இலங்கை வீராங்கனையின் அதிரடியால் பஹ்ரைன் T20 உலக சாதனை

4164

பஹ்ரைன் மகளிர் கிரிக்கெட் அணி, மகளிருக்கான T20i போட்டிகளில் சவூதி அரேபியாவிற்கெதிராக 318 ஓட்டங்கள் குவித்ததன் மூலம், மகளிர் T20i போட்டிகள் வரலாற்றில் துடுப்பாட்ட இன்னிங்ஸ் ஒன்றில் அதிக ஓட்டங்கள் பெற்ற அணியாக உலக சாதனை படைத்திருக்கின்றது.

பாகிஸ்தான் தொடரிலிருந்து வெளியேறும் கேன் ரிச்சட்சன்

பஹ்ரைன் அணி, மகளிர் கிரிக்கெட் அணிகளுக்காக ஒழுங்குசெய்யப்பட்ட GCC மகளிர் சம்பியன்ஷிப் தொடரில் வைத்தே இந்த உலக சாதனையினை மேற்கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, கடந்த 2019ஆம் ஆண்டில் உகண்டா அணி, மாலிக்கு எதிராக 314 ஓட்டங்கள் பெற்றதே மகளிர் T20i போட்டிகளில் அணியொன்று பெற்ற அதிகூடிய ஓட்டங்களாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

சவூதி அரேபியா – பஹ்ரைன் அணிகள் மோதிய போட்டி, இன்று (22) ஓமானின் அல்-எமேராட் அரங்கில் ஆரம்பமாகியது. போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற சவூதி அரேபிய வீராங்கனைகள், முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தை பஹ்ரைன் அணிக்கு வழங்கினர்.

அதன்படி, போட்டியில் முதலில் துடுப்பாடிய பஹ்ரைன் அணிக்கு அதன் தலைவி தரங்க கஜநாயக்க மற்றும் தீபிக்கா ரசங்கிக்க ஆகியோர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தனர். இவர்களின் துடுப்பாட்ட உதவியோடு பஹ்ரைன் அணி ஒரு விக்கெட்டினை மாத்திரம் இழந்து 318 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

லெஜண்ட்ஸ் தொடருக்கான திகதிகள் அறிவிப்பு!

பஹ்ரைன் அணியின் துடுப்பாட்டம் சார்பில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் நின்ற இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட வீராங்கனைகளில் ஒருவரான தீபிக்கா ரசங்கிக்க வெறும் 66 பந்துகளில் 31 பெளண்டரிகள் அடங்கலாக 161 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் நிற்க, அணித்தலைவி தரங்க கஜநாயக்க 17 பெளண்டரிகள் அடங்கலாக 56 பந்துகளில் 94 ஓட்டங்களைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதில் தீபிக்கா ரசங்கிக்க 161 ஓட்டங்கள் எடுத்ததன் மூலம் மகளிர் T20i போட்டிகளில் முதல் முறையாக 150 ஓட்டங்களை கடந்த வீராங்கனை என்கிற உலக சாதனையினையும் படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 319 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய சவூதி அரேபிய அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 48 ஓட்டங்கள் மாத்திரம் எடுத்து போட்டியில் படு தோல்வியடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேநேரம், இம்முறை பந்துவீச்சிலும் அசத்தியிருந்த தீபிக்கா ரசங்கிக்க வெறும் 09 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்களைச் சாய்த்திருந்ததோடு, தனது சகலதுறை ஆட்டத்திற்காக போட்டியின் ஆட்டநாயகி விருதினையும் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<