பொலிஸ் மைதானத்தில் நடைபெற்ற பொலிஸ் கழகத்துடனான போட்டியில் ஹெவலொக் கழகம் 37-07 என்ற புள்ளிகள் அடிப்படையில் டயலொக் ரக்பி லீக் பருவ காலத்திற்கான இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்தது.
தமது சொந்த மண்ணில் விளையாடிய பொலிஸ் கழகத்தினால் ஹெவலொக் கழக வீரர்களின் அதிரடி ஆட்டத்தை சமாளிக்க முடியாமற் போனது.
போட்டியின் ஆரம்பத்திலேயே பொலிஸ் கழகத்தின் வீரரொருவர் உபாதை காரணமாக வெளியேறினார். 7ஆவது நிமிடத்தில் பொலிஸ் கழகத்திற்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை ரஜித் சன்சோனி தவறவிட்டார். 16ஆவது நிமிடத்தில் துலாஜ் பெரேரா கிடைத்த பெனால்டி வாய்ப்பை கம்பங்களுக்கிடையில் லாவகமாக உதைத்து ஹெவலொக் கழகத்தை முன்னிலைப் படுத்தினார். (பொலிஸ் கழகம் 00-03 ஹெவலொக் கழகம்)
போட்டியின் முதலாவது ‘ட்ரை’யினை ஹெவலொக் வீரர் சாமர தாபரே வைத்தார். 60 மீற்றர் ஓடி ட்ரை வைத்து ஹெவலொக் அணியின் பலத்தை நிரூபிக்க கன்வர்ஷன் வாய்ப்பை சிறப்பான முறையில் அடித்து மேலும் ஸ்திரப்படுத்தினார் துலாஜ் பெரேரா. (பொலிஸ் கழகம் 00-10 ஹெவலொக் கழகம்)
முதல் பாதி நிறைவடைய முன்பு பிரசாத் மதுஷங்க மேலும் ஒரு ட்ரையையும், துலாஜ் மேலும் இரு பெனால்டிகளையும் ஹெவலொக் அணிக்காகப் பெற்றுக்கொடுத்தனர். மேலும் பொலிஸ் கழகத்தின் சூலா சுசாந்த மஞ்சள் அட்டை வழங்கப்பெற்று வெளியேற்றப்பட்டார்.
முதற் பாதி : பொலிஸ் கழகம் 00-23 ஹெவலொக் கழகம்
இரண்டாவது பாதியிலும் தனது ஆதிக்கத்தை தொடர்ந்தது ஹெவலொக் கழகம். பிரசாத் மதுஷங்க தனது இரண்டாவது ட்ரையினை வைக்க மீண்டும் கன்வர்ஷன் உதையை சரியாக உதைத்தார் துலாஜ் பெரேரா (பொலிஸ் கழகம் 00-30 ஹெவலொக் கழகம்)
எனினும் சமாளித்து எழுந்த பொலிஸ் கழகத்திற்கு ஜோயல் பெரேரா ட்ரை ஒன்றினை வைத்தார். ‘புல் பக்’ (full back) வீரர் சம்சோனி கன்வர்ஷனை சரியாக அடித்தார். (பொலிஸ் கழகம் 07-30 ஹெவலொக் கழகம்)
போட்டியின் இறுதி நிமிடங்கள் சிறப்பான முறையில் அமையவில்லை என்றாலும் ஹெவலொக் கழகத்திற்காக நிஷோன் பெரேரா ட்ரை ஒன்றை வைத்தார்.
மேலும் வீரர்கள் தவறான நடவடிக்கையில் ஈடுபட்டதனால் நடுவர் பொலிஸ் கழக வீரர் ரதீஷ செனவிரத்ன மற்றும் ஹெவலொக் கழக வீரர்கள் ஷெனால் டீலக, ஷாரோ பெர்னாண்டோ மற்றும் விமுக்தி ராகுல ஆகியோருக்கு மஞ்சள் அட்டை வழங்க நேர்ந்தது.
முழு நேரம் : பொலிஸ் கழகம் 07-37 ஹெவலொக் கழகம்
நடுவர்: பிரியந்த குணரத்ன
ThePapare.com போட்டியின் ஆட்ட நாயகன்: துலாஜ் பெரேரா (ஹெவலொக் கழகம்)
புள்ளி விபரம்
பொலிஸ் கழகம்
ட்ரை – ஜோயல் பெரேரா
கன்வர்ஷன் – சம்சோனி
ஹெவலொக்
ட்ரை – நிஷான் பெரேரா, சாமர தாபரே, பிரசாத் மதுஷங்க (2)
கன்வர்ஷன் – துலாஜ் பெரேரா (4)
பெனால்டி – துலாஜ் பெரேரா (3)