அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவின் கால்பந்தாட்டப் போட்டிகளில் 20 வயதின் கீழ் பிரிவில் யாழ்ப்பாணம் புனித ஹென்ரியரசர் கல்லூரி அணி வெற்றி பெற்று சம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இதன் மூலம் அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவில் ஒரு போட்டியில் சம்பியனாகிய வரலாற்றுப் பதிவை அவ்வணியினர் இன்று பதிந்துள்ளனர்.

அனுபவம் மிக்க பல வீரர்களைக் கொண்ட பலம் கொண்ட புனித ஹென்ரியரசர் கல்லூரி வீரர்கள் இறுதிப் போட்டியில் நீர்கொழும்பு மாரிஸ் ஸ்டெல்லா அணியினரை 4-1 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்தியதன் மூலமே இந்த வரலாற்று வெற்றியைப் பெற்றுள்ளனர்.  

மூன்றரை வருடங்களின் பின் சம்பியனாகியது சென். நிக்கிலஸ்

இறுதிப் போட்டி

நீர்கொழும்பு மாரிஸ் ஸ்டெல்லா மற்றும் புனித ஹென்ரியரசர் கல்லூரி அணிகளுக்கு இடையிலான தொடரின் இறுதிப் போட்டி கொழும்பு ஷாலிகா விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

மழையுடனான காலநிலையில் ஆரம்பமாகிய இந்த போட்டியின் 3 நிமிடங்ள் கடந்த நிலையில் புனித ஹென்ரியரசர் கல்லூரி வீரர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்ட சிறந்த முயற்சி இறுதித் தருவாயில் பயனளிக்காமல் போனது.   

ஆட்டத்தின் 10ஆவது நிமிடத்தில் கிடைத்த ப்ரீ கிக் வாய்ப்பின்போது ஹென்ரியரசர் வீரர் சிவகுமரன் ரூபன்ராஜ் வலது புற கோணர் திசையில் இருந்து உள்ளனுப்பிய பந்தை மாரிஸ் ஸ்டெல்லா கோல் காப்பாளர் தடுக்க முற்பட்ட வேளையில், பந்து மிகவும் வேகமாக கம்பங்களுக்குள் சென்றது. இதனால், ஆட்டத்தின் முதல் 10 நிமிடங்களுக்குள் அவர்கள் முன்னிலை பெற்றனர்.

முதல் கோல் பெற்று 5 நிமிடங்களில் மாரிஸ் ஸ்டெல்லா அணிக்கு கிடைத்த ப்ரீ கிக் வாய்ப்பை தத்சர பெர்னாண்டோ பெற்றார். அவர் உதைந்த பந்து எதிரணியின் கோல் கம்பத்தின் வலது புறத்தால் கம்பங்களுக்குள் செல்ல ஆட்டம் சமநிலையடைந்தது. இதன்போது புனித ஹென்ரியரசர் அணியின் கோல் காப்பாளர் பந்தை தடுப்பதற்கு மேற்கொண்ட முயற்சி தோல்வியிலேயே முடிந்தது.

தொடர்ந்தும் மாரிஸ் ஸ்டெல்லா வீரர் நிசல் தாரிந்த முன்களத்தில் இருந்து பெற்று வேகமாக கோலை நோக்கி அடித்த பந்து கம்பங்களுக்கு மேலால் சென்றது.

மீண்டும் போட்டியை முன்னிலைப்படுத்தும் வகையில் ஹென்ரியரசர் வீரர்களிடையே மேற்கொள்ளப்பட்ட சிறந்த பந்துப் பரிமாற்றங்களின் நிறைவில், தன்னிடம் வந்த பந்தை அன்டனிராஜ் கோல் காப்பாளர் இல்லாத திசையினால் கம்பங்களுக்குள் செலுத்தினார்.   

முதல் பாதி: மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி 1 – 2  புனித ஹென்ரியரசர் கல்லூரி

மீண்டும் இரண்டாவது பாதி ஆரம்பமாகி 3 நிமிடங்களில் மாரிஸ் ஸ்டெல்லாவின் கோல் பகுதியை ஆக்கிரமித்த யாழ் வீரர்கள், பல முயற்சிகளை மேற்கொண்டதன் நிறைவில் முன்னைய கோலைப் பெற்ற அன்டனிராஜ் தனது அணிக்கான மூன்றாவது கோலைப் பெற்றுக்கொடுத்தார்.  

தொடர்ச்சியாக அடுத்தடுத்து சிறந்த பந்துப் பரிமாற்றங்களை மேற்கொண்டு வந்த புனித ஹென்ரியரசர் வீரர்களால் உள்ளனுப்பப்பட்ட பந்தை அன்டனிராஜ் பாய்ந்து ஹெடர் செய்தார். எனினும் பந்து கோலை விட தொலை தூரத்தினால் வெளியேறியது.

FIFA உலகக் கிண்ண தகுதிகாண் இறுதிக் கட்டப் போட்டிகள் எவ்வாறு இருக்கும்?

அதன் பின்னர் மாரிஸ் ஸ்டெல்லா தரப்பினரால் மேற்கொள்ளப்பட்ட அனைத்து முயற்சிகளையும் புனித ஹென்ரியரசர் கல்லூரியின் பின்கள வீரர்கள் இலகுவாக முறியடித்தனர்.  

