இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சர்வதேச கிரிக்கெட் வர்ணனையாளருமான ஹேமங் பதானி, ஜப்னா கிங்ஸ் அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரின் இரண்டாவது பருவம் அடுத்த மாதம் 5ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரை கொழும்பு மற்றும் ஹம்பாந்தோட்டையில் நடைபெறவுள்ளது.
இந்த நிலையில், இந்த ஆண்டு LPL தொடரில் புதிய பெயருடன் களமிறங்கும் ஜப்னா கிங்ஸ் அணி, முன்னணி பயிற்சியாளர்கள் மற்றும் அதிகாரிகளை தமது அணியுடன் ஒப்பந்தம் செய்து வருகின்றது.
அந்த வரிசையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான ஹேமங் பதானியை அந்த அணியின் ஆலோசகராக இணைத்துக்கொண்டுள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற அங்குரார்ப்பண LPL தொடரில் சம்பியன் பட்டம் வென்ற ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியின் உதவி பயிற்சியாளராக அவர் செயல்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
- ஜப்னா கிங்ஸ் அணியின் பயிற்சியாளர்கள் விபரம் வெளியீடு
- கோல் கிளேடியேட்டர்ஸ் அணியின் பயிற்சியாளராக உமர் குல்
- LPL தொடருடன் பங்குதாரர்களாக கைகோர்க்கும் Rario நிறுவனம்
இந்தியாவுக்காக 4 டெஸ்ட் மற்றும் 40 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள 45 வயதான ஹேமங் பதானி சென்னையைச் சேர்ந்தவர் ஆவார்.
சென்னை சுப்பர் ஸ்டார்ஸ், விதர்பா மற்றும் ஐபிஎல் தொடரில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிகளுக்காக விளையாடியுள்ள அவர், ரஞ்சி கிண்ண கிரிக்கெட் தொடரில் தமிழக அணிக்கு தலைவராகவும் செயல்பட்டுள்ளார்.
இதனிடையே, 2019 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் சம்பியன் பட்டம் வென்ற சேப்பாக் சுப்பர் கில்லீஸ் அணியின் பயிற்சியாளராகவும் அவர் செயல்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இவர் தற்பொழுது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் கிரிக்கெட் போட்டிகளை தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார்.
இதுஇவ்வாறிருக்க, இந்த ஆண்டு LPL தொடரில் களமிறங்கும் ஜப்னா கிங்ஸ் அணியின் பயிற்சியாளராக திலின கண்டம்பி செயல்படவுள்ளதுடன், உதவிப் பயிற்றுவிப்பாளராகவும், வேகப்பந்துவீச்சு பயிற்சியாளராகவும் மரியோ வில்லவராயன் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேநேரம், ஜப்னா கிங்ஸ் அணியின் துடுப்பாட்டப் பயிற்சியாளராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரரான ஜெஹான் முபாரக்கும், சுழல்பந்துப் பயிற்சியாளராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்களில் ஒருவரான சஜித் பத்திரனவும் செயல்படவுள்ளனர். மறுமுனையில் விமுக்தி தேசப்பிரிய ஜப்னா கிங்ஸ் அணியின் களத்தடுப்பு பயிற்சியாளராக கடமையாற்றவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<