ரத்து செய்யப்பட்டுள்ள சந்திக்க ஹத்துருசிங்கவின் இங்கிலாந்து பயணம்

1032

மேற்கிந்திய தீவுகளுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த இலங்கை குழாமின் அங்கத்துவர்களில் ஒருவரான இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் சந்திக்க ஹத்துருசிங்க இங்கிலாந்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் உலகக் கிண்ணத்திற்கு இலங்கை அணியை ஆயத்தம் செய்வதற்கான வசதிகளை ஆராய இங்கிலாந்து செல்ல திட்டமிட்டிருந்தார்.

இதனால் ஹத்துருசிங்க, மேற்கிந்திய தீவுகளின் சுற்றுப் பயணத்தை முடித்த இலங்கை குழாமுடன் தாயகம் திரும்பாமல் இங்கிலாந்து வீசாவை எதிர்பார்த்த வண்ணம் கரீபியன் தீவுகளிலியே தங்கியிருந்தார். எனினும், குறிப்பிட்ட காலத்திற்குள் எதிர்பார்த்த விடயங்கள் எதுவும் நடைபெறாத நிலையில் ஹத்துருசிங்க தனது இங்கிலாந்து பயணத்தை ரத்து செய்து தாயகம் திரும்புகின்றார்.

இலங்கை கிரிக்கெட் தேர்தலை ஆறு மாதத்திற்குள் நடத்தவும் – ஐ.சி.சி உத்தரவு

இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தலை எதிர்வரும் ஆறு…

இங்கிலாந்தில் நடைபெறவுள்ள கிரிக்கெட் உலகக் கிண்ணத்திற்கு தயராக இலங்கை அணி, உலகக் கிண்ணம் ஆரம்பமாக மூன்று வாரங்கள் முன்னரே அங்கு சென்று பயிற்சிகளில் ஈடுபடவுள்ளது. உலகக் கிண்ண கனவுகளோடு காணப்படும் இலங்கை அணி இந்த பயிற்சிகளின் ஒரு கட்டமாக ஸ்கொட்லாந்துடன் மூன்று பயிற்சிப் போட்டிகளிலும் விளையாடவுள்ளது. இப்படியாக குறிப்பிட்ட காலத்திற்கு முன்னரே இங்கிலாந்துக்குச் சென்று பயிற்சிகளில் ஈடுபடுவது இலங்கை அணிக்கு அந்நாட்டின் நிலைமைகளை உள்வாங்கிக் கொள்ள உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலகக் கிண்ணத்தில் இலங்கையின் பெரும்பாலான போட்டிகள் வட இங்கிலாந்திலேயே நடைபெறவிருப்பதனால், அங்கு உலகக் கிண்ண போட்டிகள் ஆரம்பமாக மூன்று வாரங்களுக்கு முன்னர் எந்த உள்ளூர் கிரிக்கெட் அணிகளினதும் பயிற்சி நிலையங்களை உபயோகிக்கும் வசதிகள் இலங்கை அணிக்கு கிடைக்கப் போவதில்லை. எனினும், இங்கிலாந்தில் உள்ள மூன்று தனியார் பாடசாலைகள் இலங்கை அணி பயிற்சிகளை மேற்கொள்வதற்கான வசதிகளை ஏற்படுத்தி தருவதற்கு ஆர்வம் காட்டியிருந்தன.  ஹத்துருசிங்கவின் இங்கிலாந்து பயணம் குறிப்பிட்ட இந்த மூன்று பாடசாலைகளையும் சென்று பார்ப்பதற்காகவே திட்டமிடப்பட்டிருந்தது.

