தற்பொழுது இடம்பெற்று வரும் சுதந்திரக் கிண்ண முத்தரப்பு T-20 கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டிக்கு அணியை தெரிவுசெய்யும் தீர்மானமிக்க போட்டி இன்று(16) இரவு கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் இலங்கை – பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் நடைபெறவுள்ளது.
[rev_slider LOLC]
சுதந்திரக் கிண்ண இறுதிப்போட்டிக்கு ஏற்கனவே இந்திய அணி தகுதிபெற்றுள்ள நிலையில், இன்று நடைபெறும் போட்டியில் வெற்றிபெறும் அணி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இடம்பெறும் இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும்.
இந்தியாவின் வெற்றியோடு அரையிறுதியாக மாறியிருக்கும் இலங்கை – பங்களாதேஷ் மோதல்
ரோஹித் ஷர்மாவின் அபார துடுப்பாட்டத்தின் உதவியோடு..
இந்நிலையில், நேற்றைய தினம் இரு அணிகளும் ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் விசேட பயிற்சிகளில் ஈடுபட்டதுடன், இரு அணி வீரர்களும் அதிகளவு நேரத்தை உடற்பயிற்சிகளுக்காக ஒதுக்கியிருந்தமையை காணமுடிந்தது.
இதேநேரம், இலங்கை ரசிகர்களுக்கு முன்னிலையில் நடைபெறவுள்ள தீர்மானமிக்க இப்போட்டியில் இலங்கை அணி எவ்வாறு அழுத்தங்களுக்கு முகங்கொடுக்கும் என இலங்கை அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் சந்திக்க ஹத்துருசிங்கவிடம் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் பதிலளிக்கையில்,
”எமக்கு எந்தவொரு அழுத்தமும் கிடையாது. முதல் போட்டியில் விளையாடியது போல இப்போட்டியிலும் விளையாடுவதற்கு எதிர்பார்த்துள்ளோம். அதிலும் அரையிறுதிப் போட்டியோ அல்லது இறுதிப் போட்டியோ இங்கு முக்கியமல்ல. நாங்கள் இப்போட்டியை வெற்றிகொண்டு இறுதிப் போட்டியில் விளையாடுவதற்கான சிறந்த மனநிலையுடன் இருக்கின்றோம்” என்றார்.
இதேநேரம், அணியில் மாற்றங்களை முன்னெடுப்பது தொடர்பில் ஹத்துருசிங்க கருத்து தெரிவிக்கையில், ”ஆடுகளத்தைப் பொறுத்துதான் நாம் இறுதி பதினொருவரை தெரிவு செய்யவுள்ளோம். தற்போதுள்ள ஆடுகளத்தில் துடுப்பாட்ட வீரர்களுக்கு சிறப்பாக விளையாட முடியும். அதேபோல பந்துவீச்சாளர்களையும் ஆடுகளத்தைப் பொறுத்துதான் பயன்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளோம். அதிலும் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான ஆடுகளமாக இருப்பதால் அவர்களுக்கு விக்கெட்டுக்களைக் கைப்பற்றுவதற்கான வாய்ப்பும் காணப்படுகின்றது. கடந்த காலங்களில் நாம் அதிகளவு ஓட்டங்களையும், அதிக விக்கெட்டுக்களையும் கைப்பற்றவில்லை. அத்துடன், எம்மால் வெற்றிகளையும் பெற்றுக்கொள்ள முடியாது போனது. ஆனால் இந்த ஆடுகளத்தில் அனைத்தும் தலைகீழாக மாறியுள்ளது” எனத் தெரிவித்தார்.
