இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளராக ஹத்துருசிங்க இம்மாதம் நியமனம்

914

இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய தலைமைப் பயிற்றுவிப்பாளராக, முன்னாள் டெஸ்ட் வீரரான சந்திக ஹத்துருசிங்க இம்மாதம் 20ஆம் திகதி தனது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இன்று(08) உத்தியோகபூர்வமாக அறிவித்தது.

இதன்படி ஜனவரி மாதம் முதல் எதிர்வரும் 2020ஆம் ஆண்டு வரையான 4 வருடங்களுக்கு ஹத்துருசிங்க இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளராகச் செயற்படவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை வந்தடைந்த ஹத்துருசிங்கவுக்கு விரைவில் நியமனம்!

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக, இலங்கை அணியின் முன்னாள் வீரர் சந்திக…

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான பயிற்றுவிப்பாளராகச் செயற்பட்டுவந்த ஹத்துருசிங்க, 2019ஆம் ஆண்டு வரை அவ்வணியுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை அந்நாட்டு கிரிக்கெட் சபையுடன் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக இடைநடுவே முறித்துக்கொண்டார். இதனையடுத்து கடந்த ஒக்டோபர் மாதம் அவ்வணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து விலகுவதாக அவர் அதிரடியாக அறிவித்தார்.

இந்நிலையில், சம்பியன் கிண்ண தோல்வியின் பிறகு இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளராகக் கடமையாற்றிய கிரஹம் போர்ட் திடீரென பதவி விலகினார். இதனையடுத்து வெற்றிடமாக இருந்த இலங்கை அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் பதவிக்கு ஹத்துருசிங்கவை நியமிப்பதற்கான பேச்சுவார்த்தைகளை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் மேற்கொண்டுவந்தன.

இதன்படி, அவுஸ்திரேலியாவில் வசித்து வருகின்ற ஹத்துருசிங்க, கடந்த மாதம் 21ஆம் திகதி இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் அதிகாரிகளைச் சந்திப்பதற்காக, கொழும்புக்கு வருகை தந்திருந்ததுடன், அன்றைய தினம் இரவு இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் இடம்பெற்ற விசேட பேச்சுவார்த்தையொன்றிலும் கலந்துகொண்டார்.

சுமார் 3 மணித்தியாலங்கள் இடம்பெற்ற குறித்த பேச்சுவார்த்தையில் இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் திலங்க சுமதிபால, உப தலைவர் மதிவானன் மற்றும் இலங்கை கிரிக்கெட்டின் நிறைவேற்றுக்குழு அதிகாரி ஏஷ்லி டி சில்வா உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்துகொண்டிருந்தனர். அதன்போது ஹத்துருசிங்கவின் நியமனம் குறித்த இறுதி தீர்மானங்களும் எடுக்கப்பட்டன.

ஒரு நாள் அணியில் இடம்பெறுவதற்கு போராடும் சந்திமாலின் எதிர்பார்ப்பு

இதில் இலங்கை அணி சார்பாக அதிக ஓட்டங்களைப் பெற்ற வீரராக அணித்தலைவர் தினேஷ் சந்திமால்…

எவ்வாறாயினும், பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து ஹத்துருசிங்கவை அந்நாட்டு கிரிக்கெட் சபை விடுவிக்கவில்லை. இதன்படி, தொடர்ந்து இழுபறி நிலையில் காணப்பட்ட குறித்த விடயம் தொடர்பில் எழுந்துள்ள சட்ட சிக்கல்களை உடனடியாக நிவர்த்தி செய்து தருமாறு இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவரிடம் ஹத்துருசிங்க கோரிக்கை விடுத்திருந்தார்.   

இந்நிலையில் இலங்கை அணியுடன் ஹதுருசிங்கவை இணைத்துக்கொள்ள, கிரிக்கெட் சபை தலைவர் திலங்க சுமதிபால பங்களாதேஷ் கிரிக்கெட் சபைக்கு கடிதமொன்றையும் எழுதி, ஹதுருசிங்கவை அணியிலிருந்து விடுவிக்குமாறு குறிப்பிட்டிருந்தார். இதன்படி, ஹத்துருசிங்கவை தமது பயிற்சியாளர் பதவியிலிருந்து விடுவிப்பதாக பங்களாதேஷ் கிரிக்கெட் சபை கடந்தவாரம் அறிவித்தது. இதற்கமைய ஹத்துருசிங்க பங்களாதேஷ் அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து முழுமையாக வெளியேறினார்.

