இலங்கையின் முன்னனி கழகங்களில் ஒன்றான ஹெவலொக் ரக்பி கழக அணி, தாம் 2013ஆம் ஆண்டில் லீக் போட்டியை வெற்றி கொண்டதைப் போன்று இம்முறையும் 2016/17ஆம் ஆண்டுக்கான டயலொக் ரக்பி லீக் போட்டிகளில் ஜெயிக்க காத்திருக்கிறது.
1915ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இக்கழகமானது இதுவரையில் இலங்கை அணிக்கு சிறந்த வீரர்களை வழங்குவதில் பாரிய பங்களிப்பை வழங்கியுள்ளது. அவ்வகையில் மைக்கல் ஜயசேகர மற்றும் ஹிஷாம் ஆப்தீன் ஆகிய வீரர்கள் இக்கழகத்தின் மூலம் அறிமுகமான முன்னணி வீரர்களாகும். ஜயசேகர தற்பொழுது இலங்கை ரக்பி தெரிவுக் குழுவின் தலைவராக கடமையாற்றுகிறார். அதேபோன்று, ஆப்தீன் தெரிவுக் குழுவின் உறுப்பினராக கடமையாற்றுகிறார்.
கடந்த காலம்
தலைவர் ஹென்றி டெர்ரன்ஸின் தலைமையில் 2013ஆம் ஆண்டு பிரபல கண்டி கழகத்தை வென்று லீக் போட்டிகளில் சம்பியன் பட்டம் வென்றது. ஆனாலும் 2014ஆம் ஆண்டு 3ஆவது இடத்தையும், கடந்த ஆண்டு 2ஆவது இடத்தையுமே இவ்வணி பெற்றுக்கொண்டது. இம்முறை ஹெவலொக் அணி, முன்னனி வீரரான தனுஷ்க ரஞ்சனை இழந்துள்ளது.
அணிக்கு 7 பேர் கொண்ட இலங்கை ரக்பி அணியை தலைமை தாங்கிய ரஞ்சன் இம்முறை கண்டி கழகம் சார்பாக விளையாடவுள்ளார். எனினும், எந்தவொரு அணியையும் வெல்லும் பலமும், திறமையும் ஹெவலொக் அணியிடம் இம்முறை காணப்படுகிறது.
2014 ஆம் ஆண்டு சம்பியனான இசிபதன கல்லூரி அணியின் வீரரான ப்ரொப் நிலையில் விளையாடும் கனுக திஸ்ஸாநாயகவும் இம்முறை இக்கழகத்தில் இருந்து கண்டி அணி நோக்கி இடம்பெயர்ந்துள்ளார்.
கடந்த ஆண்டு லீக் போட்டிகளில் ஹெவலொக் அணி, தாம் விளையாடிய 14 போட்டிகளில் 11 போட்டிகளில் வெற்றி பெற்றது. 2 போட்டிகளில் தோல்வியுற்றதுடன் ஒரு போட்டி வெற்றி தோல்வி இன்றி சமநிலையில் முடிந்தது.
இதன்போது, ஹெவலொக் அணியின் பிரசாத் மதுசங்க மொத்தமாக 12 ட்ரைகளை வைத்து அணியின் சார்பாக அதிக ட்ரை வைத்தவர் என்ற பெருமையை பெற்றார். இதன் மூலம் இலங்கை அணிக்கும் தெரிவானார் என்பது குறிப்பிடித்தக்கது.
குழாம்
சென்ற வருட போட்டிகளில் முன் வரிசையில் தன் திறமையை காட்டிய துஷ்மந்த பிரியதர்ஷன இம்முறை ஹெவலொக் அணிக்கு தலைமை தாங்கவுள்ளார். இம்முறை பல அனுபவம் வாய்ந்த முன் நிலை வீரர்கள் இவ்வணியில் காணப்படுகின்றனர். லிஸ்டன் ப்ளெட்னீ, ஜேசன் மற்றும் துஷ்மந்த ஆகியோர் முன் வரிசைக்கு பலத்தை வழங்கவுள்ளதோடு, ஷாரோ பெர்னாண்டோ, சுதர்ஷன முததந்திரி, யோஷித்த மற்றும் ரோஹித ராஜபக்ஷ சகோதரர்கள் மூன்றாம் வரிசையை பலப்படுத்துகின்றனர்.
காயத்திலிருந்து மீண்டுள்ள இலங்கை அணி வீரர்களான துலாஜ் பெரேரா மற்றும் நிரோஷான் பெர்னாண்டோ ப்ளை ஹாப் அல்லது பின் வரிசையில் விளையாடவுள்ளனர். காயத்தின் காரணமாக இலங்கை அணிக்கான வாய்ப்பை தவறவிட்ட மிதுன் ஹப்புகொ மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளமை அணியின் வேகத்தை நிச்சயம் அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை. சாமர தாபரேவும் இம்முறை சிறப்பாக செயற்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இளம் வீரர்கள்
மத்திய பின் வரிசையில் சுதம் சூரியாராச்சி சிறப்பான விளையாட்டை வெளிக்காட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 20 வயத்திற்குற்பட்ட இலங்கை ரக்பி அணியில் உள்ளடங்கிய கெவின் டிக்சன், நிரோஷன் பெரேரா, லசிந்து இஷான், சாமிக குசல் மற்றும் விமுக்தி ராகுல ஆகியோரும் இம்முறை ஹெவலொக் அணி சார்பாக சிறப்பான விளையாட்டை வெளிக்காட்டுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பயிற்றுவிப்பாளர்கள்
டுலகீஸ் ட்வீட்டா அவர்களே சென்ற வருடம் ஹெவலொக் அணியின் பிரதான பயிற்றுவிப்பாளராக கடமையாற்றிய பொழுதும், இம்முறை இலங்கை ரக்பி அணியின் முன்னாள் பயிற்றுவிப்பாளர் ரொன்னி இப்ராகிம் இவ்வணியின் பிரதான பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
2013ஆம் ஆண்டு நடைப்பெற்ற செரண்டிப் கிண்ண போட்டிகளில் ரொன்னி இப்ராகிம் பயிற்றுவிப்பாளராக இருந்த பொழுது போலந்து அணியை இலங்கை அணி வென்றது அதிகமானவர்கள் மறக்காத ஒரு விடயம். இம்முறை தனது தயார்படுத்தலின் கீழ் ஹெவலொக் அணி சிறப்பாக செயற்படும் என அவர் எதிர்பார்க்கிறார்.
ரொஷான் ஒபத அணியின் முகாமையாளராக தொடர்ந்து இரண்டாவது வருடமும் கடமையாற்றவிருக்கிறார்.
Squad 2016/17