நியூசிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் தோல்வியைத் தழுவினாலும், கடந்த வருடத்தில் இலங்கை அணி வெளிப்படுத்திய திறமைகள் குறித்து தாம் மகிழ்ச்சியடைவதாக இலங்கை டெஸ்ட் அணித் தலைவர் தினேஷ் சந்திமால் தெரிவித்தார்.
புதுப்பொலிவுடன் நியூசிலாந்தை எதிர்கொள்ளும் இலங்கை கிரிக்கெட் அணி
தமது நியூசிலாந்து ….
இதுஇவ்வாறிருக்க, இளம் வீரர் குசல் மெண்டிஸின் முன்னேற்றம் குறித்து திருப்தி அடைவதாகத் தெரிவித்த தினேஷ் சந்திமால், கடந்த வருடத்தில் அவர் ஆயிரம் டெஸ்ட் ஓட்டங்கள் என்ற மைல்கல்லை எட்டியதற்கும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 423 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று டெஸ்ட் தொடரை நியூசிலாந்து அணி கைப்பற்றியது.
இந்த நிலையில், போட்டியின் பிறகு இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு குசல் மெண்டிஸ் குறித்து சந்திமால் கருத்து வெளியிடுகையில்,
”அவர் ஒவ்வொரு நாளும் தனது விளையாட்டுத் திறமையைப் பற்றித்தான் அதிகம் சிந்திப்பார். உண்மையில் அவருக்கு மிகச் சிறந்த எதிர்காலம் உண்டு. அதேபோல, கடந்த வருடம் டெஸ்ட் அரங்கில் ஆயிரம் ஓட்டங்களைக் கடந்து இளம் வீரராக சாதனை படைத்துள்ள அவருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன். அது ஒரு மிகப் பெரிய சாதனை. எனவே, அவர் அதை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வார் என்று நம்புகிறேன்” என தெரிவித்தார்.
நியூசிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் இலங்கை சார்பாக துடுப்பாட்டத்தில் பிரகாசித்த 23 வயதுடைய இளம் வீரரான குசல் மெண்டிஸ், ஒரு சதம் மற்றும் ஒரு அரைச்சதம் உள்ளடங்கலாக 225 ஓட்டங்களைப் பெற்று அதிக ஓட்டங்களைக் குவித்த 3ஆவது வீரராகவும் இடம்பிடித்தார்.
அத்துடன், நியூசிலாந்துடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் 2ஆவது இன்னிங்ஸில் 67 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்த மெண்டிஸ், கடந்த வருடம் 23 இன்னிங்ஸ்களில் விளையாடி 46.50 என்ற சராசரியுடன் 1,023 ஓட்டங்களைப் மொத்தமாகப் பெற்று, சர்வதேச மட்டத்தில் ஆயிரம் ஓட்டங்களைக் கடந்த 2ஆவது வீரர் என்ற பெருமையையும் பெற்றுக் கொண்டார்.
இதேநேரம், இலங்கை அணி கடந்த வருடம் 12 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருந்தது. இதில் 4 போட்டிகளில் மாத்திரமே வெற்றி பெற்றது. இதில் கடந்த வருட முற்பகுதியில் நடைபெற்ற பங்களாதேஷ் டெஸ்ட் தொடரை 2–0 எனவும், இலங்கையில் நடைபெற்ற தென்னாபிரிக்காவுடனான டெஸ்ட் தொடரை 2-0 எனவும் கைப்பற்றியது. ஆனால், இலங்கை அணி சகலதுறையிலும் ஓரளவு முன்னேற்றம் கண்டிருந்ததாக இலங்கை அணித் தலைவர் தினேஷ் சந்திமால் தெரிவித்தார்.
”ஓட்டுமொத்தத்தில் கடந்த வருடத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் இலங்கை அணி வெளிப்படுத்திய திறமைகள் தொடர்பில் மகிழ்ச்சியடைகிறேன். எனினும், சொந்த மண்ணில் இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரை வெல்வதற்கான வாய்ப்பு இருந்தும் அதனை தவறவிட்டமை கவலையளிக்கிறது. இதனிடையே, அணியில் உள்ள ஒருசில வீரர்கள் தமது திறமைகளை இன்னும் வெளிப்படுத்த வேண்டும். அந்த குறைபாடுகளையெல்லாம் நிவர்த்தி செய்துகொண்டு இவ்வருடத்தில் சிறப்பாக விளையாடுவதற்கு எதிர்பார்த்துள்ளோம்” என்றார்.
முக்கிய வீரர்களின் பிரகாசிப்புடன் முடிவடைந்த டெஸ்ட் தொடர்
நியூசிலாந்து மற்றும் சுற்றுலா இலங்கை அணிகளுக்கு இடையிலான ….
இப்போட்டித் தொடரின் முதல் போட்டியில் சிறப்பாக விளையாட முடிந்தாலும், இரண்டாவது போட்டியில் வெளிப்படுத்திய மோசமாக துடுப்பாட்டம் காரணமாக நியூசிலாந்து அணி முன்னிலை பெற்றதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அதேபோல, ”குசல் மெண்டிஸ் மற்றும் அஞ்சலோ மெதிவ்ஸின் அபார துடுப்பாட்டம் காரணமாக முதல் டெஸட் போட்டியை சமநிலையில் முடிவுக்கு கொண்டுவர முடிந்தது. எனினும், இரண்டாவது போட்டியில் சுரங்க லக்மால் மற்றும் லஹிரு குமாரவுக்கு இணையாக எந்தவொரு பந்துவீச்சாளரும் ஒத்துழைப்பு வழங்கவில்லை. ஆனால் துஷ்மன்த சமீர, கசுன் ராஜித ஆகிய வீரர்கள் தொடர்ந்து முதல்தரப் போட்டிகளில் விளையாடி தமது திறமைகளை வெளிப்படுத்துவார்கள்” என நம்புகிறேன் என்றார்.
அதிலும் குறிப்பாக, துடுப்பாட்டத்துக்கு சாதகமான ஆடுகளங்களில் எவ்வாறு பந்துவீச வேண்டும் என்பதை அடையாளம் கண்டோம். அவ்வாறான ஆடுகளங்களில் விளையாடியிருந்த நியூசிலாந்து அணி 3 தடவைகள் 500 ஓட்டங்களுக்கு மேல் எடுத்து வெற்றியையும் பதிவு செய்தது.
துடுப்பாட்டத்துக்கு சாதகமான ஆடுகளங்களில் எவ்வாறு பந்துவீச வேண்டும் என்பதை இன்னும் கொஞ்சம் கற்றுக் கொள்ள வேண்டும். இதுதான் சிறந்த அனுபவத்தைப் பெற்றுக் கொடுக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<