வியட்நாம் பகிரங்க மெய்வல்லுனரில் மலையக வீரர் சண்முகேஸ்வரனுக்கு தங்கப் பதக்கம்

579

வியட்நாம் பகிரங்க மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் இலங்கையைப் பிரிதிநிதித்துவப்படுத்தி ஆண்களுக்கான 10 ஆயிரம் மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட கே. சண்முகேஸ்வரன் தங்கப் பதக்கத்தை வென்றார்.

இதன்படி, இலங்கை சார்பாக தான் பங்குபற்றிய முதல் சர்வதேசப் போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்று மெய்வல்லுனர் அரங்கில் மிகவும் குறுகிய காலத்தில் அதிசிறந்த பெறுபேறையும் சண்முகேஸ்வரன் பெற்றுக்கொண்டார்.

வியட்நாம் மெய்வல்லுனர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட வியட்நாம் பகிரங்க மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடர்  இம்மாதம் 26ஆம், 27ஆம் திகதிகளில் வியட்நாமின் ஹோச்சிமிங் நகரில் நடைபெற்றது. இதில் இலங்கை சார்பாக 4 வீரர்கள் பங்கேற்றிருந்தனர்.

தேசிய பராலிம்பிக்கில் இலங்கை வீரரின் உலக சாதனையை அங்கீகரிக்க மறுப்பு

தேசிய பரா ஒலிம்பிக் சங்கத்தினால் 18ஆவது தடவையாகவும் ஏற்பாடு செய்யப்பட்ட…..

இதில் போட்டிகளின் இரண்டாவது நாளான இன்று (27) நடைபெற்ற ஆண்களுக்கான 10 ஆயிரம் மீற்றர் ஓட்டப் போட்டியில் கலந்துகொண்ட சண்முகேஸ்வரன், போட்டித் தூரத்தை 31 நிமிடங்களும் 01.25 செக்கன்களில் நிறைவு செய்து முதலிடத்தைப் பெற்றுக்கொண்டார். இது அவரது இவ்வருடத்துக்கான அதிசிறந்த நேரப் பதிவாகும்.

ஹட்டன்வெலி ஓயாவைப் பிறப்பிடமாகக் கொண்ட 26 வயதுடைய கே. சண்முகேஸ்வரன், கடந்த 3 வருடங்களாக அரை மரதன் மற்றும் 10 ஆயிரம் மீற்றர் உள்ளிட்ட நீண்ட தூர போட்டிகளில் பங்குபற்றி தேசிய மட்டத்தில் பல வெற்றிகளைப் பதிவுசெய்திருந்தார்.

அதிலும் குறிப்பாக, கடந்த 4 வருடங்களாக இலங்கை பிரபல மெய்வல்லுனர் பயிற்றுவிப்பாளரான சஜித் ஜயலாலிடம் பயிற்சிகளைப் பெற்று வருகின்ற சண்முகேஸ்வரன், இவ்வருட முற்பகுதியில் நடைபெற்ற இராணுவ தொண்டர் படையணி மெய்வல்லுனர் மற்றும் முப்படையினருக்கான மெய்வல்லுனர் போட்டித் தொடர்களில் ஆண்களுக்கான மரதன் ஓட்டப் போட்டிகளில் பங்குபற்றி தங்கப் பதக்கங்களை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், இந்தோனேஷியாவின் பாலம்பேங் நகரில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டு விழாவுக்கு இலங்கை மெய்வல்லுனர் வீரர்களைத் தெரிவுசெய்வதற்கான தகுதிகாண் போட்டிகளின் இரண்டாவதும், இறுதியுமான கட்டம் கடந்த மே மாதம் கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெற்றது.

இதில் ஆண்களுக்கான 10 ஆயிரம் மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட சண்முகேஸ்வரன், குறித்த போட்டியை 31 நிமிடங்களும் 16.84 செக்கன்களில் நிறைவு செய்து முதலிடத்தைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

தேசிய பரா மெய்வல்லுனர் போட்டிகள் ஜுலை 20இல் ஆரம்பம்

இந்த நிலையில், நேற்று (26) நடைபெற்ற ஆண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட ருசிரு சத்துரங்க வெள்ளிப் பதக்கத்தை வென்றார். குறித்த போட்டியை அவர் ஒரு நிமிடமும் 52.00 செக்கன்களில் நிறைவு செய்தார்.

அத்துடன், இன்று நடைபெற்ற ஆண்களுக்கான 1500 மீற்றர் ஓட்டப் போட்டியிலும் பங்குகொண்ட ருசிரு சத்துரங்க, போட்டியை 3 நிமிடங்களும், 55.66 செக்கன்களில் நிறைவுசெய்து வெண்கலப் பதக்கத்தை வென்று இப்போட்டித் தொடரில் தனது இரண்டாவது பதக்கத்தையும் பெற்றுக்கொண்டார்.

இதேவேளை, உயரம் பாய்தல் போட்டிகளில் தங்கப் பதக்கத்தினை வெல்வார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அமித கசுன், துரதிர்ஷ்டவசமாக காலில் ஏற்பட்ட உபாதை காரணமாக போட்டித் தொடரிலிருந்து விலகிக் கொண்டார்.