“(உலக கிண்ணத்திற்காக) நாம் செய்யவுள்ள முதலீடு மிகப்பெரியது. தலைமை பயிற்றுவிப்பாளர் (ஹத்துருசிங்க) எமது முதலீட்டுக்கு குறித்த இடங்கள் பெறுமதியானவையா? என்பதை பார்க்க விரும்பியிருந்தார். அங்கிருக்கும் வசதிகள் அவரது விருப்பத்திற்கு அமைவாக இல்லாது இருந்தால் அதற்கு மாற்றுத் தீர்வாக (பொருத்தமான வசதிகள் கொண்ட) வேறு இடமொன்றை பார்ப்பதனையும் அவர் திட்டமாக வைத்திருந்தார். (இலங்கை) அணியை ஸ்பெயினுக்கு அழைத்துச் செல்வது அவர் வைத்திருந்த மாற்று திட்டங்களில் ஒன்று “ என இலங்கையின் கிரிக்கெட் சபையின் அதிகாரிகளில் ஒருவர் கிரிக்பஸ் (cricbuzz) செய்தி சேவைக்கு கூறியிருந்தார்.

ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டதன் அடிப்படையில், சந்திக்க ஹத்துருசிங்க கரீபியன் தீவுகளிலிருந்து பயணமாகி இங்கிலாந்து பயணத்தின் பின்னர் ஜூலை 5 ஆம் திகதி நாடு திரும்ப எதிர்பார்க்கப்பட்டிருந்தது. இலங்கையில் நடைபெறவிருக்கும் தென்னாபிரிக்க அணியுடனான டெஸ்ட் தொடருக்கு இலங்கை அணியை ஜூலை 6 ஆம் திகதியிலிருந்து தயார்படுத்துவது இதன் நோக்கமாகும். தற்போது ஹத்துருசிங்க கரீபியன் தீவுகளிலிருந்து நேரடியாகவே தாயகம் திரும்ப இருப்பதனால் இலங்கையின் பயிற்சிகளுக்கான இடங்களை ஆராயும் அவரது இங்கிலாந்து பயணம் பிரிதொரு நாளுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட இலங்கை அணி பலவிதமான சவால்களுக்கு முகம் கொடுத்திருந்தது. இத்தொடரில் இலங்கை அணியின் தலைவர் தினேஷ் சந்திமாலுக்கு பந்து சேதப்படுத்தல் குற்றச்சாட்டில் இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான பார்படோஸ் டெஸ்ட் போட்டியில் விளையாட முடியாது போயிருந்தது.

கிரிக்கெட் விளையாட்டின் ஒழுக்கம் தொடர்பான செயலி ஒன்றினை வெளியிட்டுள்ள ஐ.சி.சி

சர்வதேச கிரிக்கெட் பேரவையானது (ஐ.சி.சி.)..

இதேவேளை, குறித்த தொடரில் போட்டியை தாமதமாக ஆரம்பித்த காரணத்திற்காக ஐ.சி.சி. இன் மூன்றாம் நிலை விதி மீறல் குற்றத்தினை மேற்கொண்டவராகவும் தினேஷ் சந்திமால் இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர் சந்திக்க ஹத்துருசிங்க மற்றும் அணி முகாமையாளர் அசங்க குருசிங்க ஆகியோருடன் சேர்த்து குற்றம் பிடிக்கப்பட்டிருந்தார்.

போட்டியை தாமதித்த குற்றச்சாட்டை மூவரும் ஒப்புக்கொண்டிருப்பதால் இவர்களுக்கு ஐ.சி.சி. கடுமையான தண்டனையை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதனால் சந்திமால், குருசிங்க, ஹத்துருசிங்க ஆகியோருக்கு தென்னாபிரிக்க அணியுடனான தொடரில் பங்கேற்கும் சந்தர்ப்பத்தை முழுமையாக இழக்கும் வாய்ப்பு இருக்கின்றது. அதாவது, சந்திமாலுக்கு தொடரின் போட்டிகளில் விளையாட முடியாமல் இருக்கின்ற அதே தருணத்தில் இலங்கை அணியின் தலைமை பயிற்றுவிப்பாளருக்கும், முகாமையாளருக்கும் தென்னாபிரிக்க அணியுடனான போட்டிகள் நடைபெறும் நாட்களில் மைதானத்திற்குள் செல்ல முடியாதவாறு தடை உத்தரவு இருக்கும்.

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான இருதரப்பு தொடர் ஜூலை 12 ஆம் திகதி காலியில் தொடங்கும் டெஸ்ட் போட்டியுடன் ஆரம்பிக்கின்றது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<