இலங்கை அணியின் எதிர்காலதிற்கான ஹத்துருசிங்கவின் திட்டம்

1080

இலங்கை அணிக்கு மீண்டும் சேவையாற்ற கிடைத்தமையை எனக்கு கிடைத்த மிகப் பெரிய கௌரவமாகவும், மிகப் பெரிய சந்தர்ப்பமாகவும் கருதுவதாகத் தெரிவித்த இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய பயிற்றுவிப்பாளரான சந்திக ஹத்துருசிங்க, கடந்த காலங்களை மறந்துவிட்டு பின்னடைவை சந்தித்து வருகின்ற இலங்கை அணியை வெற்றிப் பாதையில் கொண்டு செல்வதற்கு 100 சதவீதம் பங்களிப்பு வழங்குவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இலங்கை அணியின் முன்னாள் டெஸ்ட் வீரரான சந்திக ஹத்துருசிங்க இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய தலைமைப் பயிற்றுவிப்பாளராக இன்று (20) முற்பகல் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

ஹத்துருசிங்க விலகியதை அடுத்து பங்களாதேஷ் அணிக்கு புதிய தலைவர்

கிரிக்கெட் அரங்கில் அண்மைக்காலமாக பல முன்னணி அணிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்து…

இந்நிலையில், அவர் தனது பொறுப்புக்களை கடமையேற்ற பிறகு இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் இன்று இடம்பெற்ற விஷேட செய்தியாளர் மாநாட்டிலும் கலந்துகொண்டார்.   

இதன்போது விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர மற்றும் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் திலங்க சுமதிபால உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.  

அவர் அங்கு தனது புதிய பதவி குறித்து கருத்து வெளியிடுகையில்,

”எனக்கு இந்த சந்தர்ப்பத்தை வழங்கிய இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துக்கு முதலில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு கிடைத்த மிகப் பெரிய கௌரவமாகவும், பின்னடைவை சந்தித்து வருகின்ற இலங்கை அணிக்கு மீண்டும் சேவையாற்றுவதற்கு கிடைத்த அரிய வாய்ப்பாகவும் நான் இதை கருதுகிறேன்.  

மேலும், இலங்கை அணியை பயிற்றுவிப்பதற்கு பொருத்தமான காலத்தில்தான் எனக்கு இப்பதவி கிடைத்துள்ளது. எனவே, என்னுடைய நாட்டுக்கு பயிற்சியளிப்பதற்கு கிடைத்தமை மிகவும் மகிழ்ச்சியளிக்கின்றது. இந்தப் பதவி எனக்கு அழுத்தங்களைக் கொடுக்காவிட்டாலும், மிகப் பெரிய சந்தர்ப்பமாகக் கருதி தொடர் தோல்விகள், பின்னடைவுகளை சந்தித்து வருகின்ற இலங்கை அணியை வெற்றிப் பாதையில் கொண்டு செல்வதற்கு 100 சதவீதம் பங்களிப்பு வழங்குவதற்கு எதிர்பார்த்துள்ளேன்.

Photo Album : Chandika Hathurusingha takes over as SLC Head Coach 

தற்போதுள்ள இலங்கை அணியை வெளிநபராக பார்த்துக்கொண்டிருந்த எனக்கு இது நல்ல வாய்ப்பாகவும் அமையவுள்ளது. இந்த சவாலை ஏற்றுக்கொண்டு இலங்கை அணியை முன்னெடுத்துச் செல்ல நான் தயாராகவுள்ளேன்.

எனவே இதற்காக ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என அவர் தனது ஆரம்ப உரையில் தெரிவித்தார்.

இதன்போது, இலங்கை அணிக்கு நிரந்தரத் தலைவர் ஒருவரை நியமிப்பது குறித்து ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு ஹத்துருசிங்க பதிலளிக்கையில், ”3 வகை கிரிக்கெட் போட்டிகளிலும் திறமைகளை வெளிப்படுத்துகின்ற வீரர்களுக்குத்தான் தலைமைப் பதவி வழங்கப்பட வேண்டும். எனவே, அனைத்துவகை போட்டிகளுக்கும் ஒரு தலைவரை நியமிக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய நிலைப்பாடாகும்.

