அவுஸ்திரேலியா செல்லும் விமானத்தை தவறவிட்டதனை அடுத்து மேற்கிந்திய தீவுகளின் T20 உலகக் கிண்ண குழாத்தில் இருந்து சிம்ரோன் ஹெட்மேயர் நீக்கப்பட்டிருக்கின்றார்.
>> T20 உலகக்கிண்ணத்திலிருந்து வெளியேறும் ஜஸ்ப்ரிட் பும்ரா!
அவுஸ்திரேலியாவில் ஒழுங்கு செய்யப்பட்ட 2022ஆம் ஆண்டுக்கான T20 உலகக் கிண்ணம் நெருங்கி வருவதனை அடுத்து, அதில் பங்கெடுக்கும் அணிகள் அங்கே தமது வீரர்களை அனுப்பி வருகின்றன. இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்களும் கடந்த வார இறுதியில் அவுஸ்திரேலியா சென்றடைந்திருந்திருந்தனர்.
இந்த நிலையில் இரண்டு தடவைகள் T20I உலகக் கிண்ணத் தொடரின் சம்பியன்களான மேற்கிந்திய தீவுகள் அணியும் தங்களது வீரர்களை கட்டம் கட்டமாக மேற்கிந்திய தீவுகளுக்கு அனுப்பி வருவதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
அதன்படி மேற்கிந்திய தீவுகளைச் சேர்ந்த 25 வயது நிரம்பிய அதிரடி துடுப்பாட்டவீரர் சிம்ரோன் ஹெட்மேயர் கடந்த சனிக்கிழமை (01) அவுஸ்திரேலியாவிற்குச் செல்ல விமான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. பின்னர் இந்த விமானம் ஹெட்மேயரின் வேண்டுகோளின் கீழ் திங்கட்கிழமைக்கு (03) மாற்றப்பட்ட போதும் குடும்ப காரணங்கள் கருதி விமானத்தினை ஹெட்மேயர் தவறவிட்டிருக்கின்றார்.
இந்த நிலையில் அவரினை மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சபை, உலகக் கிண்ண குழாத்தில் இருந்து நீக்கியிருப்பதோடு அவருக்குப் பதிலாக சமார் புரூக்ஸிற்கு வாய்ப்பு வழங்கியிருக்கின்றது.
சமார் புரூக்ஸ் அண்மையில் நிறைவுக்கு வந்த கரீபியன் பிரீமியல் லீக் (CPL) தொடரில் அசத்தலான ஆட்டத்தினை வெளிப்படுத்தியதனை அடுத்தே மேற்கிந்திய தீவுகளின் T20 உலகக் கிண்ண குழாத்தில் வாய்ப்பினைப் பெற்றிருக்கின்றார்.
>> அவுஸ்திரேலிய அணியிலிருந்து வெளியேறும் ஸ்டொயினிஸ்!
அத்துடன் சமார் புரூக்ஸ் மிக விரைவில் மேற்கிந்திய தீவுகளின் உலகக் கிண்ண குழாத்தில் இணைந்து கொள்வார் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
இதேநேரம் உலகக் கிண்ணத் தொடருக்கு முன்னதாக மேற்கிந்திய தீவுகள் அணி அவுஸ்திரேலிய அணியுடன் இரு போட்டிகள் கொண்ட T20I தொடரில் ஆடவிருப்பதோடு, இந்த தொடர் நாளை (05) ஆரம்பமாகின்றது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<