கீர்த்திகன் கூடைப்பந்து தொடரில் சம்பியன்களாக ஏஞ்சல், இந்துக் கல்லூரி அணிகள்

789

ஐந்தாவது தடவையாக நேற்று (05) நடைபெற்று முடிந்திருக்கும் கீர்த்திகன் நினைவுக்கிண்ண கூடைப்பந்துத் தொடரில்,  ஆண்கள் பிரிவு சம்பியன்களாக மானிப்பாய் ஏஞ்சல் சர்வதேச பாடசாலையும், பெண்கள் பிரிவு சம்பியன்களாக கொக்குவில் இந்துக் கல்லூரியும் நாமம் சூடியிருக்கின்றன.

வருடந்தோறும் கொக்குவில் இந்துக் கல்லூரியினர் ஏற்பாட்டில் நடைபெற்று வரும் இந்த கீர்த்திகன் நினைவுக் கிண்ண கூடைப்பந்து தொடரின் ஐந்தாவது பருவகாலத்திற்கான இறுதிப் போட்டிகள் கொக்குவில் இந்துக் கல்லூரியின் கூடைப்பந்து அரங்கில் இடம்பெற்றிருந்தன.

ஹேர்பேர்ட் கிண்ண சம்பியனாக முடிசூடிய யாழ். ஏஞ்சல் சர்வதேச பாடசாலை

மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரியின் கூடைப்பந்து மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (30) இடம்பெற்று முடிந்த

20 வயதின் கீழ்ப்பட்ட  ஆண், பெண் என இரண்டு பாலினைச் சேர்ந்த பாடசாலை அணிகளுக்காக இம்முறை இந்த கூடைப்பந்து தொடர் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. பெண்களுக்கான இறுதிப் போட்டியில் கொக்குவில் இந்துக் கல்லூரியும் யாழ். திருக்குடும்ப கன்னியர் மட அணியும் மோதியிருந்தன.

நேற்று பிற்பகல் 3.30 மணியளவில் தொடங்கியிருந்த மகளிர் அணிகளுக்கான இறுதி ஆட்டத்தில் முதற் கால்பகுதியினை கொக்குவில் இந்துக் கல்லூரியினர் 17:12 எனக் கைப்பற்றியிருந்தனர்.

தொடர்ந்து இரண்டாம், மூன்றாம் கால்பகுதிகளிலும் அபாரம் காட்டிய கொக்குவில் மகளிர் அந்த இரண்டு கால்பகுதிகளினையும் முறையே  17:06, 17:16 என தம்வசப்படுத்திக் கொண்டனர்.

இதன்படி, மகளிருக்கான இறுதி ஆட்டத்தின் மூன்றாம் கால்பகுதி நிறைவின் போது கொக்குவில் இந்துக் கல்லூரி 51:34 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றிருந்தது.

பின்னர் இறுதிக் கால்பகுதியில் முன்னர் விட்ட பிழைகளைத் திருத்தி திருக்குடும்ப கன்னியர் மட அணியினர் 25 புள்ளிகளைச் சேர்த்திருந்தனர். எனினும், கொக்குவில் இந்துக் கல்லூரிக்கு இறுதிக் கால்பகுதியில் கிடைத்த 15 புள்ளிகள் ஆட்டத்தில் வெற்றி பெற போதுமாக இருந்தது.

முடிவில், 66:59 என்கிற புள்ளிகள் அடிப்படையில் கொக்குவில் இந்துக் கல்லூரியானது போட்டியில் வென்று மகளிர் பிரிவுக்கான கீர்த்திகன் நினைவுக் கிண்ண கூடைப்பந்து தொடரின் சம்பியன்களானது.   

ஆண்களுக்கான இறுதிப் போட்டி

மகளிருக்கான இறுதிப் போட்டியினை அடுத்து ஆண்களுக்காக இறுதிப் போட்டியும் அதே அரங்கில் இடம்பெற்றது. இதில், மானிப்பாய் ஏஞ்சல் சர்வதேச பாடசாலை அணியுடன் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி மோதியிருந்தது.  

கடந்த வாரம் மட்டக்களப்பில் இடம்பெற்று முடிந்த ஹேர்பேர்ட் கிண்ணத் தொடரில் நீர்கொழும்பு மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரியினை வீழ்த்தி சம்பியன் பட்டம் வென்றிருந்த ஏஞ்சல் சர்வதேச பாடசாலை அணியினர், இறுதிப் போட்டியின் முதல் கால்பகுதியினை 21:13 என்ற புள்ளிகள் அடிப்படையில் கைப்பற்றினர்.

எனினும், இரண்டாம் கால்பகுதியினை யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி 12:10 எனக் கைப்பற்றி ஏஞ்சல் சர்வதேச பாடசாலை அணிக்கு பதிலடி தந்தது. எனினும், மீண்டும் திறமையான ஆட்டத்தினால் மூன்றாம் கால்பகுதியினை 12:08 என ஏஞ்சல் சர்வதேச பாடசாலை அணியினர் கைப்பற்றினர்.  

இதன்படி  போட்டியின் மூன்றாம் கால்பகுதி முடிவின் போது 43:33 என ஏஞ்சல் சர்வதேச பாடசாலை அணியின் ஆதிக்கமே இருந்தது.

பின்னர், இறுதிக் கால்பகுதியில் தொடர்ந்தும் சிறப்பாக செயற்பட்டு ஏஞ்சல் சர்வதேச பாடசாலை அணியே வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டிருந்த போதிலும், அசூர ஆட்டத்தினை வெளிப்படுத்திய யாழ். மத்திய கல்லூரியினர் புள்ளிகளை மளமளவெனப் பெறத் தொடங்கினர். இதனால் ஆட்டம் சூடுபிடிக்கத் தொடங்கியது.

இறுதிப் கால்பகுதியில் மொத்தமாக 23 புள்ளிகளைப் பெற்று யாழ். மத்திய கல்லூரி ஏஞ்சல் சர்வதேச பாடசாலை அணியை நெருங்கியிருந்த போதிலும், அதிர்ஷ்டவசமாக 14 புள்ளிகளை ஏஞ்சல் சர்வதேச பாடசாலை அணியினர் பெற்றுக் கொண்ட காரணத்தினால், அவர்கள் ஒரு புள்ளி வித்தியாசத்தில் 57:56 என கீர்த்திகன் நினைவுக் கிண்ண கூடைப்பந்து தொடரின் ஆண்கள் பிரிவு வெற்றியாளர்களாக மாறினர்.  

எனவே, இந்த வெற்றியுடன் ஒரு வாரத்திற்குள்ளேயே  பாடசாலைகளுக்கான இரண்டு கூடைப்பந்து தொடர்களின் சம்பியன் பட்டத்தினை வென்று ஏஞ்சல் சர்வதேச பாடசாலை சிறப்பான பதிவினைக் காட்டியிருக்கின்றது.

மேலும் பல வீடியோக்களைப் பார்வையிட