உலகக் கிண்ண இலங்கை அணியில் மாலிங்கவுக்கு இடமுண்டு – ஹத்துருசிங்க

3199

கிரிக்கெட் ஒழுக்க விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் போட்டித் தடைக்குள்ளாகியுள்ள ஆரம்ப துடுப்பாட்ட வீரர் தனுஷ்க குணதிலக்க மற்றும் சுழல் பந்துவீச்சாளர் ஜெப்ரி வெண்டர்சே ஆகியோர் மிக விரைவில் இலங்கை அணியில் இடம்பெறுவார்கள் என நம்பிக்கை வெளியிட்ட இலங்கை அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் சந்திக்க ஹத்துருசிங்க, உள்ளுர் போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்தினால் நிச்சயம் லசித் மாலிங்கவுக்கும் உலகக் கிண்ண இலங்கை அணியில் விளையாடுவதற்கான வாய்ப்பு கிடைக்கும் என தெரிவித்தார்.

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான ஐந்தாவதும், இறுதியுமான ஒரு நாள் போட்டிக்கான இறுதிக்கட்ட பயிற்சிகளின் பின்னர் கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் நேற்று முன்தினம் (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கருத்து வெளியிடுகையில்,

தென்னாபிரிக்காவுடனான T-20 போட்டிக்கான இலங்கை குழாம் அறிவிப்பு

”கிரிக்கெட் ஒழுக்க விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் போட்டித் தடைக்குள்ளாகியுள்ள ஆரம்ப துடுப்பாட்ட வீரர் தனுஷ்க குணதிலக்க மற்றும் சுழல் பந்துவீச்சாளர் ஜெப்ரி வெண்டர்சே ஆகிய இருவரும் மீண்டும் இலங்கை அணியில் இடம்பெறுவார்கள். இவ்வாறான விடயங்கள் இடம்பெற்றமை குறித்து நான் ஏமாற்றமடைந்துள்ளேன். ஆனாலும், கடந்த காலங்களிலும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றிருந்தன. எங்கள் கலச்சாரம் வித்தியாசமானது. எங்களால் இது போன்ற மோசமான சம்பவங்களை சகித்துக் கொள்ள முடியாது. உண்மையில் இந்த சம்பவங்களினால் தனிப்பட்ட ஒருவருக்கு மாத்திரம் பாதிப்பு ஏற்படுவதில்லை. மாறாக முழு அணிக்கும், குறிப்பாக அந்த வீரர்களது குடும்பங்களிற்கும் தான் அவமானத்தையும் ஏற்படுத்திக் கொடுக்கின்றன.

எனினும், மனிதர்கள் என்ற அடிப்படையில் தவறிழைப்பது வழமை. ஆனால் அவர்களுக்கு திருந்துவதற்கு மற்றுமொரு வாய்ப்பை வழங்க வேண்டும். அவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபடவில்லை. மாறாக, அவர்கள் கிரிக்கெட் விதிமுறைகளை மீறி செயற்பட்டதனாலேயே இவ்வாறு போட்டித் தடைகளுக்கு உள்ளாகியிருப்பதாக” அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, இலங்கை அணியில் லசித் மாலிங்க தொடர்ந்து புறக்கணிப்பட்டு வருவது தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு ஹத்துருசிங்க பதிலளிக்கையில்,

”2019 உலகக் கிண்ணத்திற்கான எமது திட்டத்தில் மாலிங்கவும் உள்ளார். அதற்கு அவர் உள்ளுர் போட்டிகளில் விளையாடி தனது திறமையை மீண்டும் நிரூபிக்க வேண்டும். நாங்கள் வேண்டுமென்றே எந்தவொரு வீரரையும் அணியில் இருந்து நீக்கமாட்டோம். எமக்கு வீரர்களை விட அணிதான் முக்கியம். அதிலும் அணியின் கலாச்சாரத்தையும், ஒழுக்கத்தையும் பாதுகாப்பதே எமது குறிக்கோளாகும்.

எனவே நாம் மாலிங்கவை ஒருபோதும் ஒதுக்கவில்லை. உண்மையில் அவர் உலகத்தரம் வாய்ந்த அனுபவமிக்க வீரர். கடந்த காலங்களில் அவரால் பெற்றுக்கொண்ட அடைவுமட்டங்கள் மற்றும் சாதனைகளை மீண்டும் நிரூபித்துக் காட்ட வேண்டும். அதிலும் குறிப்பாக பந்துவீச்சில் மாத்திரமல்லாது களத்தடுப்பிலும் தனது உடற்தகுதியை அவர் நிரூபிக்க வேண்டும்.

தனஞ்சயவின் மிரட்டும் பந்துவீச்சால் இலங்கைக்கு இமாலய வெற்றி

எனவே இம்மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ள உள்ளுர் டி-20 போட்டிகளில் மீண்டும் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான அரிய வாய்ப்பொன்று அவருக்கு கிடைத்துள்ளது. அதில் அவர் திறமையை வெளிப்படுத்தினால் எமது உலகக் கிண்ண திட்டத்துக்குள் உடனடியாக உள்ளீர்க்கப்படுவார்” என அவர் தெரிவித்தார்.

