ஒலிம்பிக் போட்டிகளுக்கு அடுத்து உலகில் நடத்தப்படும் மிகப் பெரிய விளையாட்டு விழாவான பொதுநலவாய விளையாட்டு விழாவின் 21ஆவது அத்தியாயம் அவுஸ்திரேலியாவின் வடகிழக்கு பிராந்தியமான கோல்ட் கோஸ்ட் நகரில் கோலாகலமாக ஆரம்பமாகவுள்ளது. இம்முறை விளையாட்டு விழாவில் முதற்தடவையாக ஆண் மற்றும் பெண்கள் இரு பிரிவுகளிலும் சமமான முறையில் பதக்கங்களை பகிர்ந்தளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இம்முறை பொதுநலவாய விளையாட்டு விழாவில் 71 நாடுகளைச் சேர்ந்த 4,500இற்கும் மேற்பட்ட வீர வீராங்கனைகள் பங்குபற்றுகின்றனர்.
பொதுநலவாய விளையாட்டில் தேசிய கொடியை ஏந்தும் பளுதூக்கல் வீரர்!
3ஆவது தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்… அமெரிக்காவில் வசித்து வரும் …
அதுமாத்திரமின்றி 18 விளையாட்டுகளுக்காக 275 போட்டி நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளன. அதிலும் 7 பரா விளையாட்டுகளும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. அத்துடன், பெண்களுக்கான எழுவர் றக்பி, கூடைப்பந்து மற்றும் கடற்கரை கரப்பந்தாட்டம் ஆகிய விளையாட்டுக்கள் இம்முறை விளையாட்டு விழாவில் புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதுடன், ஜுடோ விளையாட்டு நீக்கப்பட்டுள்ளது.
இந்த விளையாட்டு விழாவைப் பொறுத்தமட்டில் அவுஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய பிரபல அணிகளே அண்மைக்காலமாக பதக்கப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பெற்றுவருகின்றன.
அதிலும் போட்டியை நடாத்தும் அவுஸ்திரேலியா அதிகபட்சமாக 474 வீர வீராங்கனைகளாக களம் இறக்குகிறது. அதேநேரம், இங்கிலாந்து(393), கனடா(283), நியூசிலாந்து(240), ஸ்கொட்லாந்து(224) மற்றும் இந்தியா(218) போன்ற நாடுகளும் பலமிக்க அணிகளாக களமிறங்கவுள்ளன.
வரலாறு
பிரித்தானிய காலணித்துவ ஆட்சியின் கீழ் இருந்து சுதந்திரமடைந்த சுமார் 71 நாடுகளை ஒருங்கிணைத்தாக பொதுநலவாய விளையாட்டு விழா நடத்தப்பட்டு வருகிறதுடன், இதன் அங்குரார்ப்பண போட்டிகள் முதற்தடவையாக பிரித்தானியப் பேரரசு விளையாட்டுக்கள் என்ற பெயரில் 1930ஆண்டு ஹெமில்டனில் நடத்தப்பட்டது. இதில் 11 நாடுகளைச் சேர்ந்த 400 வீரர்கள் கலந்துகொண்டனர்.
அதன்பிறகு 1954ஆம் ஆண்டு இப்பெயரானது பிரித்தானியப் பேரரசு மற்றும் பொதுநலவாய விளையாட்டுக்கள் என்று மாற்றம் பெற்றது. மீண்டும் 1970ஆம் ஆண்டு பிரித்தானிய பொதுநலவாய விளையாட்டுக்கள் என மாற்றப்பட்டது. அதன்பிறகு 1978ஆம் ஆண்டு முதல் பொதுநலவாய விளையாட்டு விழா என்ற பெயருடன் இப்போட்டி நிகழ்வு நடத்தப்பட்டு வருகின்றது.
பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் மொத்தம் 71 நாடுகள் பங்கேற்கின்றன. இதில் ஐக்கிய இராச்சியம் நான்கு அணிகளாக பிரிந்து இந்த விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்கின்றன.
