வரலாறு படைத்த துடுப்பு மட்டையை ஏலம் விடும் ஹேர்ஷல் கிப்ஸ்

230
Herschelle Gibbs

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவி அளிக்க தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான ஹேர்ஷல் கிப்ஸ், தான் பயன்படுத்திய துடுப்பு மட்டையொன்றை ஏலம் விடுவதற்கு முன்வந்துள்ளார்.

உலக நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யும் வகையில் விளையாட்டு நட்சத்திரங்கள் பல்வேறு வழிகளிலும் நிதியுதவி அளித்து வருகின்றனர்.

உலகக் கிண்ண ஜேர்சியை யுனிசேப் நிறுவனத்திற்கு வழங்கவுள்ள நிக்கோல்ஸ்

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரரான ஹென்ரி நிக்கோல்ஸ், 2019ஆம்..

கிரிக்கெட் வீரர்களை பொறுத்தமட்டில் இங்கிலாந்தின் ஜோஸ் பட்லர், பங்களாதேஷின் சகிப் அல் ஹசன், முஷ்பிகுர் ரஹீம், இந்தியாவின் லோகேஷ் ராகுல், பாகிஸ்தானின் அசார் அலி மற்றும் நியூஸிலாந்தின் நிக்கொலஸ் ஹென்ரி ஆகிய வீரர்கள் தாம் பயன்படுத்திய ஜேர்சி, துடுப்பு மட்டை உள்ளிட்ட கிரிக்கெட் உபகரங்களை ஏலத்தில் விட்டு நிவாரணங்களுக்காக உதவி செய்திருந்தனர்.

இப்பட்டியலில் தற்போது தென்னாபிரிக்காவின் முன்னாள் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான ஹேர்ஷல் கிப்ஸும் இணைந்து கொண்டுள்ளார்.

கடந்த 2006இல் ஜொஹனஸ்பேர்கில் நடைபெற்ற அவுஸ்திரேலியா அணிக்கெதிரான ஒருநாள் போட்டியில் 111 பந்துகளில் 175 (21 பௌண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்கள்)

ஓட்டங்களை எடுத்து வரலாறு படைத்த துடுப்பு மட்டையை ஏலத்தில் விற்று நிதி திரட்ட கிப்ஸ் முடிவு செய்துள்ளார்.

குறித்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட் இழப்புக்கு 434 ஓட்டங்களைக் குவித்தது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென்னாப்பிரிக்கா அணி, 49.5 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 438 ஓட்டங்களை எடுத்து ஒரு விக்கெட்டினால் த்ரில் வெற்றி பெற்று புதிய வரலாற்று பதிவை நிலநாட்டியது.

இதில் தென்னாபிரிக்கா அணிக்காக அபாரமாக துடுப்பெடுத்தாடிய ஹேர்ஷல் கிப்ஸ் சதமடித்து அசத்தி அந்த அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார்.

இந்த நிலையில், குறித்த போட்டியில் பயன்படுத்திய துடுப்பு மட்டையை ஏலம் விடுவது குறித்து தனது டுவிட்டர் சமூகவலைத்தளத்தில் புகைப்படமொன்றை வெளியிட்ட ஹேர்ஷல் கிப்ஸ்,

“இதில் 438 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற உதவிய எனது துடுப்பு மட்டையை ஏலத்தில் விற்று கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவி செய்ய உள்ளேன்” என குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், ஹேர்ஷல் கிப்ஸின் இந்த முயற்சிக்கு தென்னா்பிரிக்கா அணியின் முன்னாள் பயிற்சியாளரான மிக்கி ஆர்தர் பாராட்டுக்களைத் தெரிவித்திருந்ததுடன், நல்ல முடிவு கிப்ஸ். அந்த துடுப்பு மட்டை மதிப்புடையதாக இருக்கும் என குறிப்பிட்டார்;.

46 வயதான ஹேர்ஷல் கிப்ஸ், தென்னாபிரிக்கா அணிக்காக 90 டெஸ்ட், 248 ஒருநாள் மற்றும் 23 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றினால் தென்னாபிரிக்காவில் இதுவரை 6 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 116 பேர் உயிரிழந்துள்ளனர்.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<