முன்னதாக, இலங்கையின் 70 ஆண்டு சுதந்திர தின நிறைவையொட்டி ஏற்பாடு செய்யப்பட்ட இலங்கை, இந்தியா, பங்களாதேஷ் ஆகிய மூன்று நாடுகள் பங்குபற்றிய சுதந்திரக் கிண்ணத் முத்தரப்பு டி-20 தொடருக்கு முன்னதாக இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலும் இதே மாதிரியான கருத்தொன்றை ஹத்துருசிங்க முன்வைத்திருந்தார்.

சுமார் 5 மாதங்களுக்கு முன் இடம்பெற்ற இதே மாதிரியான ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டிருந்த ஹத்துருசிங்க, உண்மையில் தற்போது நடைபெற்றுவருகின்ற உள்ளுர் டி-20 போட்டிகளில் விளையாடி வருகின்ற மாலிங்க, திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றார். மாலிங்க தொடர்பில் தெரிவுக்குழு உறுப்பினர்கள் தெரிவித்த கருத்துக்களை இந்த இடத்தில் கூறுவது பொருத்தமில்லை. எனினும், நிச்சயம் மாலிங்கவுக்கு எதிர்வரும் காலங்களில் இலங்கை அணியில் வாய்ப்பு கிடைக்கும் என்பதை மாத்திரம் என்னால் தற்போது கூறமுடியும் என அவர் தெரிவித்திருந்தார்.

எனினும், அதே காலப்பகுதியில் நடைபெற்ற உள்ளுர் கழக அணிகளுக்கிடையிலான டி-20 போட்டிகளில் மாலிங்க சிறப்பாக விளையாடியிருந்ததுடன், தனது வழமையான விளையாட்டுக்கு திரும்பி அதிக விக்கெட்டுக்களைக் கைப்பற்றிய வீரராகவும் இடம்பிடித்தார்.

அதுமாத்திரமின்றி, அண்மையில் நிறைவுக்கு வந்த கனடா குளோபல் டி-20 போட்டித் தொடரிலும் பங்கேற்றிருந்த லசித் மாலிங்க, 13 விக்கெட்டுக்களைக் கைப்பற்றி, அதிக விக்கெட்டுக்களை வீழ்த்திய வீரர்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தையும் பெற்றுக்கொண்டார்.

இந்த நிலையில், கடந்த வருடம் இந்திய அணிக்கெதிராக இடம்பெற்ற டி-20 போட்டிக்குப் பிறகு எந்தவொரு கிரிக்கெட் தொடர்களிலும் இலங்கை அணிக்காக விளையாடும் வாய்ப்பை பெற்றுக்கொள்ள முடியாமல் போன மாலிங்கவுக்கு, தற்போது நடைபெற்று வருகின்ற தென்னாபிரிக்க அணியுடனான ஒற்றை டி-20 போட்டியிலாவது இலங்கை அணியில் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும், இறுதியில் அதுவும் ஏமாற்றத்தையே கொடுத்தது

திறமைக்கு வயதென்பது தடையல்ல என்பதை தொடர்ந்து நிரூபித்து வருகின்ற 34 வயதான மாலிங்கவை கிரஹம் லெப்ரோய் தலைமையிலான தேர்வுக் குழுவினர் ஏன் தொடர்ந்து புறக்கணித்து வருவதற்கான காரணம் என்ன என்பது புரியாத புதிராகவே உள்ளது. அதிலும் குறிப்பாக, மாலிங்கவை அணிக்குள் கொண்டு வருவதை தடுப்பதற்கு யார் இடையூறாக இருக்கின்றனர். இதற்கு இலங்கை கிரிக்கெட்டின் முன்னாள் நிர்வாகமா? அல்லது அரசியல் தலையீடுகளா? காரணம் என்பதும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

அசேலவின் சகலதுறை ஆட்டத்தால் ஒரு நாள் தொடரைக் கைப்பற்றிய இலங்கைத்தரப்பு

எது எவ்வாறாயினும், 2015 உலகக் கிண்ணத்திற்குப் பிறகு தொடர் தோல்விகளால் பின்னடைவை சந்தித்து வந்த இலங்கை அணியை மீண்டும் பொறுப்பேற்று படிப்படியாக முன்னேற்றப் பாதையில் கொண்டு சென்று கொண்டிருக்கின்ற பயிற்றுவிப்பாளர் சந்திக்க ஹத்துருசிங்கவின் இந்த அறிவிப்பானது அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் அல்லது எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள இங்கிலாந்துடனான போட்டித் தொடரில் இலங்கை அணியில் மாலிங்கவுக்கான வாய்ப்பை பெற்றுக்கொடுக்குமா என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<