அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் டேவிட் வோர்னர் இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவது தொடர்பிலான தீர்மானம் இதுவரை எடுக்கப்படவில்லை என அவ்வணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் அன்ரு மெக்டோனல்ட் தெரிவித்துள்ளார்.
இந்திய அணிக்கு எதிராக டெல்லியில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டேவிட் வோர்னரின் தலையில் பந்து தாக்கியிருந்தது. இதனைத்தொடர்ந்து அவர் போட்டியிலிருந்து முழுமையாக வெளியேறியதுடன், மெட் ரென்சோவ் மாற்றீடு வீரராக இணைக்கப்பட்டார்.
>> தலையில் பந்து தாக்கியதால் வெளியேறிய டேவிட் வோர்னர்
இவ்வாறான நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டேவிட் வோர்னர் விளையாடுவாரா? என்ற கேள்விக்கு பதிலளித்த மெக்டோனல்ட், “டேவிட் வோர்னர் இப்போதும் வேதனையுடன் இருக்கிறார். இதுதொடர்பில் நாம் கலந்துரையாடியுள்ளோம். உடனடியாக இந்த விடயம் தொடர்பில் முடிவுகளை எடுக்க முடியாது. என இந்தவிடயம் சரியாகும் வரை பார்வையிட வேண்டும்.
காயத்தின் வேதனை மற்றும் அது சரியான நிலைக்கு வருவதற்கான காலம் தொடர்பில் அவதானிக்கவேண்டும். வோர்னரின் நிலை குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது. குணமடைவதற்கு ஒருவார காலம் வரையில் எடுக்கலாம். ஆனால் முடிவெடுக்கும் விடயத்தை வைத்தியக் குழுவிடம் விட்டுள்ளோம். வோர்னர் குணமடைந்த பின்னர் எமக்கு அறிவிப்பர்” என்றார்.
அதேநேரம், அவுஸ்திரேலிய அணியின் மற்றுமொரு வீரரான வேகப் பந்துவீச்சாளர் ஜோஷ் ஹேஷல்வூட், மூன்றாவது போட்டியில் விளையாடமாட்டார் என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. உபாதையிலிருந்து முழுமையாக குணமடையாத காரணத்தல் அவர் நாடு திரும்பவுள்ளதாகவும் மெக்டோனல்ட் குறிப்பிட்டார்.
இதேவேளை உபாதை காரணமாக இரண்டாவது டெஸ்டில் விளையாடாமல் இருந்த கெமரூன் கிரீன் 100 சதவீத உடற்தகுதியுடன் உள்ளதாகவும், மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் மெக்டோனல்ட் மேலும் தெரிவித்தார்.
சுற்றுலா அவுஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி மார்ச் முதலாம் திகதி ஆரம்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<