இதனையடுத்து, இலங்கை கிரிக்கெட் நிறைவேற்றுக் குழுவினர் ஹத்துருசிங்கவின் நியமனம் தொடர்பிலான இறுதி தீர்மானத்தை எடுப்பதற்கு கடந்த 6ஆம் திகதி ஒன்றுகூடி பேச்சுவார்த்தை நடத்தியிருந்ததுடன், அதற்கான அனுமதியையும் வழங்கியது. இதன்படி, எதிர்வரும் 18ஆம் திகதி இலங்கை வரவுள்ள ஹத்துருசிங்க, இலங்கை கிரிக்கெட் சபையுடன் எதிர்கால திட்டங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். அதனைத்தொடர்ந்து 20ஆம் திகதி தனது கடமைகளை பொறுப்பேற்கவுள்ள அவர், குறித்த தினம் நடைபெறுகின்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டிலும் கலந்துகொள்ளவுள்ளார்.

இந்நிலையில், ஹத்துருசிங்க தலைமைப் பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்ட பிறகு, தற்போது இடைக்காலப் பயிற்சியாளராகக் கடமையாற்றி வருகின்ற நிக் போதாஸ், மீண்டும் களத்தடுப்பு பயிற்றுவிப்பாளரகச் செயற்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, கடந்த 7 வருடங்களில் 10 பேர் இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளராக செயற்பட்டுள்ளதுடன், ஹத்துருசிங்கவும் இணைந்துகொண்டால் அவர் குறித்த காலத்தில் இணையும் இலங்கை அணியின் 11ஆவது பயிற்சியாளராக பொறுப்பேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

உடற்பயிற்சியும், உபாதையும் விளையாட்டில் எவ்வாறு தாக்கம் செலுத்தும்?

அண்மைக்காலமாக இலங்கை கிரிக்கெட் அணி மிக மோசமான சரிவுப் பாதையில் பயணிக்கின்றமை ..

இலங்கை அணிக்காக 26 டெஸ்ட் போட்டிகளிலும், 35 ஒரு நாள் போட்டிகளிலும் விளையாடியுள்ள 49 வயதான ஹத்துருசிங்க, 2010ஆம் ஆண்டு இலங்கை அணியின் உதவிப் பயிற்றுவிப்பாளராகவும், அதனைத்தொடர்ந்து அவுஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் அணியின் பயிற்றுவிப்பாளராகவும் கடமையாற்றினார்.

அதன்பிறகு 2014ஆம் ஆண்டு பங்களாதேஷ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக பொறுப்பேற்ற அவர், அவ்வணியை 2015 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் காலிறுதி வரையும், 2017 சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகளில் அரையிறுதி வரையும் கொண்டு சென்றார். அத்துடன், பங்களாதேஷ் தனது சொந்த மண்ணில் நடைபெற்ற இருதரப்பு சர்வதேச ஒருநாள் தொடர்களில் இந்தியா, பாகிஸ்தான், தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளை வெற்றிகொண்டது.

அது மட்டுமல்லாமல் டெஸ்ட் அரங்கில் இங்கிலாந்து, அவுஸ்திரேலியா ஆகிய அணிகளை தனது சொந்த மண்ணில் வெற்றி கொண்டு வரலாறு படைத்த பங்களாதேஷ், அந்நிய மண்ணில் இலங்கையை வெற்றி கொண்ட பெருமையையும் பெற்றுக்கொண்டது. எவ்வாறாயினும் தென்னாபிரிக்காவுக்கான அண்மைய கிரிக்கெட் விஜயத்தில் மூவகைத் தொடர்களிலும் பங்களாதேஷுக்கு தோல்விகளே மிஞ்சின. இதன் பின்னணியில் ஹத்துருசிங்க இராஜினாமா செய்திருந்தார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

உலகின் அதிகளவு சம்பளத்தைப் (6 மில்லியன்) பெற்றுக்கொள்ளும் பயிற்சியாளர்களில் 4ஆவது இடத்தில் இருந்த ஹத்துருசிங்க, இலங்கை கிரிக்கெட்டின் எதிர்காலத்திற்காக அனைத்தையும் தியாகம் செய்துவிட்டு குறித்த தொகை சம்பளத்தைவிட குறைந்தளவு ஒப்பந்த அடிப்படையில் நாட்டிற்காக மீண்டும் தனது சேவையை வழங்கவுள்ளார்.

எனவே, அண்மைக்காலமாக பல தோல்விகளை சந்தித்து வருகின்ற இளம் வீரர்களைக் கொண்ட இலங்கை அணிக்கு ஹத்துருசிங்கவின் மீள்வருகையானது மிகப் பெரிய மாற்றத்தைக் கொடுக்கும் என கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

எனவே, தொடர்ந்து புதிய மாற்றங்களை மேற்கொண்டு வருகின்ற இலங்கை அணி முத்தரப்பு ஒருநாள் தொடர், 2 டெஸ்ட் போட்டிகள் மற்றும் ஒற்றை T-20 போட்டி என்பவற்றில் விளையாடுவதற்கு எதிர்வரும் ஜனவரி மாதம் முற்பகுதியில் ஹத்துருசிங்கவின் பயிற்றுவிப்பின் கீழ் பங்களாதேஷுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.