சுதந்திர கிண்ண முத்தரப்பு T-20 தொடருக்கான முதல் அழைப்பு இந்தியாவிடம் கையளிப்பு

இலங்கையின் 70ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் முகமாக இலங்கை கிரிக்கெட் சபையினால்…

எனினும் இந்த தருணத்தில் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வெவ்வேறு தலைவர்களை நியமித்துள்ளதால், அதுதொடர்பில் விரைவில் எந்தவொரு தீர்மானத்தையும் மேற்கொள்ள முடியாது. அத்துடன், அணியில் உள்ள வீரர்களுடன் பணியாற்றிய பிறகுதான் அனைத்து வகைப் போட்டிகளுக்கும் ஒரு தலைவரா அல்லது மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகளுக்கு பிறிதொரு தலைவரை நியமிப்பதா என்பது தொடர்பில் தீர்மானிக்க முடியும். இன்று எனது முதலாவது நாள். எனவே தெரிவுக் குழுவினருடன் உட்கார்ந்து பேச்சுவார்த்தை நடத்திய பிறகுதான் அணித்தலைமை தொடர்பில் தீர்மானம் எடுக்கவுள்ளோம்” என்றார்.

குறித்த சந்திப்பில் கேட்கப்பட்ட ஊடகவியலாளர்கள் சிலரின் கேள்விகளும் ஹதுருசங்கவின் பதில்களும்  

கேள்வி இலங்கை அணியின் அண்மைக்கால பின்னடைவுக்கும், வீரர்கள் வெளிப்படுத்துகின்ற திறமைகள் தொடர்பிலும் உங்களுடைய நிலைப்பாடு என்ன?

புதில்தற்போதுள்ள இலங்கை அணிக்கு இன்னும் திறமைகளை வெளிப்படுத்த முடியும் என நான் நம்புகிறேன். சரியான திட்டங்களுடன் ஒவ்வொரு போட்டித் தொடர்களுக்கும் முகங்கொடுத்தால் நிச்சயம் எமக்கு இன்னும் முன்னோக்கிச் செல்ல முடியும். எனினும், தற்போதுள்ள அணிக்கு இன்னும் 2 படிகள் முன்னோக்கிச் செல்ல முடியும் என நான் நம்புகிறேன்.

கேள்வி இலங்கை அணியின் பின்னடைவுக்கு என்ன காரணம்? இலங்கை அணியிடம் காணப்படுகின்ற குறைபாடுகள் என்ன?

புதில் அதற்கு தற்போது பதிலளிப்பது கடினம். நான் இலங்கை அணியுடன் இன்னும் கடமையாற்றவில்லை. எனவே பயிற்சிகளை ஆரம்பித்த பிறகு இதற்கான காரணங்களை கண்டறிய முடியும். நாங்கள் கதைத்துக் கொண்டது போல அணியில் உள்ள நிலையான வீரர்களை பொருத்தமான முறையில் இனங்கண்டு ஒவ்வொரு போட்டிகளுக்கும் சரியான இணைப்பை மேற்கொள்வதற்கு எதிர்பார்த்துள்ளோம்.  

அத்துடன், அந்தந்த போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்துகின்ற வீரர்களுக்கு அணியில் ஒருசில காலம் தொடர்ந்து வாய்ப்பினை வழங்குவதற்கும், அதன்மூலம் அவர்களின் திறமையை வெளிக்கொண்டு வருவதற்கும் எதிர்பார்த்துள்ளோம். இவையனைத்தையும் எனக்கு ஒரு நாளில் செய்ய முடியாது. எனவே எனது வேலைகளை ஆரம்பித்த பிறகு அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிப்பேன்.  

ஒரு நாள் போட்டித் தரப்படுத்தலில் இலங்கை வீரர்கள் முன்னேற்றம்

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கெதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடர் நிறைவுக்கு வந்துள்ள நிலையில்..

