இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அஞ்செலோ மெதிவ்ஸ், எதிர்வரும் 2019 உலகக் கிண்ணப் போட்டிகள் வரை மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்களைக் கொண்ட போட்டிகளுக்கான இலங்கை அணியின் தலைவராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
அண்மைக்காலமாக ஒரு நாள் மற்றும் T-20 போட்டிகளில் தொடர் தோல்விகளை சந்தித்து வருகின்ற இலங்கை அணிக்கு புதிய அணித் தலைவர் நியமிக்கப்படுவார் எனவும், அப்பதவிக்கு அஞ்செலோ மெதிவ்ஸ், தினேஷ் சந்திமால் ஆகியோரின் பெயர்களை இலங்கை அணியின் புதிய பயிற்றுவிப்பாளரான சந்திக ஹத்துருசிங்கவினால் தெரிவுக் குழுவுக்கு பரிந்துரைத்துள்ளதாகவும் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் கடந்த சில தினங்களுக்கு முன் அறிவித்திருந்தது.
முத்தரப்பு ஒரு நாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு
இதன்படி, 6 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் இலங்கை ஒரு நாள் அணியின் தலைவராக..
இதன்படி, பங்களாதேஷில் அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ள முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் தொடருக்கான இலங்கை குழாம் மற்றும் குறித்த தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை அணியின் புதிய தலைவர் யார் என்பது தொடர்பிலும் ஊடகங்களை தெளிவுபடுத்தும் விசேட செய்தியாளர் மாநாடு கொழும்பிலுள்ள இலங்கை கிரிக்கெட் தலைமையகத்தில் நேற்று (09) நடைபெற்றது.
இதன்போது, 2019 உலகக் கிண்ணப் போட்டிகள் வரை மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகளுக்கான இலங்கை அணித் தலைவரான அஞ்செலோ மெதிவ்ஸ் மீண்டும் நியமிக்கப்பட்டார்.
இலங்கை அணியின் புதிய பயிற்றுவிப்பாளரான சந்திக ஹத்துருசிங்கவின் வேண்டுகோள் மற்றும் ஊக்குவிப்பு காரணமாகவே மீண்டும் அணித்தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டதாக குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் அஞ்செலோ மெதிவ்ஸ் கருத்து வெளியிட்டார்.
அவர் அங்கு மேலும் கருத்து வெளியிடுகையில், ”2019 உலகக் கிண்ணத்தை கருத்திற்கொண்டு புதிய தலைவருக்கு வாய்ப்பளிக்கும் நோக்கில் நான் தலைவர் பதவியிலிருந்து இராஜினாமா செய்தேன். நான் பதவி விலகும் போது மீண்டும் அணித் தலைமையை ஏற்பேன் என்று நினைக்கவில்லை. ஆனால் இந்திய தொடரின் பிறகு கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர், புதிய பயிற்றுவிப்பாளர் சந்திக ஹத்துருசிங்க மற்றும் தெரிவுக் குழுவினர் மீண்டும் அணித் தலைமையை ஏற்றுக் கொள்ளுமாறு என்னிடம் பேசினர். இதுதொடர்பாக தீர்மானம் எடுப்பதற்கு நான் சில காலம் எடுத்துக் கொண்டேன். இறுதியில் நாட்டிற்காகவும், அணியின் நன்மை கருதியும் அணித் தலைமையை மீண்டும் ஏற்க முடிவு செய்தேன்.
இந்த நாட்டின் கிரிக்கெட்டுக்காக நான் பல விடயங்களை கொடுத்துள்ளேன். எனவே இவ்வாறான இக்கட்டான சூழ்நிலையிலும் தலைமைப் பதவியை ஏற்காவிட்டால் இலங்கை கிரிக்கெட்டுக்கு செய்கின்ற மிகப் பெரிய அசாதாரணமாக அமைந்துவிடும். இன்னும் 18 மாதங்களில் நாம் உலகக் கிண்ணத்துக்கு முகங்கொடுக்கவுள்ளோம். அண்மைக்காலமாக பல்வேறு காரணங்களால் அணியின் நிலைப்பாட்டை உறுதியாக வைத்துக் கொள்ள முடியாமல் போனது. அதிலும் குறிப்பாக புதிய தலைமைத்துவத்தின் கீழ் அணியை வெற்றிப் பாதையில் கொண்டு செல்ல முயற்சி செய்தோம். அவர்களும் தம்மால் முடிந்தவற்றை செய்திருந்தார்கள்.