பரா மெய்வல்லுனரில் உலக சாதனையை நெருங்கிய இலங்கை வீரர்
பூட்டானில் இன்று (27) இடம்பெற்று முடிந்திருக்கும்.. அமெரிக்காவின் பொஸ்டன் …
ஆனாலும் ஒலிம்பிக் போட்டிகளில் ஒரே நாட்டு அணியாக கலந்துகொள்ளும் ஐக்கிய இராச்சியமானது இதில் இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து, வேல்ஸ் மற்றும் வட அயர்லாந்து ஆகிய நாடுகளாகவே போட்டியிடுகின்றன.
ஒவ்வொரு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வரும் இந்த விளையாட்டு விழாவின் பிரதான நோக்கம் விளையாட்டின் மூலம் பொதுநலவாய நாடுகளுக்கிடையே சமாதானம், நல்லிணக்கம் மற்றும் சமத்துவத்தை ஏற்படுத்துவதாகும்.
இதேவேளை, அவுஸ்திரேலியாவில் பொதுநலவாய விளையாட்டு விழா நடைபெறுவது இது 5ஆவது முறையாகும். ஏற்கனவே 1938 (சிட்னி), 1962 (பேர்த்), 1982 (பிரிஸ்பேன்), 2006 (மெல்பேர்ன்) ஆகிய வருடங்களில் நடைபெற்றன. இந்த போட்டியின் மூலம் அதிக தடவைகள் பொதுநலவாய விளையாட்டு போட்டிகளை நடத்திய நாடு என்ற பெருமையை அவுஸ்திரேலிய பெற்றுக்கொள்ளவுள்ளது.
இதேவேளை, கடந்த 2016ஆம் ஆண்டு பொதுநலவாய கூட்டமைப்பில் இருந்து மாலைத்தீவுகள் விலகிக் கொண்ட நிலையில், 2013ஆம் ஆண்டு விலகிய காம்பியா மறுபடியும் பொதுநலவாய அமைப்புடன் இணைந்துகொண்டுள்ளன.
ஹம்பாந்தோட்டையா? கோல்ட் கோஸ்ட்டா?
2018 ஆம் ஆண்டுக்கான பொதுநலவாய விளையாட்டு விழாவை நடத்துவதற்கான நகரத்தை தெரிவு செய்வதற்கான போட்டி கடந்த 2011ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகளின் புனித கைட்ஸ் மற்றும் நெவிஸ் தீவுகளில் நடைபெற்றது. இதில் இலங்கையின் ஹம்பாந்தோட்டை நகரமும் அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தின் கோல்ட் கோஸ்ட் நகருமே போட்டியிட்டிருந்தன.
எனினும், இதற்கான வாக்கெடுப்பில் ஹம்பாந்தோட்டை நகரம் 27 வாக்குகளைப் பெற கோல்ட் கோஸ்ட் நகரம் 43 வாக்குகளைப் பெற்று போட்டியை நடாத்தும் வாய்ப்பை இலங்கையிடமிருந்து பறித்துக்கொண்டது.
வரலாற்றில் முதன்முறையாக
பொதுநலவாய நாடுகள் விளையாட்டு விழா வரலாற்றில் முதன்முறையாக ஆண் மற்றும் பெண்கள் இரு பிரிவுகளிலும் சமமான முறையில் பதக்கங்களை பகிர்ந்தளிப்பதற்கு கோல்ட் கோஸ்ட் பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளின் ஏற்பாட்டுக் குழு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
இதுவரை காலமும் ஆண்கள் பிரிவுகளிலேயே அதிகளவான தங்கப் பதக்கங்கள் வழங்கப்பட்டிருந்தன. இம்முறை சரி சமமாக இந்த பதக்க எண்ணிக்கை போட்டிகளின் படி பிரிக்கப்பட்டுள்ளன. ஒலிம்பிக் போட்டித் தொடரில்கூட இந்த சமப் பங்கீட்டு முறை அறிமுகப்படுத்தப்படவில்லை.