கேள்வி இலங்கை அணியை சரிவிலிருந்து மீட்டெடுக்க எவ்வளவு காலம் தேவைப்படும் என நீங்கள் கருதுகிறீர்கள்?

புதில் இலங்கை அணியை மீட்டெடுப்பதற்கு சில காலம் செல்லும். ஆனால் எப்போது என்று உறுதியாகக் கூற முடியாது. அது மாத்திரமின்றி என்னுடைய பயிற்சிகளையும், அறிவுரைகளையும் பெற்றுக்கொண்டு விளையாடுவதற்கும் வீரர்களுக்கு சில காலம் தேவைப்படும். எனவே சிலகாலம் பொறுமையாக இருப்போம். அடுத்தடுத்த தொடர்களில் எங்களுக்கு இன்னும் பல சவால்களை சந்திக்க நேரிடும். ஏன், அடுத்த கிரிக்கெட் சுற்றுப்பயணத்தின் போது இது வெற்றியளிக்கவும் முடியும்.

கேள்வி பங்களாதேஷ் அணி நல்ல நிலையில் இருக்கும்போது அந்த அணியுடனான ஒப்பந்தம் நிறைவடைய முன்னர் நீங்கள் பதவியை இராஜினாமாச் செய்தீர்கள். அந்த நிலைமைக்கு நீங்கள் எவ்வாறு முகங்கொடுத்தீர்கள்?

பதில் கிரிக்கெட் விளையாடுகின்ற அனைத்து நாடுகளினாலும் பயிற்சியாளர்களுக்கு வழங்கப்படுகின்ற ஒப்பந்தத்தில் எப்போது வேண்டுமானாலும் விலகிச் செல்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்த நடைமுறைப்படித்தான் 3 மாதங்களுக்கு முன் கடிதம் மூலம் அறிவித்து நான் பதவி விலகினேன். எனினும், நான் பதவி விலகுவதை அவர்கள் விரும்பவில்லை. ஆனால் அது எனது தனிப்பட்ட முடிவாகும்.

ThePapare விளையாட்டுக் கண்ணோட்டம் பாகம் – 07

இலங்கையை வீழ்த்திய இந்தியாவின் 8ஆவது ஒரு நாள் தொடர் வெற்றி, கிரிக்கெட் வரலாற்றில் புரட்சியினை…

கேள்வி இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளராக பதவியேற்றதன் பிறகு உங்களுடைய முதல் சுற்றுப் பயணம் பங்களாதேஷ் அணியுடன் நடைபெறவுள்ளது. இந்த சவாலுக்கு நீங்கள் எவ்வாறு முகங்கொடுக்கப் போகின்றீர்கள்?

புதில் அது மிகப் பெரிய சவாலாகும். அவர்களுடைய திறமைகளை நான் நன்கு அறிவது போல என்னுடைய நுணுக்கங்களையும் அவர்கள் நன்கு அறிவார்கள். எனக்கு கிடைத்த மிகப் பெரிய சந்தர்ப்பமாக இதை நான் கருதுகிறேன். தொழில்சார் பயிற்சியாளராக எவருக்கும் இந்த மாதிரியான சந்தர்ப்பங்கள் சவாலைக் கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.

கேள்வி இதற்கு முன்னதாக இலங்கை கிரிக்கெட் அணியின் உதவிப் பயிற்றுவிப்பாளராக நீங்கள் கடமையாற்றியிருந்தீர்கள். அதன்பிறகு நிறுவனத்துடன் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாகத்தான் நீங்கள் பயிற்சியாளர் பதவியிலிருந்து இராஜினாமா செய்ததாகவும் நீங்கள் பல தடவைகள் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தீர்கள். எனவே, உங்களுடைய முரண்பாடுகளுக்கான தீர்வு கிடைத்ததன் பின்னரா நீங்கள் மீண்டும் இப்பதவியை ஏற்றுக்கொண்டீர்கள்?  