இளையோர் உலகக் கிண்ண பயிற்சிப் போட்டியில் இலங்கைக்கு முதல் தோல்வி
பத்தொன்பது வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்..
ஆனாலும் 2019 உலகக் கிண்ணத்துக்கு உறுதியான அணியொன்றை கட்டியெழுப்ப வேண்டியுள்ளது. அதுமாத்திரமின்றி, இலங்கை அணியின் புதிய பயிற்றுவிப்பாளர் சந்திக ஹத்துருசிங்க எவ்வாறு செயற்படுவார் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். அவருடன் பணியாற்றுவது மிகவும் இலகுவானது. சுமார் 12 வருடங்களுக்கு முன்னர் இலங்கை ஏ அணியில் நான் விளையாடிய போது அவர் பயிற்சியாளராக செயற்பட்டிருந்தார்.
அதேபோல இலங்கை தேசிய அணியின் நிழல் பயிற்சியாளராக இருந்த காலத்திலும், நான் அவரிடம் பயிற்சிகளைப் பெற்றேன். எனவே அணியின் நன்மைக்காக நாம் இருவரும் ஒரே நிலைப்பாட்டில் உள்ளதுடன், அணியின் வெற்றிக்காக எம்மால் முடிந்தவற்றைப் பெற்றுக்கொடுக்கவும் எதிர்பார்த்துள்ளோம். ஆனாலும் எமது மீள் வருகையானது சிலருக்கு பிடித்திருந்தாலும், ஒரு சிலர் அதை ஏற்க மறுப்பார்கள். அதற்கு எம்மால் ஒன்றும் செய்ய முடியாது” எனவும் மெதிவ்ஸ் தெரிவித்தார்.
கடந்த 2013ஆம் ஆண்டு இலங்கை அணியின் இளம் தலைவராக நியமிக்கப்பட்ட மெதிவ்ஸ், 98 ஒரு நாள் போட்டிகளில் இலங்கை அணியை வழிநடத்தி 47 போட்டிகளில் வெற்றியைப் பெற்றுக்கொடுத்திருந்தார்.
எனினும், ஜிம்பாப்வேயுடனான ஒரு நாள் தொடரை 2-3 என்ற கணக்கில் இலங்கை தோற்றதை அடுத்து மெதிவ்ஸ் கடந்த ஜூலை மாதம் மூன்று வகை கிரிக்கெட்டிற்கான தலைமைப் பதவியில் இருந்தும் இராஜினாமா செய்தார்.
ஆஷஸ் தொடரை முழுமையாக வென்ற அவுஸ்திரேலியா
2017/2018 பருவகாலத்திற்கான ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட்…
இதனையடுத்து இலங்கை ஒரு நாள் அணிக்கு உபுல் தரங்க, சாமர கபுகெதர, லசித் மாலிங்க மற்றும் திசர பெரேரா ஆகியோரை தலைவராக நியமிப்பதற்கு தெரிவுக் குழுவினர் நடவடிக்கை எடுத்திருந்த போதிலும், அது வெற்றியளிக்கவில்லை.
இது இவ்வாறிருக்க உபாதை காரணமாக ஓய்வு பெற்று வந்த மெதிவ்ஸ், கடந்த வருட இறுதியில் இந்தியாவுக்கு எதிராக நடைபெற்ற இருவகை சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் தொடர்களில் மீண்டும் களமிறங்கியிருந்தார்.
மூன்று சர்வதேச ஒரு நாள் போட்டிகளிலும் திறமையை வெளிப்படுத்திய அவர் ஆரம்ப பந்துவீச்சாளராகவும் சிறப்பாக செயற்பட்டார். தொடர்ந்து இரண்டாவது சர்வதேச T-20 போட்டியின்போது சிறப்பாக பந்துவீசிக்கொண்டிருக்கையில் மீண்டும் உபாதைக்குள்ளானார்.
இந்நிலையில், பங்களாதேஷில் நடைபெறவுள்ள முத்தரப்பு ஒரு நாள் தொடரில் மெதிவ்ஸ் பங்குபற்றுவது தொடர்பில் சந்தேகம் நிலவியது. எனினும் நேற்றுமுன்தினம் (07) நடைபெற்ற உடற்தகுதி தேர்வில் முன்னேறியதை அடுத்தே மெதிவ்ஸுக்கு மீண்டும் தலைமைப் பதவியை வழங்குவதற்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் நடவடிக்கை எடுத்திருந்தது.