இதன்படி இம்முறை மொத்தம் 275 தங்கப் பதக்கங்கள் பகிரிந்தளிக்கப்படவுள்ளன. இதில் 133 ஆண்களுக்கான போட்டிகளும் 133 பெண்களுக்கான போட்டிகளும் நடத்தப்பட்டு 133 பதக்கங்கள் வீதம் இருபாலருக்கும் சரிசமமாக வழங்கப்படவுள்ளன. ஏனைய 9 பதக்கங்கள் இருபாலாரும் பங்கேற்கும் கலப்பு பிரிவுக்கு வழங்கப்படவுள்ளன.
சின்னம்
இம்முறை பொதுநலவாய நாடுகள் விளையாட்டு விழாவின் சின்னமாக பரோபி அறிவிக்கப்பட்டுள்ளது. இது நீல நிறத்திலான கோலா என்ற மிருகத்தின் உருவ மாதிரியாக உருவாக்கப்பட்டுள்ளது.
மகாராணியின் கோல்
1930ஆம் ஆண்டு பிரித்தானியாவில் நடைபெற்ற முதலாவது பொதுநலவாய விளையாட்டுப் போட்டியின்போது பொதுநலவாய நாடுகளின் தலைவி என்ற வகையில் எலிசபெத் மகாராணி விடுத்த செய்தியைக் கொண்ட கோல் முதன்முதலாக அப்போதுதான் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனாலும் இக் கோல் 1998ஆம் ஆண்டு மலேஷியாவில் நடைபெற்ற பொதுநலவாய போட்டிகளின்போதே பிறநாடுகளுக்கு கொண்டு செல்லும் சம்பிரதாயம் ஆரம்பமானது.
டைட்டானியம், மரம் மற்றும் கிரனைட் உட்பட பல பொருட்களைக் கொண்டு கைகளினாலேயே வடிவமைக்கப்பட்ட தற்போதைய கோல், 1958ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அன்றிலிருந்து அக்கோலானது பொதுநலவாய அங்கத்துவ நாடுகள் அனைத்துக்கும் பயணம் செய்து இறுதி நாட்களில் போட்டி நடைபெறும் நகரத்துக்குக் கொண்டு வரப்படுவது வழக்கமாகும்,
அந்தவகையில் இம்முறை பொதுநலவாய விளையாட்டுக்களுக்கான கோலானது கடந்த 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் 13ஆம் திகதி தனது பயணத்தை ஆரம்பித்தது. ஒருவருட காலமாக நடைபெற்ற மகாராணியின் கோலை ஏந்திய பயணம் மொத்தமாக 230,000 கிலோமீற்றர் தூரம் பயணம் செய்துள்ளது. அது கரீபியன் தீவுகள், ஆபிரிக்கா, வட அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா என உலகின் அனைத்துப் பகுதிகளுக்கும் எடுத்துச்செல்லப்பட்டதுடன், கடந்த ஒக்டோபர் மாதம் 12ஆம் திகதி இலங்கைக்கு கொண்டுவரப்பட்டமை விசேட அம்சமாகும்.
ஏழு கண்டங்களின் மரதன் ஓட்டத்திற்கு தயாராகும் இலங்கை வீரர் ஹசன்
அமெரிக்காவின் பொஸ்டன் நகரில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 16ஆம் திகதி நடைபெறவுள்ள …
இதன்படி, கோல்ட் கோஸ்ட் நகரில் நாளை ஆரம்பமாகவுள்ள பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளுக்கான எலிசபெத் மகாராணியின் செய்தியை தாங்கிய கோல், சுமார் ஒரு வருடங்களாக உலகம் முழுவதும் பயணமாகி இறுதியாக போட்டிகள் நடைபெறும் கோல்ட் கோஸ்ட் நகரை நேற்று(02) வந்தடைந்தது.