புதில் கடந்தகால கசப்பான அனுபவங்கள் மற்றும் முரண்பாடுகளை எப்போதும் வாழ்க்கையில் வைத்திருந்தால் ஒரு நாளும் முன்னேற முடியாது. எனவே, அவ்வாறான விடயங்களை நான் அப்போதே மறந்துவிடுவேன். எனக்கு கிடைத்த சந்தர்ப்பத்தையும், நாட்டுக்கு கிடைக்க வேண்டிய சந்தர்ப்பத்தையும் பயன்படுத்தி அணியின் வெற்றிக்காக கடமையாற்றுவேன்.

கேள்வி உங்களுடன் பங்களாதேஷ் பயிற்றுவிப்பு குழாமில் ருவன் கல்பகே உள்ளிட்ட இலங்கை அணியின் முக்கிய முன்னாள் வீரர்கள் கடமையாற்றியிருந்தார்கள். எனவே, எதிர்வரும் காலங்களில் திலான் சமரவீரவைப் போல அவர்களும் இலங்கை அணியுடன் இணைந்துகொள்வார்களா?

பதில் தற்போது அவ்வாறான எந்தவொரு அபிப்ராயமும் இல்லை. எதிர்வரும் காலத்தில் அணிக்கு அவர்களது சேவை தேவைப்பட்டால் கவனம் செலுத்துவோம். தற்போது இலங்கை மற்றும் இலங்கை அணியுடன் ரொமேஷ் ரத்னாயக்க, திலான் சமரவீர, அவிஷ்க குணவர்தன, ஹஷான் திலகரத்ன மற்றும் சமிந்த வாஸ் ஆகிய வீரர்கள் பயிற்சியாளர்களாகக் கடமையாற்றி வருகின்றனர். எனவே எதிர்வரும் காலங்களில் அணியின் வளர்ச்சிக்காக அவர்களது சேவைகளைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.

T-10 கிரிக்கெட் தொடரில் வெற்றிகளை பறிகொடுத்த இலங்கை வீரர்கள்

கிரிக்கெட் வரலாற்றில் புரட்சியினை ஏற்படுத்தும் விதமாக முதற்தடவையாக நடைபெறும்…

கேள்விஇலங்கை அணிக்கு நீங்கள் வழங்கவுள்ள திட்டங்களுக்கும், பங்களாதேஷ் அணிக்காக வழங்கிய திட்டங்களுக்கும் எவ்வாறான வேறுபாடுகள் உள்ளன.

புதில் இங்குள்ள திட்டங்களை இன்னும் நான் பரிசீலித்துப் பார்க்கவில்லை. இதற்கு முன் நியூ சவுத் வேல்ஸ் மற்றும் பங்களாதேஷில் நடைமுறைப்படுத்திய திட்டங்களை முன்னெடுத்துச் செல்ல எதிர்பார்த்துள்ளேன். அது எனக்கு எல்லா இடங்களிலும் வெற்றியைக் கொடுத்துள்ளது. எனவே, அந்த திட்டங்களை நடைமுறைப்படுத்தவே எதிர்பார்த்துள்ளேன்.   

கேள்வி இலங்கையின் அண்மைக்கால பின்னடைவுக்கு உள்ளுர் போட்டிகளில் காணப்படுகின்ற குறைபாடுகள்தான் காரணம் என பலர் குற்றம் சுமத்தி வருகின்றனர். எனவே, இலங்கையில் உள்ளுர் போட்டிகளில் 24 அணிகள் பங்குபற்றுவது தொடர்பில் உங்களுடைய நிலைப்பாடு என்ன?  

புதில் திறமையான வீரர்களை இனங்காண்பதற்கு குறைந்தளவு அணிகளுடன் விளையாடுவது மிகவும் சிறந்தது. உதாரணமாக 12 அல்லது 10 அணிகள் விளையாடினால் தெரிவுக்கு குழுவினருக்கும், பயிற்சியாளருக்கும் திறமையான வீரர்களை இலகுவாக இனங்காண முடியும்.