டயலொக் ரக்பி போட்டிகளில் இதுவரையில் எந்த ஒரு போட்டியிலும் தோல்வியுறாத இரு அணிகளான ஹெவலொக் மற்றும் கடற்படை அணிகளுக்கிடையிலான போட்டியில் 26-19 என்ற புள்ளிகள் அடிப்படையில் ஹெவலொக் அணி வெற்றிபெற்றது.
ஹெவலொக் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் ஹெவலொக் அணி முதலில் உதைந்து போட்டியை ஆரம்பித்து வைத்தது. போட்டி ஆரம்பித்து முதலாவது நிமிடத்திலேயே ஹெவலொக் அணி புள்ளிகளை பெற்றுக்கொண்டது. கடற்படை அணி தவறு செய்தமையால் ஹெவலொக் அணிக்கு பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டது. கிடைத்த வாய்ப்பின் மூலம் 35 மீட்டர் தூரத்தில் இருந்து வெற்றிகரமாக உதைத்த துலாஜ் பெரேரா, ஹெவலொக் அணிக்கு 3 புள்ளிகளை பெற்றுக்கொடுத்தார். (ஹெவலொக் 03 – கடற்படை 00)
எனினும் அவர்களது முன்னிலை மிக நீண்ட நேரம் நிலைக்கவில்லை. 2 நிமிடங்களின் பின்னர் கடற்படை அணி தமக்கு கிடைத்த வாய்ப்பின் மூலம் 3 புள்ளிகளை பெற்றுக்கொண்டது. திலின ரத்நாயக்க 30 மீட்டர் தூரத்தில் இருந்து வெற்றிகரமாக உதைத்து 3 புள்ளிகளை பெற்றுக்கொடுத்தார். (ஹெவலொக் 03 – கடற்படை 03)
இரு அணிகளும் பந்தை கையாளுவதில் சிரமத்தை வெளிப்படுத்தின. மீண்டும் ஒரு முறை கடற்படை அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைக்க, இம்முறையும் திலின ரத்நாயக்க 30 மீட்டர் தூரத்தில் இருந்து உதையை வெற்றிகரமாக கம்பங்களுக்குள் செலுத்தி 3 புள்ளிகளை பெற்றுக்கொடுத்தார். 15ஆவது நிமிடத்தில் கடற்படை அணி முதன் முதலாக போட்டியில் முன்னிலை பெற்றது. (ஹெவலொக் 03 – கடற்படை 06)
5 நிமிடங்களின் பின்னர் மீண்டும் ஒரு முறை 45 மீட்டர் தூரத்தில் இருந்து பெனால்டி உதை ஒன்றை திலின ரத்நாயக்க முயற்சி செய்த பொழுதும் இம்முறை அவரால் கம்பங்களின் நடுவே உதைக்க முடியவில்லை.
இரு அணிகளும் பந்தை வெற்றிகரமாக தொடர்ந்து முன்நோக்கி நகர்த்துவதில் சிரமத்தை கண்டன. எனினும் எதிரணியின் 22 மீட்டர் எல்லையை அடைந்த ஹெவலொக் அணி, கடற்படை அணிக்கு அழுத்தத்தை கொடுத்து வந்தது.
22 மீட்டர் அபாய எல்லையினுள் கடற்படை அணி தொடர்ந்து தவறுகள் செய்தமையால் கடற்படை அணியின் தலைவர் ரொஷான் ரணசிங்க நடுவரால் மஞ்சள் அட்டை காட்டப்பட்டு மைதானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். அவ்வாறான ஒரு நிலையிலும் தமக்கு கிடைத்த வாய்ப்பினை பயன்படுத்தி புள்ளிகளை பெற ஹெவலொக் அணி தவறியது.
35ஆவது நிமிடத்தில் மீண்டும் ஒரு முறை கடற்படை அணி ட்ரை வைத்து தமது முன்னிலையை அதிகரித்தது. சாலிய ஹந்தப்பன்கொடவின் 40 மீட்டர் ஓட்டத்தின் உதவியுடன் முன் நகர்ந்த கடற்படை வீரர்கள், துலாஞ்சன விஜேசிங்க மூலம் ட்ரை வைக்க, திலின ரத்நாயக்க இலகுவாக கம்பங்களுக்குள் உதைந்தார். இதன் மூலம் கடற்படை அணி 10 புள்ளிகளால் முன்னிலை அடைந்தது.