மீண்டும் ஆட்டத்தின் 44ஆவது நிமிடத்தில் யாழ் தரப்பினருக்கு கிடைத்த ப்ரீ கிக் உதையின்போது உள்ளனுப்பப்பட்ட பந்து, தடுப்பு வீரர்களிடையே பட்டு தன்னிடம் வர, அன்டனிராஜ் அதனை கோலாக்கி தனது ஹெட்ரிக் கோலினைப் பதிவு செய்தார்.

எனவே, மேலதிக 3 கோல்களினால் இறுதிப் போட்டியை தம்வசப்படுத்திய யாழ்ப்பாணம் புனித ஹென்ரியரசர் கல்லூரி அணி தொடரின் சம்பியன்களாகத் தெரிவாகினர். தமது கல்லூரி வரலாற்றில் முதல் முறையாக அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவில் சம்பியன் பட்டம் வென்ற பெருமை இவ்வணியினரையே சாரும் என்பது குறிப்பிடத்தக்கது.  

முழு நேரம்: மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி 1 – 4 புனித ஹென்ரியரசர் கல்லூரி

கோல் பெற்றவர்கள்

மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி – தத்சர பெர்னாண்டோ 15’

புனித ஹென்ரியரசர் கல்லூரி – சிவகுமரன் ரூபன்ராஜ் 10’, ஞானேஸ்வரன் அன்டனிராஜ் 21’, 28’ & 44’

இரண்டாம் இடத்தைப் பெற்ற மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி

மூன்றாம் இடத்திற்கான போட்டி

அரையிறுதி ஆட்டங்களில் தோல்வியடைந்த காலி புனித அலோசியஸ் கல்லூரி மற்றும் கந்தானை டி மெசனொட் கல்லூரி அணிகள் தொடரின் மூன்றாம் இடத்தைப் பெறும் அணியைத் தெரிவு செய்வதற்கான மோதலில் களம் கண்டன.

இந்தப் போட்டியின் முதல் பாதியில் இரு அணியினரும் சரி சமமான பலத்துடன் ஆடியமையினால் எந்த தரப்பினராலும் கோல்கள் எதனையும் பெற்றுக்கொள்ள முடியாமல் போனது.

எனினும் ஆட்டத்தின் இரண்டாவது பாதியை முழுமையாக தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த டி மெசனொட் வீரர்கள் பஜோ, சில்வா மற்றும் பொன்சேகா ஆகியோர் மூலம் கோல்களைப் பெற்றுள்கொள்ள, அவ்வணி தொடரில் மூன்றாம் இடத்தைப் பெற்றுக்கொண்டது.

முழு நேரம்: டி மெசனொட் கல்லூரி 3 – 0 புனித அலோசியஸ் கல்லூரி

கோல் பெற்றவர்கள்

டி மெசனொட் கல்லூரி – S. பஜோ 27’, R. சில்வா 30’, D. பொன்சேகா 43’

மூன்றாம் இடத்தைப் பெற்ற டி மெசனொட் கல்லூரி

அரையிறுதிச் சுற்று

ஒரு அரையிறுதியில் நீர்கொழும்பு மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி அணியினர் காலி புனித அலோசியஸ் கல்லூரி அணியினரை 3-0 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்தினர்.

முதல் பாதியில் இசுரு மதுஷானின் கோலுடன் மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியில், நிசல் தாரிந்த அவ்வணிக்கான இரண்டாவது கோலையும், C.பெர்னாண்டோ இறுதி கோலையும் பெற்றுக்கொடுத்தனர்.    

முழு நேரம்: மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி 3 – 0 புனித அலோசியஸ் கல்லூரி

கோல் பெற்றவர்கள்

மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி – இசுரு மதுஷான் 05’, நிசல் தாரிந்த 36’, C.பெர்னாண்டோ 39’


மற்றைய அரையிறுதியில் கந்தானை டி மெசனொட் கல்லூரி அணியினருடன் மோதிய புனித ஹென்ரியரசர் கல்லூரி அணிக்காக அனுபவ வீரர் அன்டனிராஜ் முதல் கோலைப் பெற்றுக்கொடுத்தார். இதன் மூலம் அவ்வணியினர் முதல் பாதியில் முன்னிலை பெற்றனர்.  

பின்னர் இடம்பெற்ற இரண்டாவது பாதியில் யாழ் தரப்பினருக்கு கோலுக்கான மிக அதிகமான வாய்ப்புக்கள் கிடைத்த போதும் அவர்கள் அந்த அனைத்து வாய்ப்புக்களையும் வீணடித்தனர்.

முழு நேரம்: புனித ஹென்ரியரசர் கல்லூரி 1 – 0 டி மெசனொட் கல்லூரி

கோல் பெற்றவர்கள்

புனித ஹென்ரியரசர் கல்லூரி – G. அன்டனிராஜ் 06’  

குறிப்பு – இந்த தொடரின் அனைத்துப் போட்டிகளினதும் இரு பாதிகளும் தலா 25 நிமிடங்களுக்கு விளையாடப்பட்டது.

கால்பந்து சம்பந்தமான மேலதிக செய்திகளுக்கு