சுதந்திரக் கிண்ணத்திற்கான பங்களாதேஷ் அணியில் இணையும் சகீப்
பங்களாதேஷ் டெஸ்ட் மற்றும் T20 அணிகளின் தலைவரான…
மேலும், இப்போட்டியில் நாணய சுழற்சியானது வெற்றியை தீர்மானிப்பதில் எந்தவொரு தாக்கத்தையும் செலுத்தாது எனத் தெரிவித்த ஹத்துருசிங்க, நாணய சுழற்சியில் வெற்றி பெற்றாலோ அல்லது தோல்வியடைந்தாலோ போட்டியில் சிறப்பாக விளையாடிய அணிக்கு வெற்றி நிச்சயம். ஏன் இந்திய மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணிக்கு தோல்வியை சந்திக்க நேரிட்டது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதேநேரம், அண்மையில் நிறைவுக்கு வந்த உள்ளூர் T-20 போட்டியில் வழமையான போர்முக்கு திரும்பி அதிக விக்கெட்டுக்களை வீழ்த்திய வீரராக மாறிய லசித் மாலிங்கவை இப்போட்டித் தொடரில் இணைத்துகொள்ளாமை தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு ஹத்துருசிங்க பதிலளிக்கையில்,
”உலகின் சிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவராக மாலிங்க விளங்குகின்றார். ஆனால் துரதிஷ்டவசமாக அவர் இந்த அணியில் இடம்பெறவில்லை. கிரிக்கெட் போட்டித் தொடர் ஒன்றில் அணியொன்றுக்கு வீரர்கள் பெயரிடப்பட்ட பிறகு இன்னுமொரு வீரரை அணிக்குள் கொண்டுவர முடியாது. அவ்வாறு கொண்டுவர வேண்டுமாயின் அணியில் உள்ள இன்னுமொரு வீரர் உபாதைக்குள்ளாக வேண்டும்” என தெரிவித்தார்.
இதேவேளை, இன்றைய போட்டியில் வெற்றிபெறுவதற்கு இரு அணிகளும் பல யுத்திகளை கையாளும் என தெரிவிக்கப்படுகிறது. இதன் ஒரு அங்கமாக பங்களாதேஷ் அணியின் அனுபவமிக்க வீரர் சகிப் அல் ஹசன் அணிக்குள் அழைக்கப்பட்டுள்ளார். அத்துடன், கடந்த இரு போட்டிகளிலும் அரைச்சதம் கடந்து அவ்வணிக்கு நம்பிக்கை கொடுத்து வருகின்ற முஷ்பிகுர் ரஹீமும் இன்றைய போட்டியில் அதிரடியாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதனால் பங்களாதேஷ் அணி மேலும் பலம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இங்கிலாந்து அணி
இங்கிலாந்து கிரிக்கெட் அணியானது இந்த ஆண்டு..
இந்நிலையில் பங்களாதேஷ் அணியில் மீண்டும் சகிப் அல் ஹசன் இணைத்துக்கொள்ளப்பட்டமை தொடர்பில் ஹத்துருசிங்க கருத்து வெளியிடுகையில், ”இந்த தொடரில் சகிப் விளையாடுவார் என நாம் ஆரம்பத்திலிருந்தே எதிர்பார்த்து இருந்தோம். ஆனால் அணிக்கு தேவையான நேரத்தில் அவரை இணைத்துக்கொள்ள முடிந்தமை பங்களாதேஷ் அணிக்கு மிகப் பெரிய நம்பிக்கை கொடுக்கும். பந்துவீச்சைப் போல துடுப்பாட்டத்திலும் பிரகாசிக்கின்ற திறமை அவருக்கு உண்டு. எனவே அவர் பூரண உடற்தகுதியுடன் இருந்தால் இன்றைய போட்டியில் நிச்சயம் விளையாடுவார். அதற்கு முகங்கொடுக்கவும் நாங்கள் தயார்” என அவர் தெரிவித்தார்.
இலங்கை அணியை பொருத்தவரையில் உபாதைக்குள்ளாகியிருந்த குசல் மெண்டிஸ் முழுமையாக குணமடைந்துள்ளார். அத்துடன் இலங்கை அணியும் தங்களது வியூகங்களை சிறப்பாக அமைத்து வருகின்றது.
முன்னதாக இரு அணிகளுக்கும் இடையில் நடைபெற்ற முதல் லீக் போட்டியில் இலங்கை அணி 214 ஓட்டங்களை குவித்தும், அதனை துரத்தி அடித்து பங்களாதேஷ் அணி சாதனை வெற்றியொன்றை பதிவுசெய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதன்படி, பங்களாதேஷ் அணிக்கெதிரான இன்றைய போட்டியில் இலங்கை அணி பந்து வீச்சு பக்கம் கவனம் செலுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அமில அபோன்சோ மற்றும் இசுரு உதான ஆகியோர் அணியில் இணைவதற்கு அதிக வாய்ப்பு இருந்தாலும், நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இலங்கை அணியில் எந்தவொரு மாற்றத்தையும் மேற்கொள்ளப்போவதில்லை என சந்திக்க ஹத்துருசிங்க தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.