முதல் பாதி: ஹெவலொக் 03 – 13 கடற்படை
இரண்டாம் பாதியில் இரண்டு அணிகளும் கடுமையாக மோதிக்கொண்டன. எனினும் இரண்டாம் பாதியில் முதன் முதலில் ஹெவலொக் அணியே புள்ளிகளை பெற்றுக்கொண்டது. 35 மீட்டர் பெனால்டி உதையை சிறப்பாக உதைத்த துலாஜ் பெரேரா 3 புள்ளிகளை தனது அணிக்கு பெற்றுக்கொடுத்தார். (ஹெவலொக் 06 – கடற்படை 13)
அதன் பின்னர் ஹெவலொக் அணி, கடற்படை வீரர்களுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தது. இதன் விளைவாக பிளேன்கர் நிலை வீரர் ஷெனால் டீலாக கடற்படை வீரர்களை தாண்டி சென்று ட்ரை வைத்தார். துலாஜ் பெரேரா மீண்டும் ஒரு முறை வெற்றிகரமாக உதைந்து, ஹெவலொக் அணியின் புள்ளிகளை சமப்படுத்த உதவினார். (ஹெவலொக் 13 – கடற்படை 13)
கடற்படை அணி தனக்கு கிடைத்த பெனால்டி உதையை பயன்படுத்தி மீண்டும் ஒரு முறை போட்டியில் முன்னிலை அடைந்தது. திலின ரத்நாயக்க பெனால்டியை சிறப்பாக உதைந்து 3 புள்ளிகளை பெற்றுக்கொடுத்தார். எனினும் கடற்படையின் முன்னிலை நீண்ட நேரம் நிலைக்கவில்லை. இப்போட்டியில் தனது திறமையை வெள்ளிக்கட்டிய துலாஜ் பெரேரா 55 ஆவது நிமிடத்தில் மற்றொரு பெனால்டி உதையின் மூலம் ஹெவலொக் அணிக்கு 3 புள்ளிகளை பெற்றுக்கொடுத்தார். (ஹெவலொக் 16 – கடற்படை 16)
கடற்படை அணிக்கு இரண்டு இலகுவான பெனால்டி வாய்ப்புகள் கிடைத்த பொழுதும் அதன் வீரர்கள் கோல் நோக்கி உதையாது லைன் அவுட் நோக்கி உதைந்தனர். எனினும் இரு சந்தர்ப்பங்களிலும் வெறும் கையோடே அவ்வணி திரும்பியது. சில நிமிடங்களில் போட்டியில் ஆதிக்கம் செலுத்திய ஹெவலொக் அணி மீண்டும் ஒரு பெனால்டி வாய்ப்பை பெற்றுக்கொண்டது. இப்போட்டியில் எந்த ஒரு உதையையும் தவறவிடாத துலாஜ் பெரேரா இவ்வுதையையும் வெற்றிகரமாக உதைத்து ஹெவலொக் அணிக்கு முன்னிலையை தேடிக் கொடுத்தார். (ஹெவலொக் 19 – கடற்படை 16)
அதன் பின்னர் முன்னைய இரண்டு சந்தர்ப்பங்களிலும் கோல் நோக்கி உதையாத பொழுதும் 75ஆவது நிமிடத்தில் தமக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பினை ரத்நாயக்க மூலமாக வெற்றிகரமாக உதைத்து 3 புள்ளிகளை பெற்று மீண்டும் ஒரு முறை கடற்படை அணி போட்டியை சமன் செய்தது. (ஹெவலொக் 19 – கடற்படை 19)
இருப்பினும் இறுதி 5 நிமிடத்தில் ஹெவலொக் அணி, தமது நட்சத்திர வீரர் சுதர்ஷன முததந்திரி மூலம் ட்ரை வைத்து வெற்றியை உறுதி செய்துகொண்டது. மாற்று வீரர் ராகுல் டே சில்வாவின் உதவியுடன் சுதர்ஷன வெற்றி ட்ரையை வைத்தார். துலாஜ் பெரேரா இலகுவான உதையை உதைத்தார். (ஹெவலொக் 26 – கடற்படை 19)
எஞ்சியிருந்த 2 நிமிடங்களையும் பாதுகாத்துக்கொண்ட ஹெவலொக் அணி போட்டியில் வெற்றிபெற்றது.
முழு நேரம்: ஹெவலொக் 26 – 19 கடற்படை
இந்த வெற்றியின் மூலம் இந்த பருவகால லீக்கில் இதுவரை ஒரு தோல்வியையேனும் சந்திக்காத அணியாக ஹெவலொக் அணி திகழும் அதேவேளை, இந்த தோல்வி மூலம் தமது முதலாவது தோல்வியை கடற்படை அணி சந்தித்தது.
ஹெவலொக் அணி அடுத்த வாரம் பிரபல கண்டி அணியை எதிர்கொள்ளவுள்ளது.
ThePapare .com இன் போட்டியின் சிறந்த வீரர் – ஷாரோ பெர்னாண்டோ
புள்ளிகள் பெற்றோர்
ஹெவலொக் அணி
ட்ரை – ஷெனால் டீலக, சுதர்ஷன முததந்திரி
கன்வேர்ஷன் – துலாஜ் பெரேரா
பெனால்டி – துலாஜ் பெரேரா 4கடற்படை அணி
ட்ரை – துலாஞ்சன விஜேசிங்க
கன்வேர்ஷன் – திலின ரத்நாயக்க
பெனால்டி – திலின ரத்நாயக்க 4