இலங்கை அணிக்கு மகத்தான வரவேற்பு
இம்முறை பொதுநலவாய நாடுகள் விளையாட்டு விழாவில் பங்கேற்றுள்ள இலங்கை அணியை வரவேற்கும் விசேட நிகழ்வு நேற்று(02) கோல்ட் கோஸ்ட் நகரில் நடைபெற்றது. இதன்போது விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர, தேசிய ஒலிம்பிக் சங்கத்தின் செயலாளர் மெக்ஸ்வெல் டி சில்வா ஆகியோர் கலந்துகொண்டனர்.
அவுஸ்திரேலியாவின் பழங்குடி மக்களாக கருதப்படுகின்ற அபோஜியன் மக்களின் சம்பிரதாய நடனங்களுடன் இடம்பெற்ற இந்நிகழ்வில் பொதுநலவாய விளையாட்டு விழா கிராமத்தின் மாநகர பிதா எனஸ்டசியா பலஸ்சுக்கினால் இலங்கை அணியின் பிரதானி சந்தன லியனகேவுக்கு நினைவுச் சின்னமொன்றும் வழங்கி வைக்கப்பட்டது.
ஆரம்பவிழா
அவுஸ்திரேலியாவில் உள்ள கடலினால் சூழப்பட்ட அழகிய பூங்காக்களைக் கொண்ட கோல்ட் கோஸ்ட் நகரின் கராரா விளையாட்டரங்கில் இன்று அவுஸ்திரேலிய நேரப்படி இரவு 8 மணிக்கு(இலங்கை நேரப்படி மாலை 3.30 மணிக்கு) 21 ஆவது பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளின் ஆரம்பவிழா நடைபெறவுள்ளது.
ஆரம்ப விழாவில் பிரித்தானியாவின் முடிக்குரிய இளவரசியான எலிசெபத் மகாராணியின் பிரதிநிதியாக இளவரசர் சார்ல்ஸ் மற்றும் அவரது பாரியார் இளவரசி கெமிலா ஆகியோர் சிறப்பு அதிதிகளாகக் கலந்துகொண்டு போட்டிகளை ஆரம்பித்து வைக்கவுள்ளனர். அதேநேரம் அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தின் ஆளுநர் எனஸ்டிசியா பலஸ்ஸுக்கேவும் இதன்போது கலந்துகொள்ளவுள்ளார்.
அத்துடன், ஆரம்ப நிகழ்வுகளின் சிறப்பு நட்சத்திரமாக அவுஸ்திரேலியாவின் பிரபல பாடகியும், பாடலாசிரியருமான டெல்டா க்ரோட்ரிவ் கலந்துகொள்ளவுள்ளார்.
தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடருக்கான திகதி அறிவிப்பு
3ஆவது தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடர் எதிர்வரும் மே மாதம் 05 …
அதுமாத்திரமின்றி, அவுஸ்திரேலியாவின் கலை, கலாச்சாரங்களைப் பிரதிபலிக்கும் வகையில் பல்வேறு இசை மற்றும் களியாட்ட நிகழ்ச்சிகளும் இதன்போது இடம்பெறவுள்ளன.
இதேவேளை, ஆரம்பவிழாவிற்கு மழையினால் பாதிப்புகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாக அந்நாட்டு வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.
அதியுச்ச பாதுகாப்பு
குயிண்ட்ஸ்லாந்து மாநிலத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு பொதுநலவாய விளையாட்டு போட்டிகளுக்கு கடும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதற்காக 1000 இற்கும் அதிகமான விசேட பாதுகாப்பு படையினரும், 3500 பொலிஸாரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்த போட்டிகளுக்காக உலக நாடுகளிலிருந்து 6 இலட்சத்து 72 ஆயிரம் பேர்வரை வருகை தரவுள்ளதாக அறியக்கிடைக்கின்றது.
