நியூசிலாந்தை நிலைகுலைய வைக்கும் ஹஷானின் திட்டம்

801

பங்களாதேஷ் ஆடவர் அணியின் திறமைகள் மற்றும் பெறுபேறுகளை அந்நாட்டு மகளிர் கிரிக்கெட் அணியிடமும் எதிர்பார்ப்பது நியாயமற்றது என பங்களாதேஷ் மகளிர் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக கடந்த 3ஆம் திகதி பொறுப்பேற்றுக் கொண்ட முன்னாள் இலங்கை வீரர் ஹஷான் திலகரட்ன தெரிவித்துள்ளார்.

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக பணியாற்றிய ஹஷான் திலகரட்ன, அண்மையில் நிறைவுக்கு வந்த மகளிருக்கான ஆசியக் கிண்ணத் தொடருடன் தனது பதவியை இராஜினாமாச் செய்தார். இதனையடுத்து அவர் பங்களாதேஷ் மகளிர் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியை பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்த நிலையில், பங்களாதேஷ் மகளிர் கிரிக்கெட் அணி அடுத்த மாதம் நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் T20i தொடர்களில் விளையாடவுள்ளது.

இதனிடையே, பங்களாதேஷ் மகளிர் அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டமை மற்றும் நியூசிலாந்து சுற்றுப்பயணம் தொடர்பில் ஊடகங்களுக்கு அவர் கருத்து தெரிவிக்கையில்,

“இது மிகவும் சவாலான பணியாக இருந்தாலும் அதை நான் மிகவும் மகிழ்ச்சியோடு செய்கிறேன். குறிப்பாக மகளிர் கிரிக்கெட் ஆடவர் கிரிக்கெட்டைக் காட்டிலும் சற்று வித்தியாசமானது. எனவே நீங்கள் அவர்களுடன் பொறுமையாக செயல்பட்டு அவர்களது திறமைகளை வளர்த்துக் கொள்ள உதவ வேண்டும்.

அவர்களின் திறமை மற்றும் மனநிலையைப் புரிந்து கொள்ள வேண்டும். அப்படி செய்ய முடிந்தால், நீங்கள் அவர்களுடன் சிறந்த முறையில் பணியாற்றலாம். நான் அவர்களுடன் பயிற்சியாளராக மட்டுமல்லாமல், பெற்றோராகவும், சகோதரனாகவும், நண்பராகவும் பணியாற்றுவேன்.

நீங்கள் எப்போதும் அவர்களுடன் இருக்க வேண்டும், அவர்களிடம் பேச வேண்டும், அவர்களுக்கு தேவையான நம்பிக்கையை கொடுக்க வேண்டும். பின்னர் அனைத்தும் சரியான இடத்திற்கு வந்தடையும்.

ஆம், எதிர்பார்ப்புகள் உள்ளன. முடிவுகளை நாங்கள் எப்போதும் கண்காணித்து வருகிறோம். நாங்கள் மகளிர் அணியை ஆடவர் கிரிக்கெட் அணியுடன் ஒப்பிட முயற்சிக்கிறோம். இது நியாயமற்றது. நாம் அவர்களிடம் பேச வேண்டும். அவர்களிடம் உள்ள அழுத்தத்தை நாங்கள் நன்கு அறிவோம், எனவே நாங்கள் அவர்களுடன் பொறுமையாக பணியாற்ற வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், நியூசிலாந்து மகளிர் அணியை அவர்களது சொந்த நாட்டில் தோற்கடிக்கும் திறமை பங்களாதேஷ் மகளிர் அணிக்கு இருப்பதாக ஹஷான் நம்பிக்கை வெளியிட்டார்.

“நியூசிலாந்து தொடருக்கான ஆயத்தம் மிகவும் நன்றாக உள்ளது. கடந்த இரண்டு நாட்களாக நாங்கள் தொழில்நுட்ப மற்றும் தந்திரோபாய சிக்கல்களில் உள்ளக வலைப் பயிற்சிகளை மேற்கொண்டோம். அடுத்து மைதானத்தில் பயிற்சிகளை முன்னெடுக்கவுள்ளோம். எங்களுடைய திறமைக்கு ஏற்றவாறு விளையாடினால் நியூசிலாந்தை வீழ்த்திவிட முடியும் என்று நான் நம்புகிறேன். எமது வீராங்கனைகள் மிகுந்த ஆர்வத்துடனும் அர்ப்பணிப்புடனும் விளையாடி வருகின்றனர். இப்படியே தொடர முடிந்தால், நிச்சயம் வெற்றி பெற முடியும்.

நாங்கள் தற்போது பல்வேறு அம்சங்களைப் பற்றி விவாதித்து வருகிறோம், மேலும் நியூசிலாந்து ஆடுகளங்கள் எவ்வளவு கடினம் என்பதை நாங்கள் அறிவோம். ஆனால் அவர்கள் வரவிருக்கும் சவால்களை உணர்ந்து அவற்றை எதிர்கொள்ள தயாராக உள்ளனர். குறிப்பாக, நியூசிலாந்தின் நிலைமைக்கு அவர்களால் அனுசரித்துச் செல்ல முடிந்தால், அந்த அணிக்கு மிகப் பெரிய அதிர்ச்சியைக் கொடுக்க முடியும் என்று நான் நம்புகிறேன்.

எமது அணியின் பந்துவீச்சு மற்றும் களத்தடுப்பு மிகவும் நன்றாக உள்ளது. நாங்கள் எங்கள் துடுப்பாட்டத்தை மேம்படுத்த வேண்டும். நான் அதை செய்து கொண்டு இருக்கிறேன். அவர்கள் புத்திசாலி மற்றும் திறமையானவர்கள். அவர்களின் தாக்குதல் ஆட்டத்தை மேம்படுத்த வேண்டும். மேலும், மைதானத்தில் உள்ள இடைவெளிகளைப் பார்த்து பந்தை அடிக்கவும், ஓட்டங்களைப் பெறவும், முடிந்தவரை ஓட்டமற்ற பந்துகளின் எண்ணிக்கையைக் குறைக்கவும் பழகிக் கொள்ள வேண்டும். எமது வீராங்கனைகள் மிகுந்த ஆர்வத்துடனும் அர்ப்பணிப்புடனும் படிக்கிறார்கள். அவர்களால் இப்படியே தொடர முடிந்தால், அவர்களால் போட்டிகளில் வெற்றி பெற முடியும்” என்றார்.

சுற்றுலா பங்களாதேஷ் மகளிர் அணிக்கும், நியூசிலாந்து மகளிர் அணிக்கும் இடையிலான ஒருநாள் மற்றும் T20i தொடர் அடுத்த மாதம் 2ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இதற்காக பங்காளதேஷ் மகளிர் அணி நவம்பர் 24 ஆம் திகதி நியூசிலாந்துக்கு புறப்படும் என்று cricbuzz இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<