மூன்று டெஸ்ட் போட்டிகளை கொண்ட தென்னாபிரிக்காவுடனான தொடரை 3-0 அடிப்படையில் தோல்வியுற்ற நிலையில், சில கிரிக்கெட் ரசிகர்கள், நிபுணர்கள் மற்றும் கிரிக்கெட் ஆய்வாளர்கள் அணித்தலைமையில் மாற்றங்கள் செய்ய வேண்டும் என்றும், நடைபெற்று வரும் இந்த சுற்றுபயணத்திற்கு பின்னர், போட்டி வடிவத்துக்கு ஏற்றதாற்போல் வெவ்வேறான அணித்தலைவர்களை நியமிக்க வேண்டுமென்றும் கூறிய தர்க்கங்கள் வலுப்பெறத் தொடங்கின.
இந்நிலையில், இலங்கை கிரிக்கெட் சபைத் தலைவர் திலங்க சுமதிபால மற்றும் தேசிய தெரிவுக்குழு தலைவர் சனத் ஜயசூரிய, அணித் தலைமையில் மாற்றம் குறித்து தாங்கள் இன்னும் நினைக்கக்கூட இல்லை என்று இன்று நடைபெற்ற ஊடகவியளாளர்களுடனான சந்திப்பில் தெளிவாகக் தெரிவித்தனர்.
”நாங்கள் இன்னும் குறித்த போட்டித் தொடரின் இடைநடுவில் இருப்பதனால், அணித் தலைமையில் மாற்றங்களை ஏற்படுத்துவது குறித்து எவ்விதமான நோக்கங்களும் இந்த தருணத்தில் எங்களிடம் இல்லை.
அத்துடன், இவை குறித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை. கடந்த வருடம் நான் கூறியதை போல் எஞ்சலோ மெத்திவ்ஸ் எதிர்வரும் 2019 ஆம் ஆண்டு உலக கிண்ணம் வரை அணித் தலைவராக இருப்பார். கடமை மற்றும் பொறுப்புள்ள ஒரு தலைவராகவும் அதே நேரம் சிறந்த விளையாட்டு வீரராகவும் அவர் இருக்கிறார்” என்று இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் திலங்க சுமதிபால தெரிவித்தார்.
”சாதரணமாக நாங்கள் போட்டிகளில் தோல்வியடையும் நேரங்களில் அனைவரும் அணித் தலைவரை குற்றம் சொல்வது சகஜமாகும். ஆனால் அப்படி சொல்வது சரியல்ல. அத்துடன், அணித் தலைவரை மாற்றுவது குறித்து விவாதிப்பதற்கு இது சரியான தருணம் அல்ல, ஏனெனில், நாம் இன்னும் தென்னாபிரிக்கவுக்கான சுற்றுப்பயணத்தில் இடைநடுவில் இருக்கின்றோம்.
எஞ்சலோ மெத்திவ்ஸின் வழிநடத்துதலில் சில குறைபாடுகள் இருக்கலாம், யாருமே குறைபாடுகள் அற்ற முழுமையானவர்கள் இல்லை. ஆகவே, எதிர்வரும் T20 போட்டிகளில் சிறப்பாக செயற்பட அவரை நாங்கள் ஊக்குவிக்க வேண்டும்.
நடைபெறவுள்ள T20 போட்டிகளில் நாம் தோல்வியுற்றால் கூட அணித்தலைமையில் இப்போதே மாற்றங்கள் ஏற்படுவதற்கு சாத்தியங்கள் இல்லை. ஆனால் இது குறித்து பின்பு ஆலோசிக்கலாம”, என்று அணித் தலைமைத்துவத்தில் மாற்றம் குறித்த விடயத்தில், சனத் ஜயசூரிய தனது கருத்தை ஊடகவியலாளர்களுக்கு தெரிவித்தார்.
இலங்கை கிரிக்கெட் சபையின் உத்தியோகபூர்வ அதிகாரிகள் மற்றும் அணி நிர்வாகத்தினருடன் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற பிரத்தியேகமான தொலைபேசி அழைப்பில், எதிர் வரும் T20 மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட 50 ஓவர்கள் ஒருநாள் போட்டிகள் தொடர்பான உத்திகள் கலந்தாலோசிக்கப்பட்டது.
”அவர்களுக்கு மேலும் உளஅளவில் நம்பிக்கையை அளித்து அவர்களுடைய வலிமைக்கு ஏற்றவாறு விளையாட வேண்டும் என்று நினைத்தோம். டெஸ்ட் போட்டியில் வெளிப்படுத்திய திறமைகளை குறித்து மிகவும் ஏமாற்றம் அடைந்திருந்தோம். அதிலும் துடுப்பாட்ட வீரர்கள் மிகவும் ஏமாற்றிவிட்டனர். எனினும், எமது அணியினர் மீண்டெழுவார்கள் என நம்பிக்கை வைத்துள்ளோம். எங்களுடைய வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயற்பட்டிருந்தனர். அது இலங்கை கிரிக்கெட்டுக்கு நல்ல அறிகுறியாக உள்ளது. மணிக்கு 140 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசும் சில பந்துவீச்சாளர்கள் இருக்க வேண்டுமென்பது எங்களுடைய நோக்கமாக இருக்கிறது” என்று திலங்க சுமதிபால மேலும் தெரிவித்தார்.
அதே நேரம் டெஸ்ட் போட்டி நடைபெற்ற அனைத்து மைதானங்களும், தென்னாபிரிக்க பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாகவே தயார் அல்லது வடிவமைப்பு செய்யப்பட்டிருந்தது. எனினும், குறுகிய வடிவ கிரிக்கெட் போட்டிகளில் எங்களுடைய அணிக்கு சற்றேனும் சாதகமான ஆடுகளத்தினை எதிர்பார்க்கலாம்.
குறித்த டெஸ்ட் போட்டிகளில் ஒருவரேனும் சதம் பெறவில்லை, எனினும் மூன்று அரை சதங்கள் பெறப்பட்டுள்ளன. அத்துடன், அந்த தொடரில் இலங்கை அணியின் துடுப்பாட்ட விகிதம் 18.80 இருந்தது. இது, இரண்டு அல்லது மூன்று டெஸ்ட் தொடர்களில், அணியின் இரண்டாவது குறைந்த பட்ச ஓட்ட வீதமாகும்.
”நடைபெற்று வரும் தொடரை குறித்து மகிழ்ச்சியுடன் பேசும் நிலையில் நான் இல்லை. எனினும், இவ்வாறான அனுபவமற்ற இளம் அணியின் பின்னடைவுகளை நாம் எதிர்பார்த்திருக்க வேண்டும். துடுப்பாட்ட துறையை பொறுத்தவரை வெளிநாடுகளில் நடைபெறும் தொடர்களுக்கு மேலும் அபிவிருத்தி செய்துகொள்ள வேண்டும்” என்று சனத் ஜயசூரிய தெரிவித்தார்.
அதேநேரம், கடந்த வருட இறுதியில் பல்வேறான ஊடகங்கள், சனத் ஜயசூரியவும் தெரிவுக் குழு அங்கத்தவர்களும் தெளிவற்ற தேர்வுகளால் ஏற்பட்ட குழப்பங்களால் பதவி விலகுவதாக செய்திகள் வெளியிட்டிருந்தன. ஆனால், சனத் ஜயசூரிய, அவரோ அல்லது அவரது தேர்வுக் குழு அங்கத்தவர்களோ பதவி விலகமாட்டார்கள் என்பதை உறுதிப்படுத்தினார்.