வீரர்கள் தங்கியுள்ள விளையாட்டு கிராமத்திற்கு உச்சபட்ச பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த விளையாட்டு கிராமத்திற்குள் அனுமதியற்ற எவருமே நுழைய முடியாதவகையில் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
அத்தோடு கிராமத்திற்கு மேலாக விமானங்கள் ஹெலிகொப்டர்கள் பறப்பதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. ட்ரோன் கெமராக்கள் எனப்படும் பறக்கும் கெமராக்களை விளையாட்டு கிராமத்திற்கு மேலாக பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி பறந்தால் சுட்டு வீழ்த்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இலங்கை அணியில் 80 வீரர்கள்
1930ஆம் ஆண்டு பொதுநலவாய நாடுகள் விளையாட்டு விழா முதற்தடவையாக நடைபெற்ற போதிலும், 1958ஆம் ஆண்டுதான் இலங்கையிலிருந்து வீரர்கள் இப்போட்டித் தொடரில் முதற்தடவையாக கலந்துகொண்டனர். அன்றிலிருந்து இன்று வரை 4 தங்கம், 7 வெள்ளி மற்றும் 4 வெண்கலப் பதக்கங்கள் உள்ளடங்கலாக ஒட்டுமொத்தமாக 14 பதக்கங்களை இலங்கை அணி வென்றுள்ளது.
ரொனால்டோவின் சாகசத்துடன் சம்பியன்ஸ் லீக்கில் ரியல் மெட்ரிட் ஆதிக்கம்
ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் முதல் கட்ட காலிறுதி போட்டிகளில் …
எனினும், 1994ஆம் ஆண்டு கனடாவின் விக்டோரியாவில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகள் விளையாட்டு விழாவில் இலங்கை அணி ஒரு தங்கம், 2 வெள்ளிப் பதக்கங்களை வென்று பதக்கப்பட்டியலில் 16ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டமையே இலங்கை அணியின் சிறந்த பெறுபேறாகவும் அமைந்திருந்தது.
இதேவேளை, இம்முறை பொதுநலவாய விளையாட்டு விழாவில் தொடக்க விழாவின் போது இலங்கை சார்பில் முன்னணி பளுதூக்கல் வீரரான சிந்தன கீதால் விதானகே தேசிய கொடியை ஏந்தி செல்லவுள்ளார்.
5ஆவது தடவையாகவும் இவ்விளையாட்டு விழாவில் பங்கேற்கவுள்ள சிந்தன கீதால் விதானகே, 2010ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டு விழாவில் 69 கிலே.கிராம் எடைப்பிரிவில் தங்கப் பதக்கம் வென்றிருந்தார்.
இதேநேரம், 13 வகையான போட்டிகளுக்காக இலங்கை சார்பில் 80 வீரர்களும், பயிற்றுவிப்பாளர்கள் உள்ளிட்ட 40 அதிகாரிகள் உள்ளடங்கலாக சுமார் 150 பேர் இம்முறை போட்டித் தொடரில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தவுள்ளனர்.
இதன்படி, இம்முறை விளையாட்டு விழாவில் மெய்வல்லுனர் விளையாட்டுக்காக அதிக வீரர்கள்(13 பேர்) கலந்துகொள்ளவுள்ளதுடன், பளுதூக்கல்(11 பேர்), மல்யுத்தம்(3 பேர்), குத்துச்சண்டை(6 பேர்), நீச்சல்(6 பேர்), மேசைப்பந்து(6 பேர்), எழுவர் ரக்பி(12 பேர்), கடற்கரை கரப்பந்தாட்டம்(2 பேர்), துப்பாக்கி சுடுதல்(3 பேர்), ஜிம்னாஸ்டிக்(5 பேர்), பெட்மிண்டன்(8 பேர்), ஸ்குவாஷ்(2 பேர்) மற்றும் சைக்கிளோட்டம்(2 பேர்) ஆகிய போட்டிகளுக்காக வீரர்கள் பங்கேற்கவுள்ளனர்.
இதேநேரம், இலங்கை அணியினர் பளுதூக்கல், நீச்சல் மற்றும் மெய்வல்லுனர் போட்டிகளில் பதக்கங்களை வெல்லுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நன்றி – எஸ். ஜே பிரசாத்