இலங்கையின் வரலாற்று டெஸ்ட் தொடர் வெற்றியை போற்றும் வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்கள்

1856

தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி, தமது சுற்றுப் பயணத்தின் முதற்கட்டமாக இடம்பெற்று முடிந்திருக்கும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தென்னாபிரிக்க அணியை 2-0 என வைட்வொஷ் செய்துள்ளது.

மேலும் இந்த தொடர் வெற்றியோடு இலங்கை அணி, தென்னாபிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடர் ஒன்றை வெற்றி கொண்ட முதல் ஆசிய அணியாகவும் வரலாறு படைத்திருக்கின்றது.

இலங்கை அணியின் இந்த வரலாற்று டெஸ்ட் தொடர் வெற்றியை பாராட்டும் விதமாக சமூகவலைதளமான ட்விட்டரில் கிரிக்கெட் பிரபலங்கள் தங்களது வாழ்த்துச் செய்திகளை உலகம் பூராகவும் இருந்து தெரிவித்து வருகின்றனர்.

இதில் இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான வி.வி.இஸ். இலக்ஷமன், இந்த வரலாற்று டெஸ்ட் தொடர் வெற்றி இலங்கை அணியினுடைய டெஸ்ட் வரலாற்றில் மிகச் சிறந்த தருணங்களில் ஒன்று எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதேநேரம் மேலும் பேசிய இலக்ஷமன் இந்த டெஸ்ட் தொடரின் போது தொலைக்காட்சி வர்ணனையாளராக செயற்பட்ட இலங்கை அணியின் முன்னாள் வீரர் ரசல் அர்னோல்ட் மிகவும் சந்தோசத்தோடு இருப்பார் எனவும் தெரிவித்திருந்தார்.

அதேவேளை இந்திய அணிக்காக தற்போது விளையாடி வருகின்ற சுழல்பந்துவீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வினும், இலங்கை அணியின் அபார வெற்றிக்காக ரசல் அர்னோல்டிற்கு வாழ்த்து தெரிவிக்கும் விதத்தில் ஒரு கருத்தை பதிவிட்டிருந்தார்.

இதேவேளை இந்திய அணி வீரர்களின் இந்த வாழ்த்துக்களை பார்த்த ரசல் அர்னோல்ட், தனது அண்டை நாட்டு வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஒரு பதிலை தந்திருக்கின்றார்.

அதுமட்டுமில்லாது அர்னோல்ட் இலங்கை அணியின் வரலாற்று டெஸ்ட் தொடர் வெற்றியினை புகழ்வதற்கு அண்மையில் வெளியாகிய தமிழ்த்திரைப்படம் ஒன்றின் முன்னோட்ட வசனங்களை உபயோகம் செய்திருந்தார்.

இலங்கை அணியின் வரலாற்று டெஸ்ட் தொடர் வெற்றியை இந்திய வீரர்கள் மட்டுமல்லாது நியூசிலாந்து அணியின் வீரர்களும் பாராட்டியிருந்தனர். அதில் நியூசிலாந்து அணியின் சகலதுறை வீரரான ஜிம்மி நீஷம் இலங்கை அணி அடைந்த இந்த டெஸ்ட் தொடர் வெற்றி மிகவும் பெறுமதி வாய்ந்த ஒரு அடைவு என குறிப்பிட்டிருந்தார்.

இந்த வரலாற்று தொடர் வெற்றி பற்றி பேசிய இலங்கை அணியின் முன்னாள் பயிற்றுவிப்பாளர் டொம் மூடி,  இலங்கை அணி அவுஸ்த்திரேலியா, நியூசிலாந்து அணிகள் போன்றவற்றுடன் டெஸ்ட் தொடர் தோல்வி ஒன்றினை சந்தித்த பின்னர் இப்படியான முடிவு ஒன்றை பெறும் என யாரும் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள் எனத் தெரிவித்திருந்தார்.

தென்னாபிரிக்க டெஸ்ட் தொடருக்கு முன்னர் அவுஸ்த்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளுடன் டெஸ்ட் தொடர்களில் ஆடியிருந்த இலங்கை அணி குறித்த நாடுகளுடனான டெஸ்ட் தொடர்களை மோசமான முறையில் பறிகொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பங்களாதேஷ் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரரான முஸ்பிகுர் ரஹீமும் ஆசிய நாடுகளில் முதலாவதாக டெஸ்ட் தொடர் வெற்றியினை பதிவு செய்த இலங்கை அணிக்கு தனது வாழ்த்துக்களை பதிவு செய்திருந்தார்.

அதேவேளை மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் வீரரான இயன் பிசொப் டெஸ்ட் தொடர்களை வெல்வதற்கு மிகவும் கடினமான இடங்களில் ஒன்றான தென்னாபிரிக்க மண்ணில், இலங்கை அணி டெஸ்ட் தொடர் ஒன்றில் வெற்றி பெற்றது சிறப்பான விடயம் என பேசியிருந்தார்.

இந்த வரலாற்று வெற்றியினை இலங்கை அணியின் முன்னாள் வீரர்களும் பாராட்டியிருந்தனர். இதில் குமார் சங்கக்கார இலங்கை அணி, இதற்கு முன்னர் இருந்த வீரர்களினால் செய்ய முடியாத ஒரு விடயத்தை செய்து விட்டதாக கூறியிருந்ததோடு இலங்கை அணியின் வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் ஏனைய அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்.

குமார் சங்கக்காரவுடன் இணைந்து தென்னாபிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி ஒன்றின் மூலம், டெஸ்ட் வரலாற்றில் பெறப்பட்ட அதிகூடிய இணைப்பாட்டத்தை பகிர்ந்த மஹேல ஜயவர்த்தனவும் இலங்கை அணியினை பாராட்டாமல் விடவில்லை.

மஹேல தனது பாராட்டு செய்தியில் இலங்கை அணியின் கூட்டு முயற்சிக்கு வாழ்த்துக்களை தெரிவித்திருந்ததோடு, அணித்தலைவர் திமுத் கருணாரத்னவின் தலைமைத்துவத்தினையும் மெச்சியிருந்தார்.

இலங்கை டெஸ்ட் அணியின் தலைவரான தினேஷ் சந்திமால், தனது வழமையான துடுப்பாட்ட பாணியை இழந்த பின்னர் தென்னாபிரிக்க அணியுடனான டெஸ்ட் தொடரில் இலங்கையை வழிநடாத்தும் பொறுப்பு திமுத் கருணாரத்னவிற்கு கொடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இவர்கள் தவிர அஞ்சலோ மெதிவ்ஸ், தனுஷ்க குணத்திலக்க, தம்மிக்க பிரசாத் மற்றும் ரங்கன ஹேரத் ஆகியோரும் தங்களது வாழ்த்துக்களை இலங்கை அணியின் டெஸ்ட் தொடர் வெற்றிக்காக தெரிவித்திருந்தனர்.