பந்து சம்பியன்ஷிப் தொடர் கடந்த சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய தினங்களில் (22 & 23ஆம் திகதிகளில்) திகன விளையாட்டு அரங்கில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
நாடு பூராகவும் இருந்து பல்வேறு வலைப்பந்து அணிகள் பங்கெடுத்திருந்த இந்த தொடரின் இறுதிப் போட்டிக்கு, இலங்கை வலைப்பந்து அணியின் வீராங்கனைகளை அதிகம் கொண்டிருக்கின்ற ஹட்டன் நஷனல் வங்கி அணியும், இலங்கை விமானப்படை வலைப்பந்து அணியும் தெரிவாகியிருந்தன.
இதில் ஹட்டன் நஷனல் வங்கி அணி தொடரின் காலிறுதி, அரையிறுதிப் போட்டிகளில் முறையே இலங்கை துறைமுக அதிகார சபை அணியினையும், குருநாகல் மாவட்ட அணியினையும் வீழ்த்தி இறுதிப் போட்டி வாய்ப்பினை உறுதி செய்திருக்க மறுமுனையில் இலங்கை விமானப்படை வலைப்பந்து அணி கொழும்பு, இலங்கை இராணுவப்படை அணிகளை முறையே காலிறுதி, அரையிறுதிப் போட்டிகளில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தெரிவாகியிருந்தது.
தொடர்ந்து விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதிப் போட்டியில் மேலதிக நேரம் வழங்கப்பட்டிருந்ததோடு, முக்கியமான கால்பகுதிகளில் ஆதிக்கம் செலுத்திய ஹட்டன் நஷனல் வங்கி அணி 9-10, 13-9, 12-9, 6-11, 5-2, 5-6 என்கிற புள்ளிகள் அடிப்படையில் இறுதிப் போட்டியின் வெற்றியாளர்களாக மாறியது.
இதேநேரம் 2021ஆம் ஆண்டுக்கான தேசிய வலைப்பந்து சம்பியன்ஷிப் தொடரின் மூன்றாம் இடத்தினை, மூன்றாம் இடத்திற்காக நடைபெற்ற போட்டியில் குருநாகல் மாவட்ட வீராங்கனைகளை (68-44) வீழ்த்தியிருந்த இலங்கை இராணுவப்படை அணி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
விருதுகள்
- சம்பியன் – HNB அணி
- இரண்டாமிடம் – இலங்கை விமானப்படை
- மூன்றாமிடம் – இலங்கை இராணுவப்படை
- சிறந்த தாக்குதல் (Shooting) வீராங்கனை – தர்ஷிக்கா அபேயவிக்ரம (HNB)
- சிறந்த தடுப்பு (Defender) வீராங்கனை – சத்துரங்கி ஜயசூரிய (இலங்கை விமானப்படை)
- சிறந்த மத்திய களவீராங்கனை (Center Court) – கயான்ஜலி அமரவன்ச (HNB)
- வலைபந்து இராணி (Netball Queen) – மல்மி ஹெட்டியாரச்சி (HNB)
>> மேலும் விளையாட்டுச் செய்திகளைப் படிக்க <<