தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ஹஷிம் அம்லா, அனைத்துவகை கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்கா அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராக வலம்வந்த ஹஷிம் அம்லா, கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக் கிண்ணத்திற்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றார்.
அதனைத் தொடர்ந்து, இங்கிலாந்தில் சர்ரே கவுண்டி கழகத்தில் இணைந்து கொண்டார். இதில் கடந்த 2022ஆம் ஆண்டு சர்ரே கழகத்துக்கு கவுண்டி சம்பியன்ஷிப்பை வென்று கொடுப்பதில் அவர் முக்கிய பங்கு வகித்தார்.
இதனிடையே, ஹஷிம் அம்லா அனைத்துவகை கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக சர்ரே கவுண்டி கிரிக்கெட் கழகத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் நேற்று (18) உறுதிப்படுத்தியுள்ளது.
- சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ஹஷிம் அம்லா
- இங்கிலாந்து தொடருக்கான தென்னாபிரிக்க குழாம் அறிவிப்பு
- விபத்தின் பின்னர் ரிஷாப் பாண்ட் வெளியிட்ட முதல் அறிக்கை
இதுகுறித்து சர்ரே கவுண்டி கழகம் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ஹஷிம் அம்லா அனைத்துவகை கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். தென்னாப்பிரிக்கா அணியின் நட்சத்திர வீரர் தனது விளையாட்டு வாழ்க்கையை முடித்துக்கொண்டார். அனைவரின் சார்பில், எல்லாவற்றிற்கு நன்றி ஹாஷ்’ என்று பதிவிட்டு இருந்தது.
இந்த நிலையில், தனது ஓய்வு குறித்து ஹஷிம் அம்லா கருத்து தெரிவிக்கையில், ‘ஓவல் மைதானத்தை பற்றி எனக்கு சிறந்த நினைவுகள் நிறைய இருக்கின்றன. இறுதியாக அதை ஒரு வீரராக விட்டுச் செல்வது ஒரு விதத்தில் கவலை அளித்தாலும், அதில் விளையாட கிடைத்தமை பெருமையளிக்கிறது. சர்ரே கவுண்டி கழகத்தின் இயக்குனர் அலெக் ஸ்டூவர்ட் மற்றும் ஒட்டுமொத்த சர்ரே ஊழியர்கள், வீரர்கள் மற்றும் உறுப்பினர்களின் ஆதரவுக்கு நன்றி. சர்ரே என்னும் கப்பலில் பல சர்வதேச வீரருடன் இணைந்து விளையாடியதே மரியாதைக்குரிய உணர்வாக இருக்கிறது. அவர்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள் மற்றும் இன்னும் பல சம்பியன் பட்டங்களை வெல்ல வாழ்த்துகிறேன்’ என தெரிவித்துள்ளார்.
39 வயது வலது கை துடுப்பாட்ட வீரரான ஹஷிம் அம்லா தென்னாப்பிரிக்கா அணிக்காக 124 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 9282 ஓட்டங்களைக் குவித்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் அவரது துடுப்பாட்ட சராசரி 46.4 ஆகும்.
2005இல் இந்திய அணிக்கு எதிராக டெஸ்ட் அறிமுகத்தைப் பெற்றுக் கொண்ட ஹஷிம் அம்லா, 2019 பெப்ரவரி மாதம் இலங்கைக்கு எதிராக தனது கடைசி டெஸ்டில் விளையாடினார்.
டெஸ்ட் போட்டிகளில் தென்னாப்பிரிக்கா அணிக்காக முச்சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றுக் கொண்டுள்ள அம்லா, ஜெக் காலிஸுக்கு (13,206) அடுத்து தென்னாப்பிரிக்கா அணிக்காக அதிக ஓட்டங்கள் குவித்த இரண்டாவது வீரராக இடம்பிடித்துள்ளார்.
அதேபோல, தென்னாப்பிரிக்காவுக்காக 181 ஒருநாள் போட்டிகளில் ஆடி 49.46 சராசரியில் 8,113 ஓட்டங்களைக் குவித்துள்ளார். இதில் 27 சதங்களும் 39 அரை சதங்களும் அடங்கும். ஜெக் காலிஸ் (11,550) மற்றும் ஏபி டி வில்லியர்ஸ் (9,427) ஆகியோருக்குப் பிறகு தென்னாப்பிரிக்காவுக்காக ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்கள் குவித்த மூன்றாவது வீரர் ஆவார். அத்துடன் அதிக சதம் அடித்த வீரர்களில் அம்லா முதலிடத்தில் உள்ளார். மேலும், அவர் 44 T20i போட்டிகளில் 33.60 சராசரியில் 1,277 ஓட்டங்களைக் குவித்துள்ளார். இதில் எட்டு அரைச் சதங்களும் அடங்கும்.
இதேவேளை, ஹஷிம் அம்லா அனைத்துவகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றாலும், ஒரு பயிற்சியாளராக தொடர்ந்து பணியாற்ற விரும்புவதாக தெரிவித்தார். இதன்படி, தென்னாப்பிரிக்காவில் தற்போது நடைபெற்று வருகின்ற SA20 லீக்கில் MI கேப் டவுன